No menu items!

சிவம் துபே: CSKவின் புது ஹீரோ

சிவம் துபே: CSKவின் புது ஹீரோ

ஐபிஎல்லில் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார் சிவம் துபே. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 50 பந்துகளில் 8 சிக்சர்களுடன் 95 ரன்களை துபே குவிக்க, இந்த ஐபிஎல்லில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். கூடவே யார் இந்த சிவம் துபே என்ற கேள்வியையும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்த்யியில் எழுப்பியுள்ளது.

சென்னைக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தந்த சிவம் துபேவைப் பற்றி 10 விஷயங்கள்:

கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பிறந்த மும்பை நகரம்தான் துபேயின் சொந்த ஊர்.

மும்பையில் உள்ள ஹன்ஸ்ராஜ் மொராஜி என்ற பள்ளியில் படித்த சிவம் துபே, தனது பள்ளி 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

சிறு வயதில் துபே கிரிக்கெட் ஆடும் நாட்களில் அவரது அப்பா மைதானத்துக்கு வந்து கறி, பாதாம், பிஸ்தா போன்ற உணவுகளை ஊட்டி விடுவாராம். அவ்வளவு செல்லம். ஆனால் அதுவே துபேயின் வளர்ச்சிக்கு தடையாகிப் போனது என்று துபேயின் சிறு வயது பயிற்சியாளர் நிலேஷ் கூறுகிறார். அதிகம் சாப்பிட்டதால் துபே ஓவர் வெயிட்டாகிப் போனதால் சில காலம் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாமல் போயுள்ளது.

உடல் எடை கூடியது போன்ற காரணங்களால் 15 முதல் 20 வயதுவரை துபேயால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியவில்லை. பின்னர் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

2018-ம் ஆண்டில் நடந்த மும்பை டி20 லீக் போட்டியில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் டம்பேவின் ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை சிவம் துபே பறக்க விட்டார். இது அவரது கிரிக்கெட் கிராஃப் ஏறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

2019-ம் ஆண்டில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து சிவம் துபேயை வாங்கியது. ஆனால் அத்தொடரில் அவரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.

இத்தொடரில் 4 போட்டிகளில் ஆடிய துபே, 40 ரன்களை மட்டுமே அடித்தார். விக்கெட்களையும் எடுக்கவில்லை.

முதல் ஐபிஎல் தொடரில் ஏமாற்றியபோதிலும், பிற்காலத்தில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடியதால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

இந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் துபேயை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு சிவம் துபேயை வாங்கியது.

யுவராஜ் சிங்கை தனது ரோல் மாடல் என்று சொல்லும் சிவம் துபே, மஹேந்திரசிங் தோனியை தனது கிரிக்கெட் ஹீரோ என்கிறார்.

“சிறுவயது முதலே தோனிதான் என் ஹீரோ, சில நாட்களுக்கு முன் என்னை அழைத்த தோனி, பேட்டிங்கில் நான் சில மாறுதல்களைச் செய்யவேண்டும் என்றார். நமக்கு விருப்பமான ஹீரோ நம்மிடம் ஏதாவது கேட்டால் மறுக்க முடியுமா? அதுதான் என்னால் முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தைக் கொடுப்பேன்” என்று ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும்போதே உறுதி கொடுத்திருந்தார் சிவம் துபே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...