ஒரு கொலை வழக்கில் அரசியல் நிர்பந்தங்களுக்காக அவசரமாக குற்றவாளியைப் பிடிக்கவேண்டிய அழுத்தம் போலீஸுக்கு. உண்மை குற்றவாளி சிக்காமல் போக, பொய்யாக சில தடயங்களை உருவாக்கி ஒரு அப்பாவியை சிக்கவைக்கிறார்கள். சிறையலடைக்கிறார்கள்.
போலீஸ்காரர் ஒருவரின் மனசாட்சியை இந்த கொடுமை உலுக்க, 5 ஆண்டுகள் விடுப்பில் செல்கிறார். நடுவில் ஒரு திருமணத்துக்காக ஊர் திரும்பும் அந்த போலீஸ்காரர், அப்பாவியின் குடும்பம் கஷ்டப்படுவதைப் பார்த்து வேதனைப்படுகிறார். உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க மீண்டும் பணியில் சேர்கிறார். அவரால் உண்மைக் குற்றவாளியை பிடிக்க முடிந்ததா… இதற்கு மற்ற காவல் துறையினர் உதவி செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது. அதற்கெல்லாம் மேலாக
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதை மறைத்து நிம்மதியாக வாழ முடியாது என்ற கருத்தையும் அழுத்தமாக சொல்கிறது.
அப்பாவியைக் குற்றவாளி ஆக்கியதால் மன நிம்மதியை இழந்து அலையும் சப் இன்ஸ்பெக்டர் அரவிந்த் கருணாகரனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். கொலைவழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அப்பாவியை சக போலீஸார் அடிக்கும்போது தனது கையாலாகாத்தை வெளிப்படுத்துவது, உயர் போலீஸ் அதிகாரியான தனது அண்ணனிடம் கோபத்தைக் காட்டுவது, உண்மைக் குற்றவவாளியைக் கண்டுபிடிக்க துடிப்புடன் செயல்படுவது என்று ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் துல்கர். புலிக்குப் பிறந்தது பூனையாகவில்லை.
துல்கருக்கு இணையாக படத்தில் கவனத்தில் ஈர்க்கும் நபர் மனோஜ் கே.ஜெயன். அரசியல்வாதிகள் தரும் நெருக்கடியை சமாளிப்பது, தம்பி மீது பாசம் காட்டுவது, அதே தம்பி தனக்கு எதிராக திரும்பும்போது அவருக்கு வில்லனாக மாறுவது என்று நவரசங்களையும் காட்டுகிறார்.
படத்தின் நாயகி டயானா பெண்டி ஆனால் படத்தில் அவருக்கு டூயட் காட்சிகளெல்லாம் இல்லை. நாயகனுக்கு தேவையான உதவிகளைச் செய்ய சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.
படத்தின் இரண்டாவது ஹீரோ, அதன் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். தமிழில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ படத்தை இயக்கியவர். போலீஸ் கதையென்றால் அதிரடியான சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும், நடுவில் காதலியுடன் டூயட் பாடவேண்டும் என்பதுபோன்ற இலக்கணங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, வெறும் விசாரணையை மட்டுமே வைத்து படத்தை எடுக்கிறார். கொலைகாரனைத் தேடும் ஹீரோவை மையப்படுத்திய கதையில் படம் முடியும்வரை (க்ளைமேக்ஸ் உட்பட) அந்த கொலைக்காரனை காட்டாமலேயே விறுவிறுப்பாக படத்தை எடுத்துள்ள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு நிச்சயம் ஒரு சல்யூட் அடிக்கலாம்.
சோனிலைவ் ஒடிடி தளத்தில் படத்தை பார்க்கலாம்