No menu items!

பாஜகவுக்கு 234 தொகுதிகள் ஆர்எஸ்எஸ் எடுத்த சர்வே! – மிஸ் ரகசியா

பாஜகவுக்கு 234 தொகுதிகள் ஆர்எஸ்எஸ் எடுத்த சர்வே! – மிஸ் ரகசியா

 “நான்காம் கட்ட தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் உற்சாகமா இருக்காங்க.  அதே நேரத்துல பாஜக தலைவர்கள் முகத்துல ஒரு திகில் தெரியுது” என்றபடி ஆபீசுக்குள் வந்தாள் ரகசியா.

 “எதனால இந்த மாற்றம்?”

 “இந்த நாடாளுமன்ற தேர்தல்ல பாஜக எதிர்பார்த்த அளவுக்கு 400 சீட்டெல்லாம் ஜெயிக்க முடியாது 250 சீட் தாண்டறதே கஷ்டம்னு சில மூத்த பத்திரிகையாளர்கள் சொன்னதுதான் இதுக்கு காரணம். இதனால காங்கிரஸ் கட்சி உறசாகாமாகி இருக்கு.  பாரதிய ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துடுச்ச்சு.  மீதி இருக்கும் தொகுதிகள்ல நாம தீவிரமா பாரதிய ஜனதா எதிர்ப்பு பிரச்சாரத்தைக் கொண்டு போகணும்னு கட்சிக்காரங்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு போட்டிருக்கார்.”

“பத்திரிகையாளர்கள் எழுதுறது இருக்கட்டும். பாஜகவுல என்ன பேசிக்கிறாங்க?”

“மூன்று கட்டத் தேர்தல் முடிந்ததும் ஆர்எஸ்எஸ். ஒரு சர்வே எடுத்திருக்கிறது. அதில், ஒட்டு மொத்தமாக இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு  தனிப்பட்ட முறையில் 234 தொகுதிகள்தாம் கிடைக்கும் என்று வந்திருக்கிறதுனு டெல்லி வட்டாரத்துலருந்து தகவல். ஆனால் அதை குறித்து பாஜகவினர் அப்போ அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அதற்கு அடுத்த கட்டத் தேர்தல்கள் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் அங்கே கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டால் 272ஐ தனியாகவே தொட்டுவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாரதது ஒன்று நடந்து விட்டது”

“என்னது”

“உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த ஜாமீன். தேர்தல் முடிகிறவரை அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்றே நினைத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் ஜாமீம் கொடுக்கலாம் என்ற தகவல்கள் வந்த போது ஜாமீம் கொடுத்தாலும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று கொடுப்பார்கள் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அப்படி செய்யவில்லை. கெஜ்ரிவால் விடுதலையாகி தீவிரமாய் பிரச்சாரம் செய்வது பிரதமருக்கே ஷாக்காம்”

“அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பயப்படுகிறதா பாஜக?”

”ஆமாம். அவரால் வட இந்தியாவில் பல தொகுதிகளில் வாக்குகளை இழுத்துவிட முடியும் என்று பாஜகவினர் நம்புகிறார்கள்”

“இதற்கு என்ன மாற்று வியூகம் பாஜக வைத்திருக்கிறது”

“பிரதமர் மோடியின் கடுமையான பேச்சுக்கள்தாம் அந்த வியூகம். நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும் மோடியின் பேச்சுக்களில் இப்போது காட்டம் அதிகமாக இருக்கிறது. இந்துக்களை ஈர்ப்பதுபோல் மிகக் கடுமையாக பேசுகிறார்”

“ஆமாம் கவனித்தேன். பிரதமர் இப்படி பேசலாமா என்ற கேள்விகள் எழுகிறதே?”

“அந்தக் கேள்வியைதான் பாஜகவினர் விரும்புகிறார்கள். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி பிரதமர் மோடி இந்துக்களுக்காக குரல் கொடுக்கிறார் என்ற பிம்பம் கிடைக்க வேண்டும் என்று பாஜகவின் மேலிடம் விரும்புகிறது.இதுதான் அவர்கள் வியூகம்”

“சிறையில் இருந்து கேஜ்ரிவால் வெளிய வந்ததும் எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்குமே.”

 “ஆமா. அவரும் உற்சாகமா பிரச்சாரத்துக்கு போய்ட்டிருக்கார். மோடியோட கியாரண்டி மாதிரி கேஜ்ரிவாலும் வாக்காளர்களுக்கு கியாரண்டி கொடுத்துட்டு இருக்கார்.”

 “மோடிக்கு வயசாகிடுச்சுன்னு கேஜ்ரிவால் கொளுத்திப் போட்ட வெடியும் பாஜகவை கலங்கடிச்சுடுச்சே…”

 “இது மோடியே எதிர்பார்க்காத குண்டு. மோடிக்கு 75 வயசாகிடும் அதனால அடுத்த பிரதமர் அமித் ஷாதான்னு கேஜ்ரிவால் சொல்ல, பாஜக தலைவர்கள் பலரும் அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. அதனால கட்சியில குழப்பம் ஏற்பட இருந்துச்சு. இந்த விஷயத்தை அமித் ஷாவை மறுக்க சொல்லியிருக்கிறார் மோடி. அமித் ஷாவும் உடனே மறுத்துட்டார்.”

