No menu items!

மிஸ் ரகசியா – முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல்

மிஸ் ரகசியா – முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல்

“ஆபீசுக்கு நேரத்துக்கு வருவதே வரவர கஷ்டமாக இருக்கிறது. மழைநீர் கால்வாய் பணிகள் என்ற பெயரில் ஒருபக்கம் தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். மறுபக்கம் மெட்ரோ பணிக்காக தோண்டுகிறார்கள். இந்த சிக்கல் போதாதென்று ஒன் வே ஆக்குகிறோம் என்ற பெயரில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வைக்கிறார்கள்” என்று புலம்பிக்கொண்டே வந்தாள் ரகசியா.

“ரொம்ப சூடாக இருக்கிறாய் போல’ என்று சொல்லி அவரை குளிர்விக்க ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் கொடுத்தோம். சற்று குளிர்ந்தாள்.

“தமிழகத்தின் இப்போதைய ஹாட் டாபிக், ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் அறிக்கைதான். நீதிபதி ஆறுமுகசாமி ஒருவழியாக தற்போது விசாரணை கமிஷன் அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டபடி சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் மீது விசாரணை நடத்த உத்தரவிட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெறப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. விசாரணை கமிஷனின் அறிக்கை என்ற துருப்புச் சீட்டை வைத்து சசிகலாவை மடக்க திட்டமிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்”

“இதற்கு சசிகலாவின் ரியாக்‌ஷன் என்ன?”

“இந்த தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே இதை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் சசிகலா. இந்த நடவடிக்கைக்கு தடை வாங்க முடியுமா என்று சட்ட நிபுணர்களை கவனிக்க சொல்லியிருக்கிறார். அதேநேரத்தில் கடந்த சில வாரங்களாக கோடநாடு வழக்கு விசாரணையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை வளையத்துக்குள் இருக்கும் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி, கடந்த வாரம் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த சூழலில் நாமக்கல் வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக இரண்டு மூன்று நாட்களாக தனிப்படை விசாரித்து வருகிறது. டிடிவி தினகரனுக்கு வழக்கறிஞர் செந்தில் வேண்டப்பட்டவர். சசிகலா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது நாமக்கல்லில் செந்தில் வீட்டிலும் சோதனை நடந்ததையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். இந்த வழக்கில் எடப்பாடிக்கு எதிராகவும் வலை விரிக்கப்பட்டுள்ளது”

“அரசு நிகழ்ச்சிகளுக்கு தன்னை யாரும் அழைப்பதில்லை. என்னை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள் என்று சேலம் தொகுதி திமுக எம்பியான எஸ்.ஆர்.பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாரே?”

“இந்த விஷயம் முதல்வர் காதுக்கும் போயிருகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் என்று தெரிந்ததும் அவரை தொடர்பு கொண்டு ‘ஒழுங்கா கட்சியை வளர்க்கற வேலையைப் பாருங்க. இந்த கோஷ்டி வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்’ என்று எச்சரித்திருக்கிறார் முதல்வர். அதன் பிறகு சேலம் எம்பியை தொடர்புகொண்டு, ‘இனிமேல் அப்படி ஏதும் நடக்காது. நான் பார்த்துக்கொள்கிறேன் எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்’ என்று அன்பாக பேசியிருக்கிறார். மாநகராட்சி அதிகாரிகளும் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாக உறுதி அளிக்க, சமூக வலைதளத்தில் இருந்து தனது பதிவை நீக்கியிருக்கிறார் எம்.பி. இப்போது ‘தளபதிக்கு நன்றி. மாநகராட்சி அதிகாரிகள் நல்லவர்கள்’ என்று புதிதாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.”

“திருக்குறள் பற்றிய ஆளுநரின் பேச்சுக்கு முதல்வர் பதில் சொல்லலையே என்ன காரணம்?”

“ஆளுநர் பேசுனதுக்குலாம் இதுவரை முதல்வர் நேரடியா பதில் சொன்னதில்லை. நல்லா கவனிச்சுப் பாத்தா தெரியும். திருக்குறள் விஷயத்துல தலைமைச் செயலர் இறையன்பு உட்பட சில தமிழ் அறிஞர்கள்கிட்ட முதல்வர் ஆலோசனை செய்திருக்கிறார். அவர்கள் இந்த விஷயத்துக்கு பதில் சொல்ல வேண்டாம்னு சொன்னாங்களாம். அதனால்தான் முதல்வர் இதுவரை ஆளுநருக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் ஏதாவது ஒரு விழாவில் நிச்சயம் திருக்குறள் பற்றி முதல்வர் பேசுவார் என்கிறது அறிவாலய வட்டாரம்”

”எதற்காக டெல்லி விழாவுல ஆளுநர் அப்படி பேசினாராம்?”

