No menu items!

ஓபிஎஸ்ஸின் புதுக் கட்சி – மிஸ் ரகசியா

ஓபிஎஸ்ஸின் புதுக் கட்சி – மிஸ் ரகசியா

“ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறாராம். பெயரைக்கூட முடிவு பண்ணிட்டார்னு சொல்றாங்க” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“இரண்டு நாளைக்கு முன்னாடிதானே எடப்பாடிக்கு போட்டியா அதிமுக மாவட்ட செயலாலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார்….. எடப்பாடி வேணும்னா தனிக்கட்சி தொடங்கட்டும்னுகூட சொல்லி இருந்தாரே… ஆனா நீ மாத்திச் சொல்றியே?”

“மத்திய அரசின் ஆதரவு எடப்பாடிக்கு போய்கிட்டிருக்குனு நினைக்கிறார். அதிமுக சார்பா எடப்பாடி தரப்பு தாக்கல் செஞ்ச வரவு செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம் அங்கீகரிச்சதுல அவருக்கு ஷாக். வரவு செலவுக் கணக்கை ஏத்துக்கிட்டாங்கனா எடப்பாடி தரப்பை ஏத்துக்கிட்ட மாதிரிதான்னு கூட இருக்கிறவங்க ஓபிஎஸ்கிட்ட சொல்லியிருக்காங்க. அதனால அதிமுகவை நம்பிக்கிட்டு இருக்க வேண்டாம்னு நினைக்கிறார்”

“ஓபிஎஸ் தனிக் கட்சி ஆரம்பிக்கிறதை பாஜக ரசிக்குமா? ரெண்டு பேரையு சேர்த்துவச்சாதானே ஓட்டு கிடைக்கும்?”

“இப்ப உள்ள சூழல்ல பாஜகவை நம்பறதுக்கு ஓபிஎஸ்க்கு தயக்கம் இருக்கு. இரண்டு அணிகளையும் பாஜக இணைச்சு வச்சாலும் காலப்போகுல தன்னை எடப்பாடி ஒதுக்கிடுவாருங்கிறது ஓபிஎஸ்ஸோட கணக்கு. தேர்தல் வரைக்கும்தான் பாஜக கூட இருக்கும் தேர்தல் முடிஞ்சிருச்சினா தனியாளா நிக்க வேண்டியதுதான்னு கூட இருக்கிறவங்ககிட்ட சொல்லியிருக்காரு. தேர்தலுக்கு முன்னால தனக்குன்னு சொந்தமா ஒரு கட்சியை தொடங்கறது பத்தி பண்ருட்டி ராமச்சந்திரன் கூட ஆலோசனை நடத்திட்டு வர்றார்.

”பேரைக் கூட முடிவு பண்ணிட்டாருனு சொன்னியே…”

“ஆமாம், பாக்கியராஜ் ஏற்கெனவே நடத்தின ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்’ங்கிற பெயரை தனது கட்சிக்கு பயன்படுத்த ஓபிஎஸ் முடிவு செஞ்சிருக்கார். இது சம்பந்தமா பாக்யராஜ் கிட்டயும் பேசி அவரும் ஒகே சொல்லிட்டாராம். கட்சிய ஆரம்பிச்ச பிறகு ஜெயலலிதா பெயரை சொல்றதைவிட எம்ஜிஆர் பெயரை சொல்லுங்க. அவருக்குத்தான் மவுசு அதிகம்’னு பன்ருட்டி ராமச்சந்திரன் அட்வைஸ் பண்ணியிருக்கார். அதனாலதான் நிர்வாகிகள் கூட்டத்தில எம்ஜிஆர்-ஐ தூக்கிவச்சு ஓபிஎஸ் பேசினாராம்.”

“பண்ருட்டி ஆலோசனைல கட்சி நடத்துனா நல்லா வருமா? ஏற்கனவே எல்லா கட்சிக்கும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தவராச்சே அவரு”

“இப்போதைக்கு ஓபிஎஸ் கூட அவர்தான் இருக்காரு…அவர் கூடதான் ஆலோசனை செய்ய முடியும்.. என்ன செய்யறது.” சிரித்தாள் ரகசியா.

