No menu items!

ஒரு வார்த்தை: மீண்டும் மு.க.ஸ்டாலின்

ஒரு வார்த்தை: மீண்டும் மு.க.ஸ்டாலின்

இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி கூடிய திமுக பொதுக் குழு, பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு செயல்தலைவர் என்ற கூடுதல் பொறுப்பைத் தந்தது. திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு 2018 ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

முதல் முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் முன் இருந்த சவால்கள் வேறு. இப்போதுள்ள சவால்கள் வேறு. அப்போது திமுக ஆட்சியில் இல்லை. வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்ற சவால் இருந்தது. ஆனால் அந்த சவால் சற்று எளிதானது. ஜெயலலிதா மறைவு, அதிமுக கோஷ்டி சண்டை, அதிமுகவின் பத்தாண்டு ஆட்சி.. என திமுகவுக்கு சாதகமான சூழலே இருந்தது. அந்த சாதகமான சூழலை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 38ல் திமுக கூட்டணி வென்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவுக்கு சுலபமான வெற்றிதான். ஆட்சியைப் பிடித்துவிட்டது.

ஆனால் இப்போது 2022ல் திமுகவுக்கு இருக்கும் சவால்கள் தீவிரமானவை. ஆட்சியில் இருக்கிறது. வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து எதிர்க் கட்சிகள் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக மத ரீதியான பிரச்சினைகளை எழுப்புகிறது. திமுக தலைவர்களின் பேச்சுக்களும் செயல்களும் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகின்றன. ஆளும் கட்சி இடைத் தேர்தல்களில் வெற்றிப் பெறுவது எளிது ஆனால் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறுவது சிரமம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் திமுக, அதிமுக என்றே மாற்றி மாற்றி வெற்றி வாய்ப்பை தந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். 1980லும் ஜெயலலிதா 2016லும் தொடர்ந்து வெற்றிப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள். அந்த சாதனையை ஸ்டாலின் செய்வாரா? ஆனால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. 2025ல்தான் தமிழ்நாட்டு சட்டப் பேரவைத் தேர்தல்.

ஆனால் அதற்கு முன்பு 2023ல் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது. நேற்றைய பொதுக்குழு கூட்டத்திலும் ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசியிருக்கிறார். தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். உடனடியாக பூத் கமிட்டி அமைக்க வேண்டிய பணிகளைத் துவங்குங்கள் என்று கூறியிருக்கிறார். அந்தப் பணிகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை ஸ்டாலினின் பேச்சு சொல்கிறது.

திமுக தலைவர் பேச்சில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் பாஜக குறித்தானது. அதிமுக கலகலத்து நிற்கிறது என்று அதிமுகவை ஓரம் தள்ளும் ஸ்டாலின் பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அந்தக் கட்சியைக் குறித்து அதிகம் பேசியிருக்கிறார். கீழ்த்தரமான அரசியல் செய்கிறது, மதத்தை வைத்து மக்களைத் தூண்டுகிறது என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார். பாஜக குறித்து ஸ்டாலின் அதிகம் பேசியிருப்பது தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்றுதான் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான சவால் என்றாலும் தேர்தலுக்கு முன் திமுக சரி செய்ய வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன.

அன்றைய திமுக கீழ்மட்டத்தில் வேரூன்றி இருந்தது. இன்றைய திமுக அப்படி இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்துக்கு காரணங்கள் இருக்கின்றன.

