No menu items!

தயிரை தஹினு இந்தில சொல்லுங்க! – புது வடிவ இந்தி திணிப்பு

தயிரை தஹினு இந்தில சொல்லுங்க! – புது வடிவ இந்தி திணிப்பு

மத்திய உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான (FSSAI – Food Safety and Standards Authority of India) தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் இந்த சங்கங்கள் மூலம் விற்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்று இந்தியில் எழுதியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியில் தஹி என்றால் தயிர் என்று அர்த்தம்.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் தயிர் உறைகளில் தயிர் என்று தமிழில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தினால் நம்ம ஊர் தயிர் உறைகளிலும் தஹி என்று இந்தியில் எழுத வேண்டும்.

மத்திய அரசின் இந்த கடிதத்துக்கு தமிழ்நாட்டிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்திருக்கின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’#இந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்’ என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தொட்டிலை ஆட்டும் முன் தொலைந்துவிடுவீர்கள் என்ற வரி கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
தஹி என்று ஆவின் விற்கும் தயிர் உறைகளில் எழுத முடியாது என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவித்திருக்கிறார்.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து இணையத்தில் தயிர் என்ற வார்த்தை அதன் எதுகை மோனை கிண்டல் வார்த்தைகளுடன் பரபரப்பானது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு வந்திருந்தபோது தமிழ் சமையல் முயன்று பார்த்தார். அப்போது பாத்திரத்தில் தயிரைக் கொட்டும் போது சத்தமாக தயிர் என்று அவர் சொன்னது இப்போது மீண்டும் வைரலானது.

வட இந்தியாவில் பிறந்து வளர்ந்த ராகுல் காந்தியே தமிழில் தயிர் என்று கூறுகிறார், நீங்கள் ஏன் அதை தஹி என்று கூறச் சொல்கிறீர்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

’தமிழ்நாட்டில் தயிர் என்பதை தஹி என்று தான் அழைக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல. தயிரை தாஹி என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்தத் தவறு அல்ல; திட்டமிடப்பட்ட இந்தித் திணிப்பு, இந்தி மொழியை தமிழர்களிடம் திணிப்பதில் இது ஒரு புதிய உத்தி என வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகிறேன். கடந்த நவம்பர் மாதம் திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த சேவை மையம் என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. அதை நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அகற்றப்பட்டது.

இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க நடுவண் அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாக இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலமாகவே இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்’ என்று அறிக்கை மூலம் இந்தி தயிருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

அரசியல் நிலைமை சூடாவதை உணர்ந்த தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, உடனே மத்திய உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையத்துக்கு இந்த உத்தரவை எதிர்த்து கடிதம் எழுதினார். அவருக்குத் தெரியும் இந்த இந்தி பஞ்சாயத்து பூதமாய் கிளம்பும் என்று.

தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பை பார்த்த மத்திய உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையம் இப்போது அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும் பிராந்திய மொழியிலும் உறைகளில் குறிப்பிடலாம் என்று கூறியிருக்கிறது.

இதை முன்பே செய்திருக்கலாமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...