”முதலில் மத்திய அமைச்சர்களை வைத்துதான் டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறப்பதாக இருந்தது. தமிழ் நாட்டு ஆளுநரை அழைத்து சிலை திறக்க வைக்கிற யோசனை அப்புறம்தான் வந்திருக்கு. அந்த ஃபங்க்‌ஷன்ல ஆளுநர் குறிப்புகளை வைத்தே பேசினார். அந்த குறிப்புகளை எழுதிக்கொடுத்தது யார் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. தமிழ்நாட்டுலருந்து இந்தக் குறிப்புகள் போகல. டெல்லியில் எழுதப்பட்டதுனு சொல்றாங்க. ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி வர்ணம் பூசி ஒரு சர்ச்சையை பாஜக கிளப்பிச்சு. திருக்குறள் அரசியல் தமிழ்நாட்டுல எடுபடும்னு நினைக்கிறாங்க”

”ஆடியோ பத்தி அண்ணாமலை மழுப்பலா பதில் சொல்லியிருக்காரே. அவர் பேசுனதைதான் வெட்டி ஒட்டி பண்ணியிருக்காங்கன்ற மாதிரி சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். அவர் அப்படி பேசுனதுல சீனியர் லீடருக்கு வருத்தமாம். அண்ணாமலை அப்படி பேசவேயில்லை கிராஃபிக்ஸ்ல பண்ணிட்டாங்கனுலாம் சொன்னார். இப்ப இவர் இப்படி சொன்னா நான் சொன்னது பொய்யாயிடுச்சுலனு புலம்பியிருக்கிறார்”

“எச்.ராஜாவைதானே சொல்ற. அவர் வாழ்க்கையே புலம்பலாயிடுச்சு பாவம்”

“அண்ணாமலை பேசுனதில அது மட்டும் முக்கியமில்லை. அவர் சொன்ன இன்னொரு விஷயத்தைதான் திமுககாரங்க முக்கியமா நினைக்கிறாங்க”
“என்ன விஷயம்?”

“பாஜக அதிரடி அரசியல்தான் செய்யும். பாஜகவினர் ஆக்ரோஷமா நடந்துப்பாங்கனு அவர் பேசுனதை உன்னிப்பா கவனிக்கிறாங்க.”

“கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்’னு முதல்வர் பேசியிருக்கிறாரே?”

“அதுக்கு காரணம் இருக்கு. நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு பாஜக திட்டமிடுகிறது என்ற தகவல் டெல்லிலருந்து வந்திருக்கு. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைப்பதற்குள் 2024-ம் ஆண்டுக்கு முன்பு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறதாம். இன்னும் ரெண்டு வருஷம் இருக்குனு கட்சிக்காரங்க அசட்டையா இருந்துடக் கூடாதுனு முதல்வர் பேசியிருக்கிறார்.”

“நாடாளுமன்ற தேர்தல் இருக்கட்டும்… திமுகவின் உள்கட்சித் தேர்தலிலேயே பலகுழப்பங்கள் இருப்பதாக சொல்கிறார்களே?”

“ஆமாம். தாம்பரம் நகர திமுகவின் முதல் செயலாளராக எஸ்.ஆர்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ள கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் அதிருப்தியில் உள்ளார். உள்கட்சித் தேர்தலில் குறைந்த ஓட்டு வாங்கிய அவர், பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து பதவியை வாங்கிவிட்டதாக புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். இப்படி தலைமையே நிர்வாகிகளை நியமித்தால் இதற்காக உள்கட்சி தேர்தல் எதற்கு என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது.”

“அதிமுகவை கைப்பற்றுவதற்கான யுத்தம் எந்த அளவில் இருக்கிறது.”

“எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களில் 500 பேரை முதல் கட்டமாக வளைக்க திட்டமிட்டுள்ளாராம் ஓபிஎஸ். இதற்கு தேவையான நிதிக்கு சசிகலாவும், தினகரனும் ஏற்பாடு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட எடப்பாடியும் போட்டிக்கு பணம் இறக்க தயாராக இருக்கிறாராம்.”

“பாஜக இன்னும் சமரசத்துக்கு வரவில்லையா?’

“தேர்தலுக்குள் அவர்களிடையே சமரசம் செய்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் 3 அணிகளும் தங்களுடன் இருக்கும். இந்த 3 அணிகளும் அத்தேர்தலில் பொதுச் சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தும் என்பதும் பாஜகவின் கணக்காக உள்ளது.” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...