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த சம்பவத்தையொட்டி அங்கு நடந்த கலவரம் ஒரு உதாரணம். பள்ளியில் மாணவி இறந்ததைத் தொடர்ந்து அங்கு கலவரச் சூழல் இருக்கிறது என்பதை உளவுத் துறை கணிக்கத் தவறியது என்றாலும் அங்கிருந்த திமுகவினர் எப்படி கணிக்கத் தவறினார்கள்? அந்தச் சூழலைத் தலைமைக்கு எப்படி சொல்லாமல் இருந்தார்கள்? தலைமைக்கும் அவர்களுக்கும் இடைவெளி இருக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. கலைஞர் காலத்தில் திமுகவினர் தலைமையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் மாவட்ட சூழலை தலைமைக் கழகத்துக்கு எடுத்துச் சொல்லக் கூடிய சூழல் இருந்தது. இப்போது அப்படி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த மே மாதம் மதுரை மருத்துவக் கல்லூரியில் வழக்கமாக எடுக்கப்படும் ஹிப்போக்ரடிக் உறுதி மொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக சபதம்’ என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. வழக்கமான உறுதிமொழி மாற்றப்பட்டு புதிய உறுதிமொழி எடுக்கப்படுவது யாருக்கும் தெரியவில்லை. இது திமுகவின் மாணவர் அமைப்பு சரியாக செயல்படவில்லை அல்லது மதுரை மருத்துவக் கல்லூரியில் திமுக மாணவர் அமைப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. திமுகவின் மாணவரமைப்பு சரியாக இருந்திருந்தால் சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டிருக்காது. ஒரு கட்சியின் மாணவரமைப்பு சரியாக செயல்படவில்லை என்றால் அது கட்சிக்குப் பலவீனமே.

இந்த சம்பவங்கள் திமுகவின் வேர் பலமாக இருக்கிறதா என்பதை சந்தேகத்துக்கு உள்ளாக்குகின்றன. திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கீழ்மட்ட தொண்டர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

நேற்றைய பொதுக் குழுவில் ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல் திமுகவினர் சிலரின் பேச்சுக்களும் செயல்களும் அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை மட்டுமல்ல, பலவீனத்தையும் உருவாக்குகிறது.

சேலம் எட்டு வழி சாலை திட்டத்தில் திமுக சிக்கிக் கொண்டதற்கு காரணம் அமைச்சர் எ.வ.வேலு கையாண்ட விதம்தான். சில திட்டங்களை எதிர்க் கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பதும் ஆளும் கட்சியானதும் ஆதரிப்பதும் கட்சிகளின் வரலாற்றில் உண்டு. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல. ஆனால் அதை எப்படி கையாள்கிறீர்கள் என்பதில்தான் அந்தக் கட்சியின் சாமர்த்தியம் இருக்கிறது.
எட்டு வழிச் சாலை குறித்து அமைச்சர் எ.வ.வேலுவின் அதிரடியான பேச்சுகள் பெருத்த அதிருப்தியை எழுப்பின. இது சமூக ஊடகங்களின் காலம்.

எல்லாவற்றுக்கும் சான்றுகளை நோண்டி எடுத்துவிட முடியும். உடனடியாக பரப்பவும் முடியும். எட்டுவழி சாலையை திமுக எதிர்க்கவே இல்லை என்று அமைச்சர் கூறியது உடனடியாக மறுக்கப்பட்டது. விவசாயிகள் குறித்து அமைச்சர் சொன்ன கருத்துக்களும் சர்ச்சையாயின. பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததும்தான் அமைச்சர் அமைதியானார். ஆனால் அதற்குள் நிலைமை மோசமாகிவிட்டது.

இந்தத் திட்டத்தை கலைஞர் எப்படி கையாண்டிருப்பார்? முதலில் எட்டு வழி சாலை காலத்தின் தேவை என்று யாராவது ஒரு முக்கியப் புள்ளியை கருத்துக் கூற வைத்திருப்பார். அது குறித்து செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க சொல்லி அதற்கு மென்மையாக பதிலளித்திருப்பார். கூட்டணிக் கட்சியிலிருந்து ஒரு குரல் எழும்ப செய்திருப்பார். அதற்கு பதிலளித்திருப்பார். மெல்ல மக்கள் மனநிலையை எட்டு வழிசாலையை நோக்கி திருப்பியிருப்பார். இறுதியில் ஒரு குழு அமைத்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருப்பார். நிச்சயம் எ.வ.வேலு கையாண்டது போல் தடாலடியாக கையாண்டிருக்க மாட்டார்.

