No menu items!

ஐபிஎல்லின் புதிய சூப்பர் மேன்!

ஐபிஎல்லின் புதிய சூப்பர் மேன்!


மேத்யூ ஹெய்டன், கிறிஸ் கெயில், ஆந்திரே ரஸல், கே.எல்.ராகுல் என்று ஒவ்வொரு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் யாராவது ஒருவர் சூப்பர் மேன் ஆவது வழக்கம். அப்படி இந்த ஐபிஎல் தொடரின் சூப்பர் மேனாக மாறியிருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் வெறும் 15 பந்துகளில் கம்மின்ஸ் 56 ரன்களை எடுக்க, கிரிக்கெட் ரசிகர்கள் வாய்பிளந்து நிற்கிறார்கள். இப்போட்டியில் அரை சதம் எடுத்ததுடன் 2 விக்கெட்களையும் எடுத்து ஆட்டத்தின் தனி நாயகனாக உருவெடுத்துள்ளார் கம்மின்ஸ்.

இந்த ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை கம்மின்ஸுக்கு இதுதான் முதல் போட்டி. ஆஸ்திரேலியாவில் இருந்து தாமதமாக வந்ததால் குவாரன்டைனில் இருந்த கம்மின்ஸ், கடந்த திங்கள்கிழமை முதல்தான் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இந்தச் சூழலில் அவரது குவாரண்டைன் காலம் முடிந்த உடனே அணிக்குள் இணைத்துக் கொண்டார்கள் கேகேஆர் நிர்வாகத்தினர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய 2 விதங்களிலும் பங்களிக்க முடியும் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

நேற்றைய ஆட்டத்தின் ஆரம்பத்தில் மும்பையின் 2 விக்கெட்களை எடுத்த கம்மின்ஸ், தனது கடைசி ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுக்க, முதலில் கேகேஆர் அணிக்கு வில்லனாக பார்க்கப்பட்டார். ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக 14 பந்துகளில் அரைசதம் எடுத்த கம்மின்ஸ், வில்லன் இமேஜை உடைத்து நாயகனானார்.

இந்த போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்கு கம்மின்ஸ்தான் சமூகவலைதளத்தில் டிரெண்டிங்காக இருந்தார். “சுவாரஸ்யமாக கடைசி ஓவர் வரை சென்றிருக்க வேண்டிய ஆட்டத்தை தனது அதிரடி பேட்டிங்கால் கெடுத்துவிட்டார்” என்று கம்மின்ஸின் ஆட்டத்தைப் பற்றி கமெண்ட் அடித்துள்ளார் ரவி சாஸ்திரி.

“ஆந்திரே ரஸலைப் போல் நடனமாடி, மற்ற அணி வீரர்களுடன் கம்மின்ஸை கட்டிப்பிடிக்க வேண்டும்போல் இருந்தது” என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கேகேஆர் உரிமையாளரும் பிரபல நடிகருமான ஷாரூக்கான். “வடாபாவை தட்டிப் பறிப்பதுபோல் கம்மின்ஸ் வெற்றியை தட்டிப் பறித்துவிட்டார்” என்று தன் பங்குக்கு விமர்சனம் செய்தார் வீரேந்தர் ஷேவாக்.

இதில் ஷேவாக்கின் கருத்தை ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் ரசிக்கவில்லை. ரோஹித்தை ஷேவாக் கிண்டலடித்து விட்டதாக அவர்கள் கொதிக்க, “மும்பையில் வடாபாவ் ரொம்ப பிரபலம். அதனால் வடா பாவை குறிப்பிட்டேன். மும்பையிடம் இருந்து வெற்றி என்ற வடாபாவை கம்மின்ஸ் தட்டிப் பறித்துவிட்டார் என்பதையே என் ட்வீட்டில் குறிப்பிட்டேன். மற்றபடி நான் ரோஹித் சர்மாவைப் பற்றி ஏதும் சொல்லவில்லை” என்று வெள்ளைக் கொடி காட்டினார் ஷேவாக்.

இப்படி தன்னைச் சுற்றி ஏக களேபரம் நடந்துகொண்டிருக்க, “இதுபோன்ற ஆட்டத்தை நான் எப்படி ஆடினேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது” என்று அடக்கமாக கூறியுள்ளார் பாட் கம்மின்ஸ்.
ஹீரோக்கள் இப்படித்தான்… எப்போதும் வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...