No menu items!

அண்ணாமலை First மோடி Next

அண்ணாமலை First மோடி Next

“நீங்க வாரிசு பக்கமா? துணிவு பக்கமா? எந்த படத்தை முதல்ல பார்க்கப் போறீங்க?” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“எல்லோரும் முதல்வரா கவர்னரானு இருக்காங்க, நீ வாரிசா துணிவானு இருக்கிறியே..பொலிடிக்கல் நியூஸ் தராம சினிமா பக்கம் போய்ட்டியே?”

“வாரிசு, துணிவு ரீலிசிலும் பாலிடிக்ஸ் இருக்கு. இரண்டு படங்களில் எந்தப் படத்துக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது பிரச்சினையே. படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கும் விஷயத்தில் பல ஊர்களில் பெரிய அளவில் பஞ்சாயத்து நடக்குது.”

“பஞ்சாயத்துக்கு காரணம் ரெட் ஜெயண்ட்டா? தனிப்பட்ட நபரிடம் தியேட்டர்கள் சிக்கியிருப்பதாக திருமாவளவன்கூட மறைமுகமாக புகார் கூறியிருக்கிறாரே?”

“திருமாவளவன் அப்படி சொன்னதற்கு காரணமே வேறு.”

“என்ன காரணம்?”

“சமீப காலமாக திமுகவுடன் பாமக நெருங்கி வந்துகொண்டு இருக்கிறது. இதை திருமாவளவன் ரசிக்கவில்லை. அதோடு பாமகவுக்காக திமுக தங்களை கழற்றிவிட்டாலும் விடும் என்று திருமாவளவன் நினைக்கிறார். அந்த கோபத்தில்தான் ஒரு விழாவில் பேசும்போது, ‘சினிமா உலகம் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் சிக்கி இருக்கிறது. ஒரு தனிப்பட்ட நபரிடம் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? விநியோகஸ்தர்களின் நிலை என்ன? நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை’ என்று பேசி இருக்கிறார் திருமாவளவன். தான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று திருமா சொன்னாலும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தைப் பற்றித்தான் அவர் பேசினார் என்பது இண்டஸ்ட்ரி டாக்”

“இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திருமாவளவனை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியிருக்கிறாரே?”

“தான் அமைச்சரானதற்கு வாழ்த்துப் பெறும் சாக்கில் திருமாவளவனை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது தனிப்பட்ட முறையில் இருவரும் பேசியிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின், ‘என்னால் சினிமா துறையில் யாரும் நஷ்டப்படவில்லை. எல்லோருக்கும் என்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறேன். என்னால் பாதிக்கப்பட்டதாக உங்களிடம் யாராவது புகார் சொல்லி இருக்கிறார்களா’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு திருமாவளவன், ‘பரவலாக வரும் விமர்சனங்களைப் பற்றித்தான் நான் பேசினேன்’ என்று கூறியிருக்கிறார். அந்த விமர்சனங்கள் எல்லாம் தவறு என்று கூறிய உதயநிதி ‘சினிமா துறைக்கு நான் உதவிகரமாகத்தான் இருக்கிறேன். அதையும் மீறி எனக்குத் தெரியாமல் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் என்னை சந்திக்க சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.”

“பாமக நட்பு பத்தி திருமா ஏதாவது பேசினாரா?”

“லேசாய் சொன்னாராம். அதற்கு உதயநிதி, நீங்க கவலைப்படாதிங்க, உங்களுக்கான இடம் எப்பவும் இருக்குனு விளக்கம் கொடுத்தாராம்”

“பாமகவும், திமுகவும் நெருங்குவதாக நீ சொல்கிறாய். ஆனால் நெய்வேலி நிர்வாகத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் நடத்திய பாதயாத்திரையில் உள்ளூர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறாரே?”

