No menu items!

ஒரே நாடு ஒரே தேர்தல் – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

ஒரே நாடு ஒரே தேர்தல் – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

ஒரே நாடு ஒரே தேர்தல் – 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது. அதற்காக தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்தது. ஆனல் முடியவில்லை. இப்போது மீண்டும் அந்தக் கோஷங்கள் அதிகம் ஒலிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயார் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் கூறியிருந்தார். இப்போது மத்திய சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளின் நிலை குறித்து அறிந்து வருகிறது.

அதிமுக இந்தத் தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுக எதிர்ப்பு சொல்லியிருக்கிறது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. எதிர்க் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அது என்ன ஒரே நாடு ஒரே தேர்தல் முறை?

எளிமையாக சொல்வதென்றால் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது.

இந்தியா சுதந்திரம் பெற்று 1950-ல் குடியரசாக மாறிய பிறகு நடந்த 1952 பொதுத் தேர்தலிலிருந்து முதல் நான்கு பொதுத் தேர்தல்கள் – 1952, 1957, 1962, 1967 – ஆகிய ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே நாளில் நடத்தப்பட்டன.

ஆனால் அதன்பிறகு சில மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட்டதால் அந்த மாநிலங்களுக்கு தனித்தனியே தேர்தல் நடத்தும் சூழல் உருவாகியது. அதன்பிறகு அரசியல் சூழல்கள் முழுமையாக மாறியதால் நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துகின்ற முறையும் மாறிப்போனது.
அப்போது நாடு முழுக்க ஒரே நாளில் தேர்தல் நடத்தியதுபோல் இப்போதும் நடத்த வேண்டும் என்கிறது பாரதிய ஜனதா. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே மதம், ஒரே நாடு ஒரே சந்தை….போன்ற வரிசையில் ஒரே நாடு ஒரே தேர்தலையும் பாஜக முன்னிறுத்துகிறது என்கின்றன எதிர்க் கட்சியினர்.
நாடு முழுக்க ஒரே நாளில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதால் பல சாதகங்கள் இருக்கின்றன என்கின்றன இந்த முறையின் ஆதரவாளர்கள்.

மாநிலங்களுக்கும் மத்தியிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்திவிட்டால் செலவு குறையும்.
ஒரே நாளில் தேர்தல் முடிந்துவிடுவதால் அரசு அதிகாரிகளின் வேலை நேரங்கள் பாதிக்கப்படாது.
இப்போது இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கட்சிகள் வளர்ச்சிப் பணியில் ஈடுபடுதைவிட தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது. ஒரு முறையுடன் தேர்தல் முடிந்துவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சிக்கு வரும் கட்சிகள் வளர்ச்சிப் பணியில் மட்டும் கவனம் செலுத்த இயலும்.

ஆட்சிக்கு வரும் கட்சிகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேர்தலைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அதனால் வாக்கு நோக்கு திட்டங்களைவிட தீர்க்கமான திட்டங்களை செயல்படுத்த முடியும். உதாரணமாய் மத்தியில் ஆளும் கட்சி ஒரு முடிவெடுக்க வேண்டுமென்றால் அடுத்தடுத்து மாநிலத் தேர்தல்கள் வந்தால் தங்கள் முடிவால் அந்தத் தேர்தல்களில் வாக்குகள் பாதிக்கப்படுமா என்று கவலைப்பட வேண்டியதில்லை.
இப்படி பல சாதக அம்சங்கள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் இந்த முறையை எதிர்ப்பவர்களும் ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலையும் பார்ப்போம்.

ஒரே நாளில் மாநிலத்துக்கும் மத்தியிலும் தேர்தல் வைத்தால் பிரச்சினைகளை முழுமையாக மக்களிடம் பேச இயலாது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் ஒரே நாளில் தேர்தல் என்றால் மாநிலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசுவதா அல்லது மத்தியிலுள்ள பிரச்சினைகளைப் பேசுவதா என்ற குழப்பம் ஏற்படும்.
ஒரே நாள் தேர்தலில் தேசியக் கட்சிகளுக்குதான் முக்கியத்துவம் கிடைக்கும் மாநிலக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் கிடைக்காது.

ஒரே நாளில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் வாக்களிப்பது என்பது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் அவர்களால் தெளிவான முடிவெடுக்க முடியாது.

ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது பாதுகாப்பு குறைபாடுகளைக் கொடுக்கும்.

மிக முக்கியமாக, ஒரே நாளில் தேர்தல் முடிந்து, அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலை வந்தால் கட்சிகளுக்கு மக்கள் மீதான எந்த பயமும் இருக்காது. அவ்வப்போது தேர்தல் வந்தால்தான் தேர்தலுக்காக மக்களை கட்சிகள் சந்திக்கும். மக்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய நிலை இருக்கும்.

இவையெல்லாம் ஒரே நாள் தேர்தலை எதிர்ப்பவர்கள் கூறுவது.

இந்த இரண்டு பட்டியலையும் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

1952 முதல் 1967 வரை ஒரே நாளில்தானே அனைத்து தேர்தல்களும் நடந்தன அது போல இப்போது நடத்தக் கூடாதா என்கிறார்கள். ஆனால் 1952-ல் நமது மக்கள் தொகை 37 கோடி 1967ல் 50 கோடி. இன்று 140 கோடி. இதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தேர்தல் செலவுகள் குறையும் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் தேர்தல் வைத்தால் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவில் கூடுதல் செலவு ஆகும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் வருடம் முழுக்க மாநிலத் தேர்தல்களுக்கு செலவழிக்கும் தொகையை வைத்துப் பார்த்தால் இந்த ஒன்பதாயிரம் கோடி குறைவுதான்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் ஒரே நாளில் தேர்தல் வந்தால் அது தேசியக் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் மாநிலப் பிரச்சினைகளைப் பேச இயலாது என்று கூறப்படுகிறது.
1967க்குப் பிறகு நான்கு முறை தமிழ்நாட்டில் ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்திருக்கிறது.