“ஒபிஎஸ் தனிக் கட்சினா பாஜக என்ன செய்யும்?”

“பாஜகவை பொறுத்தவரை ஓபிஎஸ்ஸுக்கும், எடப்பாடிக்கும் நடுவுல சமாதானம் பண்ணணும்னுதான் நினைக்கறாங்க. அதுபத்தி எடப்பாடிகிட்ட பேசியும் வர்றாங்க. எடப்பாடிக்கு அண்ணாமலை தடலாடியா அரசியல் செய்யறது பிடிக்கல. அதிமுக தலைமைதான். பாஜகவுக்கு இரண்டாவது இடம்தான்கிறதுல எடப்பாடி பிடிவாதமா இருக்கிறார். அதே சமயத்தில சமாதானம் பேசிக்கிட்டு இருக்கிற நேரத்துல நிர்வாகிகள் கூட்டத்தை ஓபிஎஸ் நடத்தினது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கலை. ஆனாலும் அவங்க ஒரு கூட்டணிக் கணக்கு வச்சிருக்காங்க”
“என்னது?”

“அதிமுககிட்டருந்து மொத்தமா இடங்கள் வாங்கிக்கிட்டு உள் ஒதுக்கீடா ஓபிஎஸ் கட்சிக்கு பிரிச்சுக் கொடுத்துரலாம்னு நினைக்கிறாங்க.”

“அதுக்கு எடப்பாடி சம்மதிப்பாரா?”

“மேற்கு, வடக்கு, சென்னை மண்டலங்கள்ல எடப்பாடி கூட பிரச்சாரம். தெற்கு மற்றும் டெல்டா பகுதிகள்ல ஓபிஎஸ்கூட பிரச்சாரம். இதுதான் பாஜகவின் திட்டம். எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் லைனை க்ராஸ் செய்ய மாட்டாங்க”

“கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு. தொண்டர்கள் ரெட்டை இலைக்கு ஓட்டுப் போடுவாங்களா இல்லாட்டி ஓபிஎஸ்ஸோட புது சின்னத்துக்கு ஓட்டுப் போடுவாங்களா?”

”நல்ல கேள்விதான். இப்போ இப்படி நிலைமை இருக்கு. நாளைக்கே கண்கள் பனித்தனனு கை கொடுத்துக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு”

“தனியா போட்டி போடலாம்னு அண்ணாமலை சொல்லிக்கிட்டு இருந்துலாம் என்னாச்சு?’

“அதை இன்னும் அண்ணாமலை விடல. அதுக்கு தகுந்தா மாதிரி தன் தரப்பு வாதங்களை எடுத்து வச்சிட்டு வர்றார் அண்ணாமலை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல பாஜக 8 சதவீதத்துக்கு மேல வாங்கி இருக்கு. சமீபத்துல நாங்க நடத்தின ஆய்வுல அது 10 சதவீதமா அதிகரிச்சு இருக்கு. அதனால கட்சியை இன்னும் பலப்படுத்த நாடாளுமன்ற தேர்தல்ல தனியா போட்டியிடலாம்னு சொல்லிட்டு இருக்காராம் அண்ணாமலை. அண்ணாமலையை நம்பாதிங்க. தனியா நின்னா கட்சி பயங்கரமா அடி வாங்கும்னு அவருக்கு எதிர் குரூப் மேலிடத்துக்கு தகவல் அனுப்பிக்கிட்டு இருக்கு”

”அதிமுக கூட்டணில இருக்கிற மத்த கட்சிங்கலாம் என்ன முடிவுல இருக்காங்க?”

“புதிய தமிழகம்,, புதிய பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமாகா எல்லாம் இப்போதைக்கு எடப்பாடியுடன் அதிமுக கூட்டணியிலேயே இருக்கலாம்னு முடிவு எடுத்திருக்காங்க. அதனாலதான் இந்த கட்சிகளோட தலைவர்கள் எடப்பாடி தரப்பினர் நடத்துன கிறிஸ்துமஸ் விழாவுல கலந்திருக்காங்க.”

