No menu items!

கம்மி விலையில் தரமான நூல்கள்; மிஸ் பண்ணிடாதீங்க – புத்தகக் காட்சி அனுபவங்கள்

கம்மி விலையில் தரமான நூல்கள்; மிஸ் பண்ணிடாதீங்க – புத்தகக் காட்சி அனுபவங்கள்

அதிஷா


பபாஸி நடத்துகிற சென்னை புத்தகக் காட்சிக்கு பதினெட்டு ஆண்டுகளாக செல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா எவ்விதம் நடத்தப்படுகிறது என்பதை ஒவ்வொரு ஆண்டும் எழுதி பதிவு செய்திருக்கிறேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த காலம் தொடங்கி இப்போது ஒய்எம்சிஏ காலம் வரை நடந்த அத்தனையும் ஆவணமாக என் இணையதளத்திலும் பேஸ்புக் பக்கங்களிலும் கிடக்கின்றன. அதையெல்லாம் மீண்டும் படித்தால் எல்லா ஆண்டுகளிலும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான் அதில் காணக் கிடைக்கின்றன.

அந்த வகையில் இந்த புத்தகத் திருவிழாவை நாம் எதனோடாவது ஒப்பிட துணிந்தால் அதை நம்முடைய அழுக்குபிடித்த டாஸ்மாக்கு பார்களோடு மட்டும்தான் ஒப்பிட இயலும். ஏராளமான ஒற்றுமைகள் இரண்டுக்கும் உண்டு.

டாஸ்மாக் வருமானம் பல ஆயிரம் கோடி என்பார்கள். ஆனால், கடைகளையும் பார்களையும் பார்த்தால் பஞ்சப் பரதேசிகள் மடம் போலிருக்கும். புத்தகக் காட்சியும் ஆண்டுதோறும் ஐந்துகோடி பத்து கோடி அளவுக்கு வருமானம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், உள்ளே நுழைந்து பார்த்தால் அதே ப.ப மடம் போல்தான் இருக்கும்.

அரசு மானியம் கொடுக்கிறது. கடைகளின் மூலம் வருமானம் வருகிறது. உணவக ஏலம் இருக்கிறது. சுற்றிச்சுற்றி விளம்பர வருவாய் வருகிறது. இருந்தும் ஏனோ ஓட்டை டவுசர் ஏழை மாணவன்போலவேதான் விழா நடக்கும்! இந்த காசெல்லாம் என்னதான் ஆகிறது என்பது யாருக்கும் தெரியாது.

மேடு பள்ளங்கள் கொண்ட நிலவுவெளிப் பாதைகள், காற்றோட்டமே இல்லாமல் நெருநெருநெருக்கமா அமைக்கப்பட்ட கடைகள், அத்தாம் பெரிய சந்தையில் இளைப்பாறக்கூட ஒரு இடமிருக்காது. தண்ணீர் வசதி இருக்காது. வெயில் அதிகமாகிவிட்டால் எல்லாமே கருகிவிடும். மழை பெய்தால் புத்தகங்களை தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். இதோ இந்த ஆண்டு ஜீரோ டிகிரியும் யாவரும் பதிப்பகமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வசதியும் இருக்காது. சக்கர நாற்காலி உதவியோ ப்ரெய்லி நூல்களுக்கான பகுதியோ எதுவுமே இருக்காது. உதவி மையம் உருப்படியாக இருக்காது. குழந்தைகள் வயதானவர்களை அழைத்துக்கொண்டு போனால் சிரமத்துக்கு குறைவிருக்காது!

தரமான நல்ல சரக்கு கிடைக்காமல் தரமற்ற விஷம் டாஸ்மாக் பார்களில் எப்படி விற்கப்படுகிறதோ அதைப் போலவே… பு.காவில் தரமுள்ள நூல்களுக்கு கடைகள் கிடைக்காது, சாமியார்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் வினோத பொருட்களை மார்க்கெடிங் பண்ணுகிறவர்களுக்கும் ஏராளமான கடைகள் கொடுக்கப்படும். என்னென்னவோ விற்கப்படும். சென்ற ஆண்டுகூட கவிஞர் நரனுக்கு கடை கிடைக்காமல் ரோட்டில் போட்டு விற்றது நினைவிருக்கும்! அதே ஆண்டில் பத்துக்கும் அதிகமான சாமியார்களுக்கும் சிசிடிவி விற்பவர்களுக்கும் சோலார் பேனர் விற்பவர்களுக்கும் கடைகள் தரப்பட்டன. சில மூத்த பதிப்பாளர்கள் போலிப்பெயர்களில் அவர்களே பல கடைகள் பிடித்திருந்தனர். இதெல்லாம் ஆண்டுதோறும் நடப்பதுதான்!

