“ஜனாதிபதி தேர்தலை அறிவிச்சிருக்காங்க. இனி கொஞ்ச நாளைக்கு அதைப் பத்தித்தான் பேச்சா இருக்கப் போகுது” என்றவாறு உள்ளே வந்தார் ரகசியா.
“மத்தவங்க பேசறது இருக்கட்டும். ஜனாதிபதி தேர்தலைப் பத்தி நீ என்ன நியூஸ் வச்சிருக்கே?”
“பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரையோ, அல்லது இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த ஒருவரையோ தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தலாம் என்பதுதான் பிரதமரின் யோசனையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான ஜார்ஜண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான திரவுபதி மர்மு, கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.”
“இதே சமூகத்தைச் சேர்ந்த பலர் இருக்கும்போது இந்த இருவருக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்?”
“பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தைப் போலவே ஒரிஸாவிலும் காலூன்ற நினைக்கிறது. முர்மு ஒரிஸாவின் சண்டால் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அதனால் அவரை ஜனாதிபதி ஆக்கினால் அந்த சமூகத்தின் வாக்குகளைக் கவரலாம் என்பது பாஜகவின் கருத்து. அதேபோல் கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுக்கு குடைச்சல் கொடுப்பதற்கு நன்றிக்கடனாக அவரை ஜனாதிபதி ஆக்கலாமா என்று யோசிக்கிறார்கள்”
“ராஜ்நாத் சிங்கும் ஜனாதிபதி பதவிக்கு அடி போடுவதாக சொல்கிறார்களே?”
“2014-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தியதில் ராஜ்நாத் சிங்கின் பங்கு மிகப்பெரியது. அதற்கு நன்றிக்கடனாகவாவது ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக பிரதமர் அறிவிப்பார் என்று ராஜ்நாத் சிங் எதிர்பார்க்கிறார். ஆனால் இது நடக்குமா என்றுதான் தெரியவில்லை.”
“தமிழக அரசியல் சூழ்நிலை பற்றி காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாக கேள்விப்பட்டேன். உண்மையா?”
“உண்மைதான். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் மாமல்லபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் நடந்திருக்கிறது. உதய்பூரில் நடந்ததைப் போல் ஒவ்வொரு மாநிலத்திலும் சிந்தனை அமர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் கொடுத்த ஆலோசனைப்படி இந்த கூட்டம் நடந்திருக்கிறது. இந்த சிந்தனை அமர்வில் நான்கு குழுக்களாகப் பிரிந்து அரசியல், பொருளாதாரம், மகளிர், விவசாயம் என விவாதித்து இருக்கிறார்கள். இந்த கூட்டத்தின்போது இனியும் திமுக கூட்டணியில் இருந்தால் தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதை ஒரு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் சிந்தனை அமர்வை முடித்துவைக்க வந்த ப.சிதம்பரம் அதை ஏற்கவில்லையாம். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது நமது இலக்காக இருக்கவேண்டும். அதேநேரத்தில் இப்போதைக்கு திமுகவுக்கு எதிராக தீர்மானம் எதையும் நிறைவேற்ற வேண்டாம் ‘ என்று சொல்லிவிட்டாராம்.”
“அமைச்சர் ஒருவருக்கு முதல்வர் டோஸ் விட்டதாக கேள்விப்பட்டேனே?”
“ஆமாம். தா.மோ.அன்பரசன்தான் அந்த அமைச்சர். சமீபத்தில் நடந்த பொதுக்குட்டம் ஒன்றில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பாஜக தலைவர் அண்ணாமலையை ‘பொறுக்கி’ என்று பேசியதை முதல்வர் ரசிக்கவில்லையாம். அந்த வீடியோ வைரல் ஆனதும் அமைச்சரை அழைத்துப் பேசிய முதல்வர், ‘நீங்கள் அமைச்சர் என்பதை மறந்து விட்டீர்களா? இருக்கிற தலைவலி போதாதா? நீங்கள் புதுசாக ஒரு தலைவலி உருவாக்க வேண்டாம். ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று எச்சரிக்கை செய்து அனுப்பினாராம்.”
“நல்ல விஷயம். அரசியல் நாகரீகத்தை எல்லோரும் காப்பாற்ற வேண்டும்”
“நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் இதற்கு பதிலடியாக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் அமைச்சர் தா.மோ.அன்பரசனை பொறுக்கி என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பாஜக நிர்வாகிகளும் கொண்டாடியுள்ளனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”
“திமுக – பாஜக சண்டை இப்போதைக்கு ஓயாது போல…”
”ஆமாம். திமுகவினர் சேர்மன் மேயராக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் தில்லாலங்கடி வேலைகளை ஆதாரத்துடன் சேகரித்து அனுப்ப பாஜக பிரமுகர்களுக்கு கமலாலயத்தில் இருந்து ரகசிய உத்தரவு போட்டிருக்கிறார்கள். அதேசமயம் பாரதிய ஜனதா பிரதிநிதி உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் திமுக தலைவர்கள் முதலில் கவனிப்பது பாரதிய ஜனதா பிரதிநிதிகளைத்தான் இவையெல்லாம் ஐபிஎஸ் தலைவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை என்று கமலாலயத்தில் பேசுகிறார்கள்.”
“அதுசரி”
“அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி ஆகியோர் மீதான பிடியை அமலாக்கத்துறை இறுக்கி வருகிறது. ஏற்கெனவே இதே போன்ற விஷயத்தில் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் கைதானதையும் நாம் இங்கே பார்க்கவேண்டும். சட்டரீதியாக அவர்களை கைது செய்வது பற்றி சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.”
“மாநில அரசுக்கு நெருக்கடிதான்.”
“அண்ணாமலை தரப்பினர் எல்லாவற்றையும் கண்ணில் விளக்கெண்ணயை விட்டு பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விடுமுறை விடுங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்பத்தலைவர் கண்டிப்பாக உத்தரவு போட்டு விட்டாராம் அதனால் தான் அந்த கம்பெனியின் விளம்பரம் நாளிதழின் இப்போதைக்கு வருவதில்லை”
“அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் அந்த அளவில் இருக்கிறது?”
“பொதுக்குழுவில் பாஜகவைப் பற்றி எதுவும் பாரதிய ஜனதா எந்தப் பேச்சும் கூடாது என்ற கருத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களாம். அதனால் தங்கள் ஆதரவாளர்களை அழைத்து, ‘பொதுக்குழுவில் பேசும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாஜக பற்றிய பேச்சே கூடாது’ என்று கண்டிப்புடன் சொல்லி வருகிறார்களாம். அதேநேரத்தில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் அவங்களுக்கு நம்ம தயவு தேவை. அதை அவங்க மறந்துட்டாங்க’ என்று பொன்னையன் சுட்டிக் காட்டியுள்ளார். அதற்கு இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும், ‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நாங்க பார்த்துக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.” என்று கூறிவிட்டு பறந்தார் ரகசியா.