கிரிக்கெட் வீரர்களில் 2 வகை இருக்கிறார்கள். ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆட வாய்ப்பு கிடைத்தாலும், அதைச் சரியாக பயன்படுத்தி தங்களுக்கான இடத்தை பிடிப்பவர்கள் முதல் வகை. எத்தனை வாய்ப்புகள் கிடைத்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டை விடுபவர்கள் மற்றொரு வகை. இதில் சஞ்சு சாம்சன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
சஞ்சு சாம்சன் மட்டுமல்ல, அந்தக் காலத்தைச் சேர்ந்த சதானந்த் விஸ்வநாத், சடகோபன் ரமேஷ், டபிள்யூ.வி ராமன், வாசிம் ஜாபர் தொடங்கி இந்த காலத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், பிருத்வி ஷா என பலரை இந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி, இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்ததும் சொதப்புவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். சரி மற்றவர்கள் கதை எதற்கு?… நாம் சஞ்சு சாம்சனின் கதைக்கு வருவோம்.
இந்திய கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்திருப்பவர் சஞ்சு சாம்சன். அதற்கு ஒரு காரணம் அவரது மாநிலம். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலும், வேறு எந்த வீரரும் அம்மாநிலத்தில் இருந்து இந்திய அணியில் சேரும் ஆற்றலுடன் இல்லை என்பதாலும் மலையாளிகள் அவரை நேசிக்கிறார்கள். இரண்டாவது காரணம் ஐபிஎல். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஐபிஎல் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்கிறார். இதனால் அந்த அணியின் ரசிகர்களுக்கும் சஞ்சுவை அதிகம் பிடிக்கும்.
பொதுவாக ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் சஞ்சு சாம்சன், சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்போது சொதப்பி விடுகிறார். இதனாலேயே அவரை அணியில் சேர்க்க தேர்வாளர்கள் யோசிக்கிறார்கள். உடனே சஞ்சுவின் ரசிகர்கள் அவர் புறக்கணிக்கப்படுவதாக குரல் எழுப்புகிறார்கள். அதற்காகவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு வாழங்கப்பட அவர் மீண்டும் சொதப்புகிறார்.
இப்படித்தான் கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என்று அதிரடியான 3 விக்கெட் கீப்பர்கள் இருக்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியாவுக்காக ஆட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதுடன், ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆப்கான் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய தவறிவிட்டார் சஞ்சு சாம்சன். அதனால் 20 ஓவரிலேயே இந்தியா ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
ஆனால் அதிலும் சஞ்சு சொதப்பினார். முதல் சூப்பர் ஓவரில் தன்னிடம் வந்த பந்தை ரன்னர் திசைக்கு அவர் எறிய, அது பேட்ஸ்மேனின் காலில் பட்டு ஆப்கானிஸ்தானுக்கு 2 ரன்கள் போனஸாக கிடைத்தன. இதனால் முதல் சூப்பர் ஓவர் டை ஆனது. இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களம் இறக்கப்பட்டார் சஞ்சு. பெவிலியனில் விராட் கோலி, ஷிவம் துபே போன்ற அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கினார் ரோஹித் சர்மா. ஆனால் அப்போதும் அவர் அணிக்கு ஏமாற்றத்தையே தந்தார். இதனால் இந்திய அணி மிகக் குறைவாக 11 ரன்களையே இரண்டாவது சூப்பர் ஓவரில் பெற்றது. இந்தப் போட்டி இந்தியாவின் கையை விட்டு போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசியில் பிஷ்னாயின் 2 விக்கெட்கள் இந்தியா தோல்வியடையாமல் காத்தது.
இப்படி நேற்றைய ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முற்றிலுமாக தவறவிட்டிருக்கிறார் சஞ்சு சாம்சன். இதனால சமூக வலைதளங்களில் ரசிகர்களின் திட்டுகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே ரிஷப் பந்த் காயத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில், மற்ற 3 விக்கெட் கீப்பர்களும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால், இனி டி20 உலக்க் கோப்பையில் சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்.