பதினெட்டு ஆண்டுகளாக எத்தனையோ நிர்வாகம் மாறிவிட்டது. இருந்தும் ஏன் இவர்களால் உருப்படியான நல்ல கழிப்பறை வசதியைக் கூட அமைத்துக்கொடுக்க முடியவில்லை. 60+ ஆண்டுகளாக நடத்துகிற இவர்களால் ஏன் நிரந்தரமாக ஓர் இடத்தை கூட அமைத்துக்கொள்ள முடியவில்லை?

டாஸ்மாக் போலவே புத்தக காட்சியிலும் ஆண்டுதோறும் இந்த வசதிக்குறைபாடு அதிகமாகிக்கொண்டுதான் வருகிறது. ஆனாலும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இத்தனை வசதிக்குறைபாடு இருந்தபோதும் எப்படி இவர்களால் தொடர்ந்து இதை வெற்றிகரமாக நடத்தமுடிகிறது என்றால்… ஒரே காரணம்தான். எத்தனை மோசமாக நடத்தினாலும் கிடைக்கிற மக்களுடைய ஆதரவு. பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வேறு போக்கிடம் இல்லை!

அதனாலேயே உருவாகிற அலட்சியம். அதனாலேயே அடுத்த ஆண்டும் இது இப்படித்தான் நடக்கும். அதற்கு அடுத்த ஆண்டும் இது இப்படித்தான் நடக்கும்.

ஒருவேளை அரசே ஒரு கலை பண்பாட்டு மையத்தை உருவாக்கி இங்கே நடத்துங்கள் என்று அழைத்தாலும் பபாஸியார் போக மாட்டார்கள். அப்போதும் மழை பெய்தால் ஒழுகும் டென்டு கொட்டாயில்தான் படம் காட்டப்படும்!

சரி, இனி இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் கண்டது…

இந்த முறை நிறைய திராவிட நூல்கள் விற்கிற கடைகளை பார்க்க முடிந்தது, அப்படியே பெரியார் பற்றிய அம்பேத்கர் பற்றிய நூல்களும் அதிகம் விற்கின்றன. தமிழ் இந்து வெளியிட்டுள்ள ‘என்றும் தமிழர் தலைவர் பெரியார்’ நூல் எக்கச்சக்கமாக விற்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது,

சீர் வாசகர் வட்டம் சார்பில், ‘20ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்’ வெளியிட்டிருக்கிறார்கள். வீ. அரசு தொகுத்தது; நல்ல தரமான கெட்டி அட்டை பதிப்பு. 1000+ பக்கங்கள் கொண்டது. வெறும் 500 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். முந்திப்போய் வாங்கிக்கொள்ளுங்கள். 80 ஆண்டுகால தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை முற்றிலும் புரிந்துகொள்ளவும், தமிழின் சிறந்த சிறுகதையாளர்களை பற்றிய ஒரு பரந்துபட்ட பார்வையையும் கொடுக்கிற தொகுப்பாக இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க! அதே கடையில் இன்னும் கூட சில முக்கியமான நூல்கள் மிகமிக சகாய விலையில் கிடைக்கின்றன. கடை எண் 491.

ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் ரஸ்கின் பான்ட் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு வைத்திருந்தார்கள். ரஸ்கின் பாண்டின் கதைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் ஆர்வமாக புரட்டிப் பார்த்தேன். நன்றாகவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பு எளிமையான இலகுவான லயத்தோடு இருந்தது. மொழிபெயர்ப்பாளர் யார் எனப்பார்த்தால், பெயர் ஹரீஷ் ராகவேந்திரா என்று இருந்தது. பாடகராயிருக்குமோ என்று ஒரு சந்தேகம்! அவர் ஏன் இதெல்லாம் பண்ணப் போகிறார்?

மிகவும் பிடித்த பாடகர். அவருடைய பாடல்களில் பலருக்கும் பதின்ம வயது நினைவுகள் ஒளிந்து கொண்டிருக்கலாம். எனக்கிருக்கிறது. பேரை படிக்கவும் ‘மெல்லினமே மெல்லினமே…’ என மெல்லிய காதலோடு குரல் ஒலிக்கிறது. ‘ஆகாயம் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்’ என உச்ச ஸ்தாயியில் பாடும்போது எத்தனை முறை சிலிர்த்திருக்கிறேன். ‘அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்’ கேட்டு எத்தனை முறை அழுதிருக்கிறோம்.