1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக சட்டப் பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 205 இடங்களைப் பெற்றது. திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் இந்திரா காந்தி ஆட்சி அமைத்தார்.

1984 டிசம்பர் மாதம் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடந்தது.
சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் அணி – 195 இடங்களை வென்றது திமுக, ஜனதா கூட்டணி 34 இடங்களில் வென்றது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 2 இடங்களில் வெற்றிப் பெற்றது. மத்தியில் ராஜீவ் காந்தி பிரதமராக காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
1991 ( இரு தேர்தல்களும் மே, ஜூன் காலக் கட்டத்தில் நடந்தது). சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி 225 திமுக, தேசிய முன்னணி – 7

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களை வென்றது. திமுக கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. மத்தியில் காங்கிரஸ் -அதிமுக கூட்டணி 232 தொகுதிகள் பெற்று ஆட்சி அமைத்தது. தேசிய முன்னணி ஆட்சியைப் பறி கொடுத்தது. திமுக இடம்பெற்ற தேசிய முன்னணி 69 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பாஜக கூட்டணி – 120 இடங்கள்.
1996 இரு தேர்தல்களும் ஒரே காலக் கட்டத்தில் (ஏப்ரல் – மே) நடந்தன.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக, ஐக்கிய முன்னணி – 221 அதிமுக, காங்கிரஸ் அணி – 4
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, ஐக்கிய முன்னணி கூட்டணி 39 இடங்களை வென்றது. 161 இடங்களில் வெற்றிப் பெற்றது பாஜக. வாஜ்பாய் ஆட்சி அமைத்தும் மெஜாரிட்டி நிருபிக்க முடியாததால் ஐக்கிய முன்னணி ஆதரவுடன் தேவ கவுடா பிரதமரானார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

இந்த நான்கு தேர்தலையும் பார்க்கும்போது நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் ஒரே அணியைதான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மாநிலத்துக்கு வேறாகவும் மத்தியில் வேறாகவும் மக்கள் பார்க்கவில்லை என்பது தெரிகிறது.

ஆனால் இந்த நான்கு தேர்தல்களுமே அசாதரண சூழல்களில் நடந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். 1971ல் அண்ணா இறந்தப் பிறகு கருணாநிதி தலைமையில் திமுக சந்தித்த தேர்தல். காங்கிரஸ் உடைந்து இந்திரா காந்தி தனிப் பெரும் தலைவராக உருவாகும் போது நடந்த தேர்தல்.

1984 தேர்தலின் போது எம்.ஜி.ஆர். உடலநலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த தேர்தல். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டப் பிறகு நடந்த தேர்தல்.

1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டப் பிறகு நடந்த தேர்தல்.

1996ல் ஜெயலலிதா மீது மிகத் தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிறைந்த தேர்தல்.

ஆகவே இந்தத் தேர்தல்களைப் பொதுப்படத்த முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதுதான். ஆனால் தேசிய அளவில் நடந்த சம்பவங்கள் மாநில அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை கவனிக்க முடிகிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொலைகள் மாநில அளவில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதைதான் கட்சிகள் சொல்லுகின்றன.

பாஜக போன்ற பண பலமும் சமூக ஊடக பலமும் கொண்ட கட்சி தேர்தலை அணுகுவதும் மாநில அளவுக் கட்சிகள் தேர்தலை அணுகுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரே சமயத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவு பிரச்சினைகளை மாநிலப் பிரச்சினைகளாக உருமாற்றி பரப்புரை செய்ய முடியும். அப்படி செய்வது தேசியக் கட்சிகளுக்கு வசதியாக இருக்கும். மாநிலக் கட்சிகளுக்கு பாதகமாக இருக்கும்.

வருடம் முழுக்க தேர்தல்கள் நடந்துக் கொண்டிருப்பது ஆட்சியாளர்களின் கவனத்தை சிதறடிக்கிறது, அவர்கள் தேர்தலைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரச்சினை முன் வைக்கப்படுகிறது. ஆனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் மக்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படுமா? மக்களின் எண்ணங்கள் புரிந்துக் கொள்ளப்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

உதாரணமாய் அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது இடையில் வரும் தேர்தல்கள் மூலம் மக்கள் உணர்த்திவிடுவார்கள். ஒரே தேர்தல் முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்த முடியும். ஜெயலலிதா ஆட்சியில் கோவில்களில் ஆடு, கோழி போன்றவற்றை பலியிடக் கூடாது என்ற சட்டத்தை 2003ல் கொண்டு வந்தார். போராடிய அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்ந்தது. 2004ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டார் ஜெயலலிதா. ஒரே சமயத்தில் தேர்தல் என்பதில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கது.

இத்தனை பாதகங்கள் இருக்கும்போது பாஜக ஏன் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் கடுமையான ஆர்வத்துடன் இருக்கிறது?

எல்லாமே ஒன்றாக இருந்தால் பாஜகவுக்கு தேர்தலில் வெல்லுவது எளிது. ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு வியூகங்கள் அமைக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு தலைவரைத் தேட வேண்டியதில்லை. ஒரே பிரச்சினையைப் பேசி நாடு முழுவதும் வெல்ல முடியும். அந்ததந்த மாநிலத்துப் பிரச்சினைகளைப் பேச வேண்டியதில்லை. இப்படி அதற்கு சாதகமான விஷயங்கள் பல இருக்கின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் செயல்படுத்தப்படுமா?

அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சி அமைத்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை உறுதியாக கொண்டு வரப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...