No menu items!

ரஜினிக்கு இன்னும் அரசியல் விருப்பம் இருக்கு! – சத்தியநாராயணா Exclusive Interview

ரஜினிக்கு இன்னும் அரசியல் விருப்பம் இருக்கு! – சத்தியநாராயணா Exclusive Interview

-வி.சந்திரசேகரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாரயணாவை பெங்களுரில் அவரது வீட்டில் சந்தித்தோம். அவரது பேட்டியிலிருந்து:

ரஜினி பெங்களுரு வரும்போதெல்லாம் இந்த வீட்டில் தான் தாங்குவாரா?

ஆமாம். ஆனால் கொஞ்ச நேரம் இருந்து எல்லோரையும் பார்த்துட்டு வேறொரு பிளாட்டுக்கு போயிடுவார். அங்குதான் நண்பர்களை சந்திப்பார். என்னை தொந்தரவு செய்யக்கூடாது என அப்படி செய்வார். இங்க வந்தால் சிக்கன் விரும்பி சாப்பிடுவார், சாம்பார், சப்பாத்தி மாசாலா எல்லாம் விரும்பி சாப்பிடுவார். இது மாதிரி ருசி தமிழ்நாட்டுல கிடையாது என்பார். சின்ன வயசுல இருந்து சாப்பிட்ட டேஸ்ட் ஆச்சே. சாப்பிட்டுகிட்டே குடும்ப விஷயங்கள் பேசுவார். எல்லார் பற்றியும் விசாரிப்பார். பசங்க என்ன படிக்கிறாங்க. வேலைக்கு போறார்களான்னு ஒவ்வொருத்தரைப் பற்றியும் பாசமா விசாரிப்பார்.

அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கீங்களா? உங்களுக்கு பிடிச்ச படம் எது?

ஓண்ணு விடாம பார்ப்பேன். பெங்ளூரிலேயே பார்த்திருக்கிறேன். மக்கள் ரசிப்பதை கவனிப்பேன். நான் அது பத்தி கருத்து சொல்வதுக்கு முன்னாடியே அன்னைக்கு ராத்திரி 10 மணிக்கு போன் பண்ணி கேட்பார். சந்தோஷப்படுவார். அவர் நடிச்சதில் பிடித்தது அண்ணாமலை. அவர் கஷ்டப்பட்டு பால் வித்து முன்னுக்கு வரது நாட்டுக்கே ஒரு மெசேஜ். அட்வைஸ்.

சின்ன வயதிலையே ரஜினிக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தததா?

ஆமாம். காலேஜ் படிக்கும்போதே ஆண்டு விழாவில் டிராமா போடுவாங்க. இவர் அருமையா நடிப்பார். நண்பர்கள் பாராட்டுவார்கள். “சினிமாவுக்கு நடிக்கப் போ” என்பார்கள். அவர் நல்லா வருவார் என்ற நம்பிகை எனக்கும் இருந்தது மெட்ராஸ் அனுப்பிவச்சேன். கவர்மெண்ட் வேலையான கண்டக்டர் வேலையை விட்டது பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை.

ரஜினியின் ஒன்பது வயதிலேயே தாயார் இறந்துவிட்ட நிலையில் நீங்கள்தான் அவரை பார்த்துக் கொண்டீர்களா?

ஆமாம். நானும் என் மனைவியும் பார்த்துக் கொண்டோம். தினமும் அவர் வெளியேபோய் திரும்பி வரும்வரை காத்திருப்போம். அப்புறம் சேர்ந்து சாப்பிடுவோம். எனக்காக எதுக்கு காத்திருக்கீங்க என்பார். எங்களுக்கு மனசு கேட்காதுன்னு சொல்வோம். ரொம்ப பாசமாக இருப்போம்.
உங்கள் தந்தை ரஜினியின் படங்களை பார்த்துள்ளாரா?

