No menu items!

ஒரு வார்த்தை: கவர்னர் ரவி – பாஜகவின் பலவீன வியூகம்?

ஒரு வார்த்தை: கவர்னர் ரவி – பாஜகவின் பலவீன வியூகம்?

தமிழ்நாட்டு சட்டப்பேரவை இதுவரை கண்டிராத காட்சிகளைக் கண்டிருக்கிறது.

புத்தாண்டில் சட்டப் பேரவை கூடுவதும், ஆளுநர் உரையுடன் தொடங்குவதும் மரபு. ஆளுநர் உரையை அரசு தரப்பிலிருந்து தயாரித்துக் கொடுப்பதும் அதை அவர் வாசிப்பதும் மரபு. அவர் அப்படி வாசித்து முடித்ததும் அவருக்கு நன்றி தெரிவித்து சட்டப் பேரவையில் பேசுவதும் மரபு. சட்டப் பேரவை நிகழ்வுகள் முடியும் வரை இருந்து தேசிய கீதம் பாடிய பிறகு ஆளுநர் செல்வது மரபு.

ஆனால் இந்த ஆண்டின் சட்டப்பேரவைத் துவக்கக் கூட்டத்தில் இந்த மரபுகள் அனைத்தும் மீறப்பட்டிருக்கின்றன.

அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. சில பகுதிகளை தவிர்த்துவிட்டார். சில பகுதிகளை அவராகவே சேர்த்திருக்கிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து அவர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசிக்க, தேசிய கீதம் இசைத்து நிகழ்வு முடியுவரை காத்திராமல் ஆளுநர் ரவி சட்டென்று கிளம்பிவிட்டார்.

கவர்னர் ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் மோதல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. அதன் உச்சக் கட்டம் இந்த நிகழ்வு.

2021 செப்டம்பரில் தமிழ்நாட்டு ஆளுநராக ரவி பொறுப்பேற்றபோதே சர்ச்சைகள் வந்தன. ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரியை தமிழ்நாட்டு ஆளுநராக நியமிப்பது மாநில அரசுடன் மோதலில் ஈடுபடதான் என்ற கருத்துக்கள் எழுந்தன. அவை உண்மை என்பது ஆளுநரின் தொடர் செயல்பாடுகளில் தெரிகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் துறை சார்ந்த திட்ட அமலாக்கத்தின் செயல்பாடுகளை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்ற தலைமைச் செயலரின் கடித்தத்தில் முதல் சர்ச்சை தொடங்கியது.

அதன்பிறகு நீட் மசோதா தாமதம், மற்ற மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் இருப்பது என்று நீண்டது. அது மட்டுமில்லாமல் மேடைகளில் ஆளுநர் ரவி பேசும் சர்ச்சைக் கருத்துக்கள் தமிழ்நாட்டு அரசியலில் அனல் பறக்க வைத்தன.

‘பாரதம் என்பது சனாதனக் கொள்கைகளின் அடிப்படையில் உருவானது’ என்று பேசினார்.

ஆதிபகவன் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதை ‘ப்ரைமல் டெய்டி – Primal Deity என்று ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு செய்திருப்பது தவறு என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி, ஆதிபகவன் என்பதை உலகை உருவாக்கியவர் என்று குறிப்பிட வேண்டும் ஆனால் ஜி.யு.போப் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் ஜி.யு.போப் இந்தியாவுக்கு கிறிஸ்துவத்தை பரப்ப வந்தவர் திருக்குறள் ஆன்மிகப் புத்தகம் என்றும் கூறினார். அது மட்டுமில்லாமல், ‘அரசியலுக்காக திருக்குறளை பயன்படுத்துகிறார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

சென்னையில் நடந்த ஹரிஜன் சேவா சங்க விழாவில் பேசும்போது முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது என்று மற்றொரு சர்ச்சையைக் கிளப்பினார். கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து பேசும் போது இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பின்னர்தான் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஏன் இந்த தாமதம்? என்ற கேள்வியை எழுப்பினார்.

சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ துளசியின் நூற்றாண்டு விழாவில் பேசிய போது, ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்துதான் இருக்க முடியும், இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்று குறிப்பிட்டார் ரவி.
தமிழ்நாட்டு ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசுக்கு வைத்தது மாநில அரசு.

இந்தக் கோரிக்கையை வைத்தப் பிறகும் விழாக்களில் ஆளுநரும் முதல்வரும் ஒன்றாக கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் இந்த வருட துவக்கத்தில் மற்றொரு சர்ச்சை. தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று பேசினார் கவர்னர்.

