No menu items!

பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் – ஏலம் எடுக்கிறீர்களா?

பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் – ஏலம் எடுக்கிறீர்களா?

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வழங்கப்பட்ட 1,200 பரிசுப் பொருட்கள் இன்றுமுதல் ஏலத்தில் விடப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்றுமுதல் அக்டோபர் 2-ம் தேதிவரை இந்த ஸ்பெஷல் இ ஏலம் நடைபெற உள்ளது.

பல்வேறு கட்டங்களில் பிரபலங்களால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் இந்த ஏலத்தில் விற்பனைக்கு வர உள்ளன. இதில் அதிக விலை உயர்ந்த பொருளாக பாரலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மனிஷ் அகர்வால் என்ற வீரர் கையெழுத்திட்டு வழங்கிய டி ஷர்ட் கருதப்படுகிறது. இந்த டீ ஷர்ட்டுக்கான அடிப்படை ஏலத் தொகையாக 10 லட்சம் ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த ஏலத்தில் விற்கப்படவுள்ள பொருட்களிலேயே மிகக் குறைந்த விலையுள்ள பொருளாக மோடிக்கு பரிசளிக்கப்பட்ட ஒரு விநாயகர் சிலை உள்ளது. குடையின் அடியில் விநாயகர் நிற்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையின் அடிப்படை விலை 100 ரூபாய்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பரிசளித்த ராணி கமலாபதியின் சிலை, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை மற்றும் சூரியன் ஓவியம், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பரிசளித்த திரிசூலம், அயோத்தியாவின் மண் நிறைந்த அமிர்த கலசம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் இந்த ஏலத்தில் விற்கப்பட உள்ளன.

இந்த ஏலத்தில் விற்கப்படும் 1,200 பரிசுப் பொருட்களில் அயோத்தி ராமர் கோவில் மற்றும் வாரணாசி காசி-விஸ்வநாதர் கோவிலின் பிரதிகள் மற்றும் அதன் மாதிரிகள் அதிக மக்களின் ஈர்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மல்யுத்த குழுவினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கையெழுத்திட்டு வழங்கிய டி-ஷர்ட், தாமஸ் கோப்பை சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றவர்கள் கையெழுத்திட்டு வழங்கிய பேட்மிண்டன் பேக், தாமஸ் கோப்பை சாம்பியன்ஷிப் 2022 தங்கப் பதக்கம் வென்ற கே. ஸ்ரீகாந்த் கையெழுத்திட்ட பேட்மிண்டன் ராக்கெட். சிற்பி அருண் யோகிராஜ் பரிசளித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பளிங்கு சிற்பம் ஆகியவையும் இந்த ஏலத்தில் விற்கப்பட உள்ளன. இந்த பரிசுப் பொருட்களின் அடிப்பை விலையாக 5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மூன்று முறை இதுபோல பிரதமருக்கு பரிசாக கிடைத்த பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதில் 2019-ம் ஆண்டு 1805 பொருட்களும், அதே ஆண்டில் 2,772 பொருட்கள் இரண்டாவது முறையும் ஏலம் விடப்பட்டன. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 1,348 பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.

ஏலம் மூலம் கிடைத்த பணம் நமாமி கங்கே புரோக்கிராம் எனப்படும் தூய்மை கங்கை திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இம்முறையும் ஏலம் மூலம் கிடைக்கும் பணம் தூய்மை கங்கை திட்டத்துக்காக செலவிடப்படும் என்று மத்திய அமைச்சர் ஜி.கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...