‘தில்லு முல்லு’ வரை பார்த்தார். அப்புறம் அவர் இல்லை. அபூர்வ ராகங்கள் படத்தை அப்பவே ரொம்ப ரசித்தோம். அவர் நல்லா வருவார்னு எங்க அப்பா அப்பவே சொல்வார். இவ்வளவு பெரிசா வருவார்னு எதிர்பார்க்கலை.

ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் திரும்ப வந்துள்ளது. அது பற்றி..

ஆமாம்.. சந்தோஷம். அப்போ அவருக்கு வேண்டாதவங்க அதை தடுத்து ரொம்ப கெடுத்தாங்க. அதெல்லாம் அரசியல். ஆனால் ஜனங்கள் ரொம்ப விரும்பினாங்க.

சின்ன வயதில் ரஜினியை நீங்கள் அடித்திருக்கிறீர்களா?

ஆமாம்.. (சிரிக்கிறார்) அதை நினைச்சு இப்போ வருத்தப்படறேன். ஐயோ அடிச்சுட்டமேன்னு.

அவர் தன் குடும்பத்திற்கு ஒன்றும் செய்யவில்லை… லதா குடும்பத்திற்கே செய்கிறார் என்று ஒரு சாரர் சொல்கிறார்களே…!

அதெல்லாம் சும்மா. எங்க குடும்பத்திற்கு நல்லா பண்ணியிக்கார். அவரவர் வேலையில் பிஸியா இருக்கும்போது கலந்து பேசமுடியாது. ஃபங்ஷன்களில் அவர் பிள்ளைகளும் எங்க குடும்பத்தினரும் சேரும்போது பேசுகிறோம். எந்த பிரச்சினையும் இல்லை.

அரசியலைப் பொறுத்தவரை ரொம்ப காலமா வரப்போறன்… வரப்போறன்னு என்றார். உங்களிடம் ஆசிர்வாதம் கூட வாங்கினார். திரும்ப சென்னை வந்தவுடன் முடிவை மாற்றிகொண்டார். அதாற்கு உண்மையான காரணம் என்ன?

தேதி கூட கன்ஃபர்ம் பண்ணிட்டார். குடும்பமே விரும்புச்சு அரசியலில் நியாயம், தர்மம், சத்தியம் இல்லை. எல்லாரும் ஊழல் செய்யத்தான் வர்றாங்க என்ற எண்ணம் வந்து வேணாம்னு ஒதுங்கிவிட்டார்.

அரசியல் என்பது இப்படித்தான் என்று அவருக்கு இப்போதுதான் தெரிந்ததா? முதலிலேயே யோசித்திருக்க வேண்டாமா? ஏண் வீணாக ஆசை காட்டினார்?

அரசியலை அனுபவிச்சவங்க, பெரியவங்க அவருக்கு அட்வைஸ் பண்ணாங்க. வேணாம்பா போகாதே என்றார்கள் கடைசி வரை டாக்டர்கள் வேற நீங்கள் அதிகமாக டூர் போகக்கூடாது, பேசக்கூடாது என்றார்கள். அதனால்தான் பின்வாங்கினார் வேற எந்த ரகசியமும் இல்லை. இப்பவும் அவருக்கு நம்பிக்கை இருக்கு முருகனின் கருணை இருக்கு.

அந்த முடிவில் உங்களுக்கு வருத்தம் உண்டா?

கிடையாது. அது அவரது இஷ்டம். வந்தே தீரணும் என்று நான் சொல்ல முடியாது. அவரே அன்னிக்கு போன் பண்ணி கேட்டார். உங்களுக்கு வருத்தமான்னு. நான் வருத்தம்னு சொன்னால் அவர் மனசு திரும்ப வருத்தப்படும் இல்லையா! அதனால நான், ‘அதெல்லாம் இல்லை உன் சந்தோஷம்தான் முக்கியம்’னு சொலிவிட்டேன்.