ஜீரோ டிகிரி பதிப்பாளர் காயத்ரியிடம், யாரு இந்த ஹரீஸ் ஏரியால புதுசா… விசாரித்தேன். கடைசி பக்கம் பாருங்க என்றார். புரட்டிப் பார்த்தால்… அந்த பாடகர்தான்! வாழ்த்துகள் சார்!

மனுஷ்(யபுத்திரன்) ஒரு உயிர்கொண்ட செல்ஃபி பாய்ன்ட் போல மாறிவிட்டார். அவரைக் கடக்கிற யாரும் புத்தகம் வாங்குகிறார்களோ இல்லையோ அவரிடம் செல்பி எடுத்துக்கொள்ள தவறுவதில்லை. சலிப்பே இல்லாமல் படம் எடுத்துக்கொள்கிறார். பேசுகிறார்.

இளைஞர்கள் அவருடைய ‘அணைத்துக்கொள்ளவில்லையா’ நூலோடு அவரை அணைத்துக்கொண்டு படமெடுப்பதைப் பார்க்கும்போது சக கவிஞர்களுக்கு, மனிதர்களுக்கே கூட நிச்சயம் வயிறு எரியக்கூடும். ‘அணைத்துக்கொள்ளவில்லையா’ அவருடைய ஐம்பதாவது நூல் என்பதால் அவர் எழுதிய ஐம்பது நூல்களையும் ஒரு மரத்தின் கிளைகள் போல செட் பண்ணி வைத்திருந்தது அழகாய் இருந்தது.

விஷ்ணுபுரம் கடையில் ஜெமோவின் வாரிசு அஜிதன் அமர்ந்து கையெழுத்துப்போட்டுக் கொண்டிருந்தார். பார்க்க தளபதி படத்தில் வருகிற அர்விந்த்சாமி போலொரு தோற்றம்! அவருடைய சமீபத்திய தத்துவ உரை பற்றி நிறையபேர் பேசிக்கொண்டார்கள். பேசியதைப் பற்றி பேசுவதே புரியவில்லை என்கிற அளவில்தான் நம்முடைய ஞானம் என்பதால்… நெக்ஸ்ட்.

இந்த முறை ஏராளமான புத்தக வெளியீடுகள் கடைகளிலேயே நடக்கின்றன. இந்த வெளியீடுகளுக்கு என்று ஒரு சம்பிரதாயம் அல்லது செட்அப் அல்லது ஃப்ளோ சார்ட் உருவாகிவிட்டது. ஒரு கடைக்கு முன்னால் பதினைந்து பேர் கூடுகிறார்கள். அந்த பதினைந்து பேரில் சிலர் கட்டாயம் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் தலா ஒரு நூல் தரப்படுகிறது. புத்தகம் பற்றி மைக் இல்லாமல் ஒருநபர் சன்னமாக ஏதோ பேசுகிறார். அது யார் காதுக்கும் விழுவதில்லை. எழுதியவர் காதுக்கு மட்டும் விழுகிறது… அவர் கூச்சத்தோடு புன்னகைக்கிறார். அவரின் பேச்சினூடவே வாசகர்களுக்கான அன்பான அறிவிப்புகளும் விழுகிறது. இந்த மீன்டைம் வேடிக்கை பார்ப்பவர்கள் தங்களுக்குள் ‘அப்புறம் பேஸ்புக்ல உங்களுக்கு லைக்கை குறைச்சுபுட்டானே மார்க்குபய’ என்றும் ‘ஏங்கே அவன்லாம் ஒரு ஆளா அதெல்லாம் எழுத்தா’ என்று ஏதேதோ பேசிக்கொண்டிக்கிறார்கள். தடாலென ஒருவர் கைதட்ட அனைவரும் கைதட்ட… யாரோ ஒருவர் வழங்க இன்னொருவர் பெற்றுக்கொள்ள மங்கலம் முழங்க ஸ்ருதிடிவி வீடியோ எடுக்க வெற்றிகரமாக வெளியீடுகள் நடந்து முடிகிறது! இது போன்ற வெளியீட்டு நிகழ்வுகளால் எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் ஓர் ஆத்மதிருப்தி.

அத்தோடு முடிவதில்லை. எல்லாம் முடியவும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பதினைந்து பேர் கைகளிலும் இருக்கிற புத்தம் புது நூல்களை பிடுங்கி உள்ளே வைத்துவிடுகிறார்கள். பலரும் நாகரிகமாக திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள். பில் போட்டு பார்க்கவில்லை!

