No menu items!

அமீர் Vs ஞானவேல்ராஜா – அமீருக்கு குவியும் ஆதரவு!

அமீர் Vs ஞானவேல்ராஜா – அமீருக்கு குவியும் ஆதரவு!

இயக்குநர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சினைதான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் ஹாட் டாபிக்..

கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டியில், ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அமீர் பொய் கணக்கு கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். அமீரின் இயக்கும் திறமை குறித்து இயக்குநர் சுதா கொங்குரா விமர்சித்திருந்தார் என்றெல்லாம் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஞானவேலின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தன்னுடைய விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில் ‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை என்றும், அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் என்றும் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்த பலர் வாய் திறக்காமல மௌனம் காக்கிறார்கள் என்றும் வருத்தப்பட்டு சொல்லியிருந்தார். அமீரின் அறிக்கைக்குப் பிறகு திரையுலகப் பிரமுகர்கள் ஒவ்வொருவராய் அமீருக்கு ஆதரவாக கருத்துக்கள் சொல்லி வருகிறார்கள்.

இயக்குநர் சசிகுமார்:

அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன் ‘பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை.

நடிகர் சமுத்திரக்கனி:

அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதைத்தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல.

ஒருநாள் அமீர் அண்ணனோட நண்பர் ஒருத்தர் எதுக்கு இது அப்டியே உட்டுட வேண்டியதுதானே? நிறுத்துங்க படத்தை அப்படின்னு சொன்னாரு அதுக்கு அமீர் அண்ணன் என்ன சொன்னாரு தெரியுமா? “ஆரம்பிச்சுட்டோம். கார்த்தியோட எதிர்காலம் இது. அதுமட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சிட்டு கார்த்தி கைய புடிச்சு என் கைல கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதிலேயே இருக்கு நான் இவங்களுக்காக ஏதும் செய்யலிங்க அந்த பெரிய மனுஷனுக்காகத்தான் செய்றேன்..” அப்படின்னு சொல்லி செஞ்சார். அன்னைக்கு அவரு படத்தை நிறுத்தி இருந்தா இந்த படம் வந்துருக்குமா..? ஒரு ஹீரோ வெளில வந்துருப்பாரா..?

பல பேர்கிட்ட கை ஏந்தி அந்த படத்தை முடிச்சாரு அமீர் அண்ணன். அதுக்கு ஆயிரம் கோடி இல்ல, லட்சம் கோடி கொடுத்தாக்கூட ஈடாகாதுங்க.

நீங்களெல்லாம் ஏதோ ஒண்ணரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல்..! செலவு பண்ணது அதுக்கும் மேல… அதெல்லாம் பாவம்… கணக்கிலேயே இல்ல! அமீர் அண்ணனோட பணம் அது. இப்ப நான் சொல்லிருக்கிறது ஒரு சம்பவம் தான். இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும். இந்தமாதிரி பொதுவெளில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது.

சுதா கோங்குரா:

பிப்ரவரி 2, 2016, இயக்குநர் அமீர் அண்ணாவிடம் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வெளியில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். எனக்கு அது நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஏன் என்றால் இறுதிச் சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்.

நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன். என் படத்தில் வந்த மதியின் கதாபாத்திரம் முத்துவின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துகளில் ஒரு பெண் கதாபாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாறுதான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஒரு இயக்குநருக்கு நான் செய்யும் மரியாதை. இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம். நன்றி.

பொன்வண்ணன்:

‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப் பார்த்தேன்!

அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது.

ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்துக்கொண்டே இருந்தார்.
நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் … ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.

இதனால்தான், பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.

படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும்,வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , இன்றுவரை பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் , தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக ..
திருடன், வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..!

அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..!

தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ!

வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.!

உங்களின் இந்தபிரச்சனைக்கு “இடைப்பட்ட நாங்கள்” எவ்வளவு வேதனை அடைகிறோம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்..!பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும்.

கவிஞர் சிநேகன்:

நான் இயக்குநர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரது நேர்மையை எடைபோட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை.

பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்துக்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...