“ராஜ்பவன்ல கிறிஸ்துமஸ் கேக்லாம் வெட்டியிருக்காங்களே…ஆளுநர் உற்சாகமா இருக்கார் போல”

“ஆமா. தமிழ் கத்துக்கிட்டு இருக்கிறார். வர்ற சட்டமன்ற கூட்டத்தொடரை ஆளுநர் உரையோடதான் தொடங்கணும். அப்படி தொடங்கி வைக்கும்போது சட்டசபையில தமிழ்லயே பேச ஆளுநர் திட்டம் போட்டிருக்காராம். அதுக்காக இப்பத்தில இருந்தே தமிழ்ல பேசி பயிற்சி பெற்றுட்டு வர்றார். தான் சனாதன ஆதரவாளர்ங்கிற இமேஜை உடைக்கவும் ஆளுநர் முயற்சி செஞ்சுட்டு வர்றார். இதோட ஒரு பகுதியா அபேத்கர் சிலை திறப்பு, கிறிஸ்துமஸ் விழான்னு கலந்துட்டு வர்றார். அதோட அமீர் மஹாலுக்கும் போயிட்டு வந்திருக்கார்.”

“அண்ணாமலையோட வாட்ச் விவகாரம் பத்தி புதுசா ஏதாவது செய்தி இருக்கா?”

“இப்படி ஒரு வாட்ச் தன்கிட்ட இருக்குன்னு வெளிய பரப்பி அதை விவாதப் பொருளா மாத்துனதே அண்ணாமலைதான்னு அவரோட ஆதரவாளர்கள் பெருமையா பேசிக்கிட்டு இருக்காங்க. வாட்ச் பத்தி திமுககாரங்க பேசுனதும் திமுகவுல இருக்கற அமைச்சர்கள் சொத்து விவகாரத்தை எழுப்புவதுதான் அண்ணாமலையோட பிளானாம். இப்ப 13 அமைச்சர்களோட கோடிக்கணக்கான சொத்துகளைப் பத்தி அண்ணாமலை சேகரிச்சு வச்சிருக்காராம். கூடிய சீக்கிரம் அவர் அதை வெளியிடுவார்னு சொல்றாங்க.”

”வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்திருந்தா…அதுக்கான ஆதாரம் இருந்தா சும்மாவே வெளியிட வேண்டியதுதானே? எதுக்கு ரஃபேல் வாட்ச், தேச பக்தினு கம்பி கட்டுற கதையெல்லாம்?”

“இதையேதான் கமலாலயத்துல இருக்கிற அண்ணாமலை எதிர் கோஷ்டி கேக்குறாங்க. வாட்ச்ல மாட்டிக்கிட்டாரு. அதுலருந்து தப்பிக்க இந்தக் கதையை சொல்றாருனு இவங்க கிண்டலடிக்கிறாங்க”

“விஜய் தன்னோட ரசிகர்களை சந்திச்சிருக்காரே?”

“விஜய், அஜித் ரெண்டு பேர் படமும் பொங்கலுக்கு ஒரே நாள்ல ரிலீஸ் ஆகுது. இந்த நேரத்துல 2 பேரோட ரசிகர்களுக்கும் நடுவுல மோதல் வந்துடக் கூடாதுன்னு இந்த கூட்டத்தை விஜய் கூட்டினதா சொல்றாங்க. அரசியலும் பேசியிருக்காங்க. ரசிகர்கள்கிட்ட இந்த அரசைப் பற்றி மக்கள் என்ன நினைக்கறாங்கன்னு விஜய் கேட்டு தெரிஞ்சுக்கிட்டாராம். . கூடவே மக்கள் பிரச்சனையை அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். அப்படியும் செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்துங்கள்னு யோசனை சொல்லி இருக்காராம். மாவட்டம் மாவட்டமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு தொடருமாம். மகன் இப்போதுதான் தான் காட்டிய வழியில் போய்க்கொண்டு இருக்கிறார் இப்போது நாம் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்ப்போம் என்று குஷியாக இருக்கிறாராம் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.”

“தான் நினைத்த வழியில பிள்ளைங்க நடந்தா அப்பாக்களுக்கு சந்தோஷம்தானே”

“ஆமாம், கூட சேர்த்துக்கிட்டு நடந்தாங்கனா இன்னும் சந்தோஷமா இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...