லோகேஷ் கனகராஜ் வாழ்க்கை வரலாறு வந்திருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். முதலில் இது ஏதோ ஜோக்கு போல என்று நினைத்தேன். ஆனால், அவர் தன் தெக்கத்தி குலதெய்வம் மார்டின் ஸ்கார்சசி மீது சத்தியம் என்றார். எந்தக்கடை எனத் தேடிப்பிடித்துக் கண்டுபிடித்தேன். ஆமாம் வந்திருக்கிறது. புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். ஒரு நீண்ட பேட்டியை புத்தகமாக்கி இருக்கிறார்கள். நிச்சயம் லோகேஷ் சாதனையாளர்தான். சினிமாவில் போராடுகிற மோடிவேஷன் இன்ஸ்பிரேஷன் தேவையானவர்களுக்கு உதவும். தமிழ் ஸ்டுடியோ வெளியீடு.

கடந்த பத்தாண்டுகளில் வெளியான பல முக்கியமான திரைப்படங்களின் திரைக்கதைகள் நூல்களாகி இந்த வருடம் புத்தகக் காட்சியில் வெளியாகி இருக்கின்றன. சித்தா, லியோ, மாஸ்டர், கைதி இன்னும் பல.. என ஏகப்பட்ட பிரபல திரைப்படங்களின் திரைக்கதை நூல்களை போட்டிருக்கிறார்கள். எல்லாமே சினிமா ஆர்வலர்களுக்கும் கற்பவர்களுக்கும் தற்கால சினிமாவை விளங்கிக்கொள்ள கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்ஸ்டுடியோவில் ஏனோ திரைக்கதை நூல்கள் எல்லாமே சற்றே கூடுதல் விலையாக இருக்கிறது. இந்தத் திரைக்கதைகளையெல்லாம் சினிமாவில் கோடிகளில் சம்பாதிக்கும் இயக்குநர்களோ நடிகர்களோ தொழில்நுட்ப கலைஞர்களோ வாங்கப்போவதில்லை. ஏழைபாழைகளான உதவி இயக்குநர்களும் எழுத்தாளர்களும்தான் வாங்கிப் படிக்கிறார்கள்… கொஞ்சம் விலையை குறைத்து விற்கலாம். அல்லது அவர்களுக்கு மட்டும் கூடுதல் தள்ளுபடி தரலாம். ‘சித்தா’ திரைக்கதை நூல் வாங்கலாம் என பார்த்தேன். 550+ போட்டிருந்தது!

வெற்றிமாறனின் ‘அசுரன்’ பட திரைக்கதை நூலை அஜயன் பாலா அண்ணன் தன்னுடைய நாதன் பதிப்பகம் சார்பாக கொண்டுவந்திருக்கிறார். அதனோடு விகடனில் வெற்றிமாறன் எழுதிய வாழ்க்கை வரலாற்றுத் தொடரான ‘மைல்ஸ் டூ கோ’வையும் பதிப்பித்திருக்கிறார். அவருடைய பதிப்பகத்திலேயே நாடக கலைஞர் டிவி ராதாகிருஷ்ணன் எழுதிய பாய்ஸ்கம்பெனி வரலாறு நூலும் வந்திருக்கிறது. வேண்டியோர் வாங்கிக்கொள்ளுங்கள்!

நாதன் பதிப்பகத்தில் வெளியாகி இருகிற இன்னொரு கவனிக்கத்தக்க நூல், ‘’ஆகச்சிறந்த 50 மலையாள சினிமா கதைகள்’’ என்கிற தொகுப்பு. இயக்குநர் பொன்.சுதா எழுதியுள்ளார். சினிமாவின் மீது தீராத காதலும் தேடலும் கொண்டவர் பொன்.சுதா. இந்த நூலில் மலையாள சினிமாவில் இதுவரை மேற்கொண்ட புதுமையான முயற்சிகளை தொகுத்துக் கொடுத்திருக்கிறார். இந்த கதைகளை எல்லாம் படமாக்க முடியுமா என்கிற மாதிரி ஆச்சர்யப்படுத்தும் தொகுப்பு. இயக்குநர்கள் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஏற்றது.

சமீபத்திய படங்களுக்கு தமிழ் ஸ்டுடியோ எப்படியோ, அப்படி 90ஸ் படங்களுக்கு போதி பதிப்பகம். பழைய படங்களின் திரைக்கதை நூல்கள் நிறைய போதி ஸ்டாலில் கிடைத்தது. வலைப்பேச்சு ‘பிஸ்மி’ அவர்களின் கடை இது. ‘காதல்கோட்டை’ தொடங்கி ‘ராம்’ வரை நிறைய 90கள் மற்றும் 2000த்தின் துவக்கத்தில் வெளியான படங்களின் திரைக்கதை நூல்கள் வைத்திருக்கிறார்கள். அகத்தியன், விக்ரமன், வசந்த் படங்களின் திரைக்கதை நூல்களும் இருந்தது.

