No menu items!

யார் இந்த மதுரை ஆதீனம்?  

யார் இந்த மதுரை ஆதீனம்?  

தமிழகத்தின் ஹாட் டாபிக் இப்போது மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்தான்!

‘‘பெண்கள் போலீஸே ஆகக்கூடாது! அர்ச்சகர் ஆவதும் சரிவராது! பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் கணவனை மட்டும் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும்!”

“அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை?”

“இந்து அறநிலையத்துறை கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அறநிலையத்துறை பொல்லாத துறையாக இருக்கின்றது. அதிகாரிகள் யாரும் விபூதி பூசுவது இல்லை. அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும்” என்று நாளொரு சர்ச்சையை எழுப்பி வருகிறார். புதிய மதுரை ஆதீனமான ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத்  தலைவர் கி. வீரமணி அறிக்கைகள் தொடங்கி சமூக வலை பதிவுகள் வரை கடந்த சில நாட்களாக வைரல் கண்டெண்டுகளில் ஒன்றாக மதுரை ஆதீனம் இருந்து வருகிறார்.

இந்நிலையில்,

மதுரை பழங்காநத்தத்தில் சமீபத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மதுரை ஆதீனம், ‘‘நடிகர் விஜய் படங்களில் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள்” என்று கூறியதில் இப்போது விஜய் ரசிகர்களும் ஆதீனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.

“1999-இல் வெளிவந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல ஒரு சீனை பாத்துட்டு தளபதி படத்தை யாரும் பாக்க கூடாதுனு சொல்றாரு.  படம் வந்து 23 வருசம் ஆச்சு. 23 வருசத்துக்கு அப்புறம் வந்து இப்படி பேசுவது ஒரு ஆச்சர்யம்னா, படத்தோட இயக்கு்ர் எழிலை விட்டுவிட்டு தளபதிகிட்ட வர்றதுக்கு என்ன காரணம்? ஜோசப் விஜய்ன்ற பேருதான் காரணம். இது முழுக்க முழுக்க வீண் விளம்பரத்திற்காக செய்யும் அரசியல். எல்லாத்துக்கும் மேல அந்த படத்தோட அருமையும் சிம்ரனோட பெருமையும் தெரியாம பேசிட்டு இருக்கார் ஆதீனம்” என விஜய் ரசிகர் கொதிக்கிறார்கள்.

மேலும், “மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாம தப்பா!!! வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து!!! எங்களுக்கு ஜாதி மதம் எதுமில்லை!! தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை!!! என்று, மதுரை முழுவதும் விஜய் ரசிகர்கள் சார்பாக ஆதீனத்துக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

யார் இந்த புதிய மதுரை ஆதீனம்? இவரது திடீர் பரபரப்பு பேச்சுகளுக்கு என்ன காரணம்?

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்த மடத்தை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இந்த மடத்தின் கீழ் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோ்ில், திருப்புறம்பியம் சாட்சி நாதேஸ்வரர் கோயில், கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் இருக்கின்றன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் இருக்கின்றன. இந்த மடத்தின் 293-வது ஆதீனமாகப் பொறுப்பேற்றுள்ளவர்தான், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்.

இவர், 1954ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று, திருநெல்வேலி டவுனில் சைவ பிள்ளைமார் சமூகத்தில் காந்திமதிநாதன் பிள்ளை – ஜானகி அம்மை  தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். பெற்றோர் வைத்த இயற்பெயர் பகவதி லட்சுமணன். பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே தனக்கு சமய செயல்பாடுகளில் ஈடுபாடு இருந்ததாக  கூறுகிறார் மதுரை ஆதீனம்.

தந்தை காந்திமதிநாதன் அரசுப் பணியில் இருந்ததால் அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு மாற்றலாகி செல்லும் நிலை. ஒவ்வொரு ஊருக்கு மாற்றலாகி செல்லும்போதும் குடும்பத்தையும் அந்த ஊருக்கு அழைத்துக்கொள்வார். இப்படி திருப்பத்தூரில் கோமதிநாதன் பணியாற்றியபோது, அவ்வூருக்கு பக்கத்தில் இருந்த குன்றக்குடி கோயிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம், பகவதி லட்சுமணன்.

இந்நிலையில்,

21 வயதில் குன்றக்குடி மடாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது ஈடுபாட்டால் ஈர்க்கப்பட்ட  குன்றக்குடி மடாதிபதி இவரை மடத்திலேயே படிக்க ஏற்பாடு செய்தார். அடுத்து வந்த சஷ்டி அன்று காவி உடையும் அணிவிக்க ஏற்பாடு செய்தார். ஆனால், இதற்கு இவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மடத்துக்கு செல்வதாக இருந்தால் வீட்டுக்கு திரும்ப வரக்கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்துவிட்டார்கள். வீடா மடமா என்ற கேள்வி எழுந்தது?

வீட்டை துறந்து மடத்தை தேர்வு செய்த பகவதி லட்சுமணன், அதே வருடம், 21ஆவது வயதில் குன்றக்குடி மடத்தில் ஆறுமுகத் தம்பிரானாக மாறினார்.  குன்றக்குடி மடாதிபதி இவருக்கு ஆதீனத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தார். கும்பகோணம், திருப்பந்துருத்தி, திருவையாறு என குன்றக்குடி ஆதீனத்துக்கு நிலங்கள் உள்ள பல்வேறு ஊர்களில் மடத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்துக்கொண்டார்.

பின்னர், 1976ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்துக்கு சென்று நெல்லையப்பத் தம்பிரானாக மாறினார். 1976 முதல் 1980 வரை தருமபுரம் ஆதீனத்தில் இருந்தார்.

1980-ல் தருமபுரம் ஆதீனத்துக்கு வருகை தந்த திருவாவடுதுறை மடாதிபதி இவரை திருவாவடுதுறைக்கு அழைத்தார். 1980 முதல் 2019 வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தி தம்பிரானாக 39 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் நிலங்கள் நிர்வாகப் பணிகளுக்காக ஐந்து வருடம் நியமிக்கப்பட்டார். பின்னர் ஆவுடையார் கோயில் திருப்பணி மேற்பார்வையில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர், காஞ்சிபுரம் என தமிழகம் முழுவதும் திருவாவடுதுறை மடத்துக்கு நிலங்கள்  உள்ள பல்வேறு ஊர்களிலும் பணியாற்றியுள்ளார்.

2019 ஜூன் 6ஆம் தேதி அப்போதைய மதுரை ஆதினம் அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டார். திருவாவடுதுறை ஆதீன சுந்தரமூர்த்தி தம்பிரான், மதுரை இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் ஆனார்.

இந்நிலையில், 2021 ஆகஸ்ட் 13-ம் தேதி மதுரை மடத்தின் 292-ஆவது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து, அடுத்த மடாதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது. “2012ஆம் ஆண்டு அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி என்னை தனக்கு அடுத்த ஆதீனமாக முறைப்படி நியமித்தார். அதன்படி ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளான நான்தான் மதுரை ஆதீனத்தின் வாரிசு, வம்சாவளி, சந்ததி” என்று அறிவித்தார், நித்யானந்தா.

இதனால் உருவாக இருந்த சிக்கலை தவிர்க்கவும், மதுரை மடத்தின் புதிய ஆதீனம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அன்றே, ‘‘முக்தியடைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் நியமிக்கப்பட்ட இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் புதிய ஆதீனமாகத் தேர்வு செய்யப்படுவார்’’ என்று அறிவித்து, அவருக்கு ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293-ஆவது மதுரை ஆதீனமாக நியமனம் செய்தார், திருவாவடுதுறை ஆதீனம்.

மடாதிபதியான சில வாரங்களிலேயே, ‘‘பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் கணவனை மட்டும் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும். போலீஸ் உட்பட எந்த வேலைக்கும் போகக்கூடாது.!” என்று பேட்டி கொடுத்து வைரலானார், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

அன்று முதல் இப்போது, ‘‘நடிகர் விஜய் படங்களை இந்துக்கள் பார்க்கக்கூடாது” என்ற பேச்சு வரை, இவர் அவ்வப்போது பிரேக்கிங் நியூஸ்களில் வந்த பரபரப்பு குறையாமல் இருபதன் பின்னணியில் பாஜக இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...