இப்படி பல சர்ச்சைகள் தொடர்ந்துக் கொண்டிருந்தது சட்டப்பேரவையில் தீவிரமாக முடிந்திருக்கிறது.
அரசு தந்த உரையில் ஆளுநர் ரவி தவிர்த்த வார்த்தைகள் தவறானவைகளோ வன்முறையை தூண்டுபவையோ அல்லது அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளோ அல்ல.

திராவிட மாடல் என்ற பத்தியை தவிர்த்திருக்கிறார். சமூகநீதி, உள்ளடக்கிய வளர்ச்சி, சுய மரியாதை என்று குறிப்பிருந்த பகுதிகளை படிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது அமைதிப் பூங்காவாக உள்ளது என்று அரசு சொன்னதையும் சொல்ல மறுத்திருக்கிறார். கோயில் நிலங்கள் மீட்பு குறித்தும் பேசவில்லை. முக்கியமாய் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார்.

இப்படி படிக்காமல் தவிர்த்தது மட்டுமில்லாமல் சில வரிகளை உரையில் சேர்த்திருக்கிறார். மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டது என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். நீட் மாணவர்களுக்கு சிரமத்தை தருகிறது என்று தமிழ்நாடு அரசு எழுதியிருந்ததை நீட் தேர்வு மாணவர்களுக்கு சிரமத்தை தரும் என்று அரசு கருதுகிறது என்று மாற்றிப் படித்தார்.

இவையெல்லாம் நடந்துக் கொண்டிருக்கும்போதே அவருக்கு எதிரான தீர்மானம் எழுதப்பட்டு அது நிறைவேற்றப்படும்போது கவர்னர் வேகமாக வெளியேறிவிட்டார்.

சட்டப் பேரவை சம்பவங்களுடன் பிரச்சினை நிற்கவில்லை. ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னம் நீக்கப்பட்டு இந்திய அரசின் சின்னம் மட்டும் வைக்கப்பட்டிருக்கிறது. இது மேலும் சூழலை தீவிரமாக்கியிருக்கிறது.

அரசு கொடுக்கும் உரையை வாசிப்பது என்பது ஆளுநருக்கு கட்டாயமல்ல என்பது பாஜகவினரின் வாதம். ஆனால் அப்படி அல்ல என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

சட்டப் பேரவைக்கு என்று ஒரு மரபு இருக்கும்போது அதை மீறுவது சரியான செயல் அல்ல என்பதுதான் அவர்கள் வாதம். அரசு தயாரித்து தரும் உரையை வாசிப்பதுதான் ஆளுநரின் பணி. மாநிலங்களில் மட்டுமல்லாமல் மத்திய அரசு தயாரித்துத்து கொடுக்கும் உரையைதான் குடியரசுத் தலைவர் வாசிப்பார் இது மரபு.

அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு என்பது அரசமைப்பு சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர். அதை நான் சொல்லமாட்டேன் என்று அரசமைப்பு சட்டத்தின்படி பதவியில் இருக்கும் ஒருவர் கூறுவது தவறானது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆளுநர்களின் செயல்களுக்கு பாஜகவினரும் அதிமுவினரும் முட்டுக்கொடுத்தாலும் அவரது செயல்கள் அரசியல் ரீதியாக திமுகவுக்குதான் பலனளிக்கும்.

தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று கவர்னர் சொல்லுகிறார் என்று திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் செய்யும் பரப்புரை நிச்சயம் தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும்.

பெரியார், காமராஜர், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை கவர்னர் சொல்ல மறுக்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொன்னால் அது கவர்னருக்கும் அவரை கொண்டாடும் பாஜகவினருக்கும் சிக்கலைதான் கொடுக்கும்.

கவர்னர் முன்னிலையில் அவருக்கு எதிராக ஒரு தீர்மானத்தை சில நிமிடங்களில் நிறைவேற்றி காட்டியிருப்பதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் தான் சும்மா பேசிவிட்டுப் போகிறவன் அல்ல, செயலில் காட்டுபவன் என்பதை நிருபித்திருக்கிறார். இதுவும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடும்.

கவர்னரின் செயல்கள் பாஜகவின் தமிழ்நாட்டு முயற்சிகளுக்கு சறுக்கல். ஆளுநர் ரவி பாஜகவின் பலவீன வியூகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...