”பாஜகவுல 75 வயசு வரைக்குதான் பதவில இருக்க முடியுமா? அப்படி எந்த  விதியும் பாஜகவில் இல்லையே?”

“ஆமாம். ஆனால் அது எழுதப்படாத விதியா இருக்கு. 2019 எலெக்‌ஷன்போது 75 வயசுக்கு மேல பாஜகவுல தேர்தல்ல போட்டியிட அனுமதி இல்லனு அமித்ஷா சொல்லியிருந்தார். அதை வச்சுதான் இப்ப எல்லோரும் இந்தக் கேள்வியைக் கேக்குறாங்க. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி எல்லோரையும் 75 வயசுல வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இந்த செப்டம்பர் வந்தா மோடிக்கு 75 வயசு ஆகப் போகுது அவரையும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்கனு கெஜ்ரிவால் பேசுனது இதை வச்சுதான்”

 “முதல்வர் ஸ்டாலின்கிட்ட கேஜ்ரிவால் பேசினாரா?”

”பேசாம இருப்பாரா? முதல்வர் ஸ்டாலின்கிட்டயும் அவர் போன்ல பேசி இருக்கார். அப்ப,  ‘நாம எல்லோரும் சேர்ந்து ஏழாவது கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னால  ஒரு முக்கிய இடத்தில் பொதுக்கூட்டம் போடலாம்’னு முதல்வருக்கு கேஜ்ரிவால் அழைப்பு விடுத்திருக்காரு. ஆனா அதை முதல்வர் ஸ்டாலின் நிராகரிச்சுட்டாரு.”

 “ஏன் நிராகரிச்சாரு?”

 “வட மாநிலங்கள்ல தான் பிரச்சாரத்துல கலந்துக்கிட்டா, பாஜக சனாதன பிரச்சினையை எழுப்பலாம்னு முதல்வர் நினைக்கறாரு. அதனால இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு வந்துடக் கூடாதேன்னுதான் கேஜ்ரிவால் அழைப்பை முதல்வர் நிராகரிச்சிருக்கார். அதே நேரத்துல அங்க இருக்கற கட்சிகள் எல்லாம் சேர்ந்து பாஜகவுக்கு எதிரா எப்படி பிரச்சாரம் செய்யறதுன்னு அட்வைஸ் கொடுத்திருக்கார்.”

“முதல்வரோட மருமகன் திரும்பவும் பிரசாந்த் கிஷோர்கிட்ட நெருங்கறதா தகவல் வந்ததே”

 “சட்டமன்ற தேர்தல்ல போட்டி ரொம்பவும் கடுமையா இருக்கும்னு முதல்வர் நினைக்கறார். அதனால பிரசாந்த் கிஷோரை வச்சு அந்த தேர்தலுக்கான வியூகம் வகுக்க ஆசைப்படறார். அது தொடர்பாதான் அவரோட மருமகன் இப்ப பிரசாந்த் கிஷோரை சந்திச்சு பேசி இருக்கார்.”

“திமுக ஆன்மிக அரசியலையும் கையில எடுக்கப் போறதா கேள்விப்பட்டேனே?”

 “ஆகஸ்ட் மாதம் பழனியில் நடக்கப் போற உலக முருக பக்தர்கள் மாநாட்டைப் பத்தி கேட்கிறீங்களா? இந்த மாநாட்டுக்கு இந்து அறநிலைத்துறை ஏற்பாடு செய்யுது. சமீபத்தில்   பழனிக்கு போய் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைப் பத்தி ஆய்வு நடத்திட்டு வந்திருக்கார் அமைச்சர் சேகர்பாபு.  இந்த மாநாட்டை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டு இருக்காங்க.  வெளிநாடுகள்ல இருந்து  500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதுல கலந்துக்க போறாங்க. பாரதிய ஜனதா எப்படி ராமரை கையில எடுத்திருக்கோ, அதேபோல முருகரை தங்களோட கையில எடுக்க திமுக திட்டம் போடுதுன்னு நினைக்கறேன்.”

 “எடப்பாடி பிறந்தநாள் கொண்டாடினாரே… அவருக்கு வாழ்த்து தெரிவிச்சியா?”

 “அண்ணாமலையோட வாழ்த்தையே அவர் பெருசா மதிக்கலை. பிரேமலதா விஜயகாந்த், ஜோசப் விஜய், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க. இதுல மத்த தலைவர்களுக்கு நன்றி சொன்ன எடப்பாடி பழனிசாமி,. அண்ணாமலைக்கு மட்டும் வாழ்த்து சொல்லாம தவிர்த்திருக்காரு.”

”ஜெயலலிதா ஸ்டைல்ல ஃபாலோ பண்றார் போல”

“எல்லோரும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆக முடியுமா” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...