ரஜினி தன் படத்தை “பிரமோட்” பண்ணத்தான் அரசியலுக்கு
வறேன்னு வறேன்னு சொல்றார்னு ஒரு விமர்சனம் வைக்கப்படுதே!

அதெல்லாம் கிடையாது!

பிற்காலத்தில் அந்த முடிவு பற்றி வருத்தப்பட்டு பேசினாரா?

இப்பவும் வருத்தப்படுகிறார். வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ‘வாருங்கள். நாங்கள் ஆதரவு தர்றோம்’ என்கிறார்கள். ‘நீங்கள் நில்லுங்கள் சார். நாங்க மற்றதை பார்த்துக்கிறோம்’ என்கிறார்கள்! ஆனா ஒரு 50 சதவிகிதம் பேர் தங்கள் சுயநலத்திற்காக இவரை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் எல்லாம் தனக்கு தொல்லை கொடுப்பார்கள் என நினைத்தார். உங்க தொல்லையும் வேணாம். லாபமும் வேணாம்னு முடிவுசெய்துவிட்டார். நல்லது பண்ண முடியாது என்று நினைத்துவிட்டார்.

ரஜினி ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா?

நிச்சயமா முடியும். இப்பவும் அந்த தகுதி அவருக்கு இருக்கு. அவர் முடிவு எடுத்துவிட்டால் நிச்சயம் ஜெயித்தே தீர்வார். இப்பவும் அந்த நம்பிகை அவருக்கு உண்டு. எனக்கும் உண்டு. ஆனா வயசு ஆயிடுச்சு. டாக்டர்கள் வேற சொல்றாங்க!.

ரஜினி எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும். யாரையும் பகைத்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார். அந்த எண்ணம் அரசியலுக்கு சரிப்பட்டு வராதே!

ஆமாம். அவருக்கு எல்லாரும் நண்பர்கள். அவருக்கு யாரிடமும் விரோதமே கிடையாது. தனக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்.

ரஜினி பி.ஜே.பி. ஆதரவாளரா?

இல்லை எல்லா கட்சிக்கும் வேண்டியவர். மத்தபடி மோடிக்கு அவர் மேல ரொம்ப மரியாதை, அன்பு, வச்சிருக்கார். என் பிரண்டா இருந்தா போதும் என்று சொல்லுவார்.

ரஜினி திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஒரு அண்ணனாக என்ன சொல்கிறீர்கள்..?

அவரே வருஷத்திற்கு ஒண்னுதானே பண்றார். சும்மா இருக்கவும் முடியாது! அவர் நடிப்பதால் பலருக்கு வாழ்வும், வாய்ப்பும் கிடைக்கிறதே. மக்களுக்காக நடிக்கிறார். தனக்காக இல்லை படத்தில் வரும் லாபத்தை கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தருகிறாரே! அப்புறம் மார்கெட் இருக்கு.

இனி அமிதாப் பச்சன் போல பக்குவப்பட்ட கேரக்டர் ரோல்களில் மட்டும் நடிக்க வேண்டும். என்று சிலர் விரும்புகிறார்களே!

ஆமாம் அது சரிதாஅன். குறைச்சுக்கட்டும். ஆக்ஷன் ரோல்கள் வேண்டாம்!

இமய மலையில் ஒரு ஆசிரமம் கட்டியுள்ளாராமே… சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டபின் அங்கு போய்விடப் போகிறாராமே!

ஆசிரமம் அமைத்தது உண்மை. போனா தங்கறதுக்கு கட்டினார். அங்கேயே குடியேறுவது சாத்தியமில்லை. எங்கே நிம்மதி கிடைக்கிறதோ அங்கே இருப்பதுதான் நல்லது! தனி நிம்மதிக்காக அப்படி இமயமலைக்கு போகமுடியாது. குடும்பத்தில் நிம்மதி இருந்தா, அங்கதான் எல்லாரும் சந்தோஷமா இருந்தா.. அவங்கதான் நிம்மதி இருக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...