எ.வ.வேலு மட்டுமல்ல, பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் போன்றவர்களின் பேச்சுக்களும் செய்கைகளும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பின. கட்சியினர் கவனமாக செயல்பட வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் பேசிய பொதுக் குழு கூட்டத்திலேயே டி.ஆர்.பாலுவுக்கு செருப்பு அணிவித்துவிடும் சம்பவமும் நடந்தது. அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. ஒரு பக்கம் காலில் விழாதீர்கள் என்ற கனிமொழி காணொலி பரவிக் கொண்டிருக்கும் நிலையில் டி.ஆர்.பாலுவின் காலணி காட்சிகளும் பரவுகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் தடுக்க வேண்டியது உளறல்களையும் செய்கைகளையும்.

இந்தப் பட்டியலில் ஆ.ராசா வரமாட்டாரா? அவர் பேச்சுக்களும் விமர்சனங்களை கிளப்பின. அதில் திமுகவுக்கு நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. ஆ.ராசாவின் கருத்துக்கள் பாஜக விமர்சனம் செய்ய வாய்ப்புகளைக் கொடுத்தாலும் திராவிட இயக்க அடிப்படைக் கொள்கைகளை தீவிரமாக ஆ.ராசா பேசுவது திராவிட சிந்தனையுடைவர்களுக்கு ஏற்புடையதாகதான் இருக்கும். இது திமுகவுக்கு நிச்சயம் பலம் கொடுக்கும்.

திமுகவுக்கு மற்றொரு பெரிய சவாலாக மாறப்போவது சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை, பெட்ரோல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய்…இப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியிருந்தாலும் எதிர்க் கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. முக்கியமாய், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது எதிர்க் கட்சிகளுக்கு வசதியாக இருக்கிறது.
திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களும் திமுகவுக்கு தலைவலியாக இருக்கிறது. உதாரணமாய் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தாமதமாகிக் கொண்டே இருக்கின்றன. பல சாலைகள் குண்டும் குழியுமாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பெரும் பள்ளங்களாவும் இருக்கின்றன. மழைக் காலம் தொடங்கிவிட்டது. மக்கள் அவதியுறத் தொடங்கிவிட்டனர். அரசை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். மழை நீர் வடிகால் பணிகள் முக்கியம்தான். ஆனால் அந்த முக்கியத்துவம் இது போன்ற சொதப்பலான பணிகளால் அடிப்பட்டு போய்விடுகிறது.

மு.க.ஸ்டாலினின் மற்றொரு தலைவலி மத்திய அரசுடனான உறவு. உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் என்று திமுக காலம் காலமாக முழங்கினாலும் எதிர்க் கட்சியாக இருந்தபோது பாஜகவை எதிர்த்தது போல் இப்போது எதிர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது மோடி எதிர்ப்பு என்ற வியூகம். ஆனால் இன்று பாஜகவை எப்படி கையாள்வது என்பதில் திமுக குழப்ப மனநிலையில் இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. பாஜக கையில் எடுக்கும் மத அரசியல் திமுகவுக்கு புதிது. மத அரசியலை எதிர்ப்பதையும் மதசார்பற்ற நிலையை வலியுறுத்துவதையும் இந்துக்களை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது என்ற பிம்பத்தை பாஜக கட்டமைத்து வருகிறது. அந்த பிம்பத்தை உடைப்பது வருங்காலத்தில் திமுகவுக்கு பெரிய சவாலாக இருக்கும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். விரைந்து முடிவெடுக்கிறார். மக்கள் நலப் பணிகளை முடுக்கிவிடுகிறார். He is more dangerous than Karunanidhi என்று பாஜகவினரை பேச வைக்கிறார். இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்று பாராட்டப்படுகிறார்……இப்படி பல புகழுரைகள் காதுகளில் விழுந்துக் கொண்டே இருக்கும். ஆனால் புகழுரைகள் வெற்றிகளைத் தராது.

கண் முன் இருக்கும் சவால்களில் சறுக்கிவிடாமல் சமாளித்து சாதிப்பதே வெற்றி.

ஆகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வார்த்தை – கவனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...