“அது உள்ளூர் பிரச்சினை. தேர்தல் சமயத்தில் எம் ஆர் கே பன்னீர்செல்வத்துக்கும், அன்புமணிக்கும் இடையே நடக்கும் பனிப்போர்னு சொல்றாங்க. ஒண்ணு கவனிச்சிங்களா, அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு திமுகவோ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வவோ எந்த கருத்தும் சொல்லவில்லை. அது மட்டுமில்ல, சட்டப்பேரவைல கவர்னரை எதிர்த்து பாமக குரல் கொடுத்துருக்கு அதையும் பாருங்க”

“எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் ஆளுநரின் உரையை அதிமுக புறக்கணிக்கப் போவதாக முதலில் கூறப்பட்டதே. பிறகு எப்படி அவர்கள் ஆளுநர் உரையின்போது அவையில் இருந்தார்கள்.”

“ஆளுநர் உரையின்போது அவருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று பாஜக முன்பே யூகித்திருந்தது. அப்படி நடந்தால் சட்டப் பேரவையில் ஆளுநருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜகதான் எடப்பாடி அணியை அவையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்களாம். அவர்களும் சட்டப் பேரவையில் ஆளுநருக்கு ஆதராக நடந்துகொண்டதுடன், திமுக அரசைக் கண்டித்து வெளிநடப்பும் செய்துள்ளனர்.”

“அமைச்சர் சேகர்பாபு தனது தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதாக கேள்விப்பட்டேனே.”

“பொங்கல் மட்டுமல்ல. எல்லாப் பண்டிகைகளுக்கும் தொகுதி மக்களுக்கு சேகர்பாபு பரிசுகளை வழங்கி வருகிறார். தீபாவளி என்றால் பட்டாசு இனிப்பு வழங்குகிறார். கிறிஸ்மஸ், புது வருடத்துக்கும் இந்தப் பரிசுப்பை வழங்கும் விழா தொடர்ந்தது. இப்போது பொங்கலுக்கும் தனியாக பரிசுப்பை வழங்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதனால் மற்ற தொகுதி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு மீது கடுப்பாக இருக்கிறார்கள். ‘இவர் வருமானம் பார்க்கும் துறையில் அமைச்சர் என்பதால் இப்படிப் பைகளை வாரி வழங்குகிறார். நாங்கள் தேர்தலுக்கு வாங்கிய கடனே இன்னும் அடைத்த பாடில்லை’ என்று புலம்பி தீர்க்கிறார்களாம்.”

“அண்ணாமலையைப் பற்றிய செய்திகள் ஏதும் இல்லையா?”

“அண்ணாமலைக்கு எதிராக அவரது எதிரணி புதிதாக ஒரு புகாரை டெல்லிக்கு தட்டி விட்டிருக்கிறது. இது நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என்றும் நம்புகிறது எதிரணி. ‘மற்ற மாநிலங்களில் பாஜக மாநில தலைமை எல்லா புகழும் மோடிக்கே என்ற அளவில் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அண்ணாமலை ஃபர்ஸ்ட்.. மோடி நெக்ஸ்ட் என்ற அளவில் அண்ணாமலை தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறார். தொண்டர்கள் தனது துதியைப் பாடவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ‘ என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாம்.”

“கோட்டை செய்திகள் ஏதாவது இருக்கிறதா?”

“கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களை என்ஐஏ அமைப்பு விசாரித்தபோது அதிர்ச்சிகரமான ஒரு தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சில சதி வேலைகளுக்காக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவலை தமிழக காவல்துறையிடம் என்ஐஏ பகிர்ந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளும் இதுபற்றி முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு முதல்வர், ‘விடுதலைப் புலிகள் நமக்கு வேண்டவே வேண்டாம். சம்பத்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அப்போது தமிழ்நாட்டில் சில இயக்கங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் குரல் தருவது பற்றி காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்ட, அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வர் ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாராம்.”

”சரி, கடைசியா ஒரு விஷயம்..”

“என்ன நியூஸ் வேணும்?”

“நியூஸ்லாம் வேண்டாம். துணிவு, வாரிசுக்கு டிக்கெட் வாங்கிக் கொடேன் உன் இன்ஃப்ளுயன்சை யூஸ் பண்ணி”

”ஆளை விடுங்க” என்று ரகசியா சிரித்துக் கொண்டே கிளம்பினாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...