நான் அடிக்கடி புரட்டுகிற திரைக்கதை நூல்களில் முக்கியமானவை ‘ஆண்பாவம்’, ‘ஹேராம்’ இரண்டும்தான். இவை எனக்கு பைபிள் போல! பல பல முறை வாசித்திருக்கிறேன். குறிப்பாக ‘ஆண்பாவம்’ திரைக்கதை நூல் ஒரு மேஜிக். இந்த இரண்டு நூல்களும் புத்தக சந்தையில் எங்கே கிடைக்கிறது என தெரியவில்லை. ‘ஆண்பாவம்’ கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. அவர்களுடைய கடை டிநகர் நடேசன் பார்க் பக்கத்தில் இருக்கிறது! ‘ஹேராம்’ ஆன்லைனில் தேடினேன், டிஸ்கவரி கடையில் கிடைக்கிறது!

ஹாலிவுட்டில் வெளியாகிற அத்தனை படங்களின் திரைக்கதைகளும் ஆன்லைனில் இலவசமாகத் தரவிறக்கக் கிடைக்கிறது. மிக உச்சபட்ச நட்சத்திர இயக்குநர்கள் தொடங்கி உலகசினிமா மேதைகள் வரை அனைவருமே தங்களுடைய திரைக்கதைகளை இலவசமாகக் கொட்டி வைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்து காசாப்ளான்காவிலிருந்து இந்தக் காலத்து ஓப்பன்ஹைமர் வரை கிடைக்கிறது. பல திரைக்கதைகளை நான் தரவிறக்கி மின்அச்சிட்டு படிக்கிறேன். ஏனோ தமிழ்சினிமா ஆட்கள் தங்களுடைய திரைக்கதைகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அல்லது இப்படி புத்தகமாக மட்டுமே வெளியிடுகிறார்கள்! முந்தைய காலத்து இயக்குநர்களாவது தங்களுடைய திரைக்கதைகளை இலவசமாகத் தரலாம்.

இன்னொன்று சமீபத்தில் வெளியாகிற பெரும்பான்மை திரைக்கதை நூல்கள், படம் வெளியான பின்பு அதைப் பார்த்து காட்சிக்கு காட்சி எழுதப்பட்டவையாகவே உள்ளன. இயக்குநரோ திரைக்கதை ஆசிரியரோ எழுதிய ஒரிஜினல் காப்பியாக இருப்பதில்லை என்பது மட்டும் சோகம்.

மணிவாசகர் பதிப்பகம் கடையில் அந்தக்காலத்து (அதாவது நிஜமாகவே பண்டரிபாய் நாயகியாக நடித்துக்கொண்டிருந்த 1940களின் காலத்து) சினிமா இதழான ‘குண்டூசி’ பற்றியும் அதன் வரலாறு மற்றும் அதில் வந்த கட்டுரைகளை தொகுத்து ஒரு நூல் போட்டிருக்கிறார்கள். ‘குண்டூசி சரித்திரமும் ஏடுகளும்’ என்கிற புத்தகம் இது. இந்த புத்தக காட்சியில் வாங்கியதும் அவசரமாக பாதி படித்த சுவாரஸ்யமான புத்தகம்.

குண்டூசி கோபால் என்கிற பத்திரிகையாளர்தான் சினிமா இதழ்களில் முதன் முதலில் கேள்வி பதில் என்கிற பகுதியை கொண்டு வந்திருக்கிறார். 1943இல் எம்ஜிஆர் பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ‘அவருக்கு ஏன் சின்ன சின்ன சில்லறை வேஷமாக கொடுக்கிறார்கள்; பெரிய வேஷம் கொடுத்தால் நன்றாக நடிப்பாரே’ என்று கேட்கிறார் ஒரு வாசகர். அதற்கு குண்டூசி கோபால், ‘நாமெல்லாம் சில்லறைக்கு தவிக்கிற போது அவருக்கு நிறைய சில்லறை கிடைக்கிறதே’ என்று கேலியாக எழுதுகிறார். ப்ளூசட்டைக்கு இணையாக சினிமா விமர்சனங்களும் தீவிரமாக செய்திருக்கிறார். நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு, துணுக்குகள், பேட்டிகள், தகவல்கள் என அந்தக்கால சினிமாவின் வரலாற்றை அறிந்துகொள்ள சிறப்பான நூல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...