No menu items!

பாஜகவில் அண்ணாமலைக்கு எதிர்ப்பு – மிஸ் ரகசியா!

பாஜகவில் அண்ணாமலைக்கு எதிர்ப்பு – மிஸ் ரகசியா!


தலைமுதல் கால் வரை மூடிய ரெயின் கோட், அதற்கு மேல் குடை, கைகளில் கிளவுஸ், கால்களில் பூட்ஸ் என்று என்று மழையைச் சமாளிக்க தேவையான அம்சங்களுடனும் ஆபீசுக்குள் நுழந்தாள் ரகசியா.

“ஏகப்பட்ட பாதுகாப்பு போல இருக்கே?”

“இத்தனை இருந்தாலும் மழையில வெளிய வர பயமாத்தான் இருக்கு. எந்த ரோட்ல எந்த இடத்துல பள்ளம் இருக்கோன்னு பயந்து பயந்து வண்டியை ஓட்ட வேண்டி இருக்கு.”

“ஆனா போன வருஷ மழையில தண்ணி தேங்கியிருந்த இடங்கள்ல இந்த முறை தண்ணி தேங்கலனு சொல்றாங்களே”

“ஆமாம், போன வருஷம் திநகர் பக்கம் போகவே முடியல. இந்த வருஷம் மழை நின்னதும் தண்ணி வடிஞ்சிருச்சு. அதே மாதிரி முகப்பேர்ல தண்ணி தேங்கியிருந்த இடத்துலலாம் இந்த வருஷம் தேங்கல. கேகே நகர்லயும் தண்ணி வடிஞ்சிருச்சுனு சொல்றாங்க. சமூக ஊடகங்கள்ல இது பெரிய சண்டையா மாறியிருக்கு. தண்ணி தேங்கிச்சுனு வீடியோக்களும் தேங்கலனு வீடியோக்களும் சோஷியல் மீடியாவுல பரபரப்பா போய்கிட்டு இருக்கு”

“கஷ்டம்தான். மழையில வெளிய போய் வர்றதே ஒரு பெரிய போராட்டம்தான்” என்று சொல்லி ரகசியாவைச் சூடாக்க பிளாஸ்கில் இருந்து காபியை எடுத்து நீட்டினேன்.

காபியைக் குடித்து முடித்ததும் சூடான செய்திகளை சொல்லத் தொடங்கினாள் ரகசியா. முதலில் அண்ணாமலைக்கு எதிராக டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்ட சம்பவத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்.

“அண்ணாமலைக்கு டிஜிபி பதில் சொல்லும் அறிக்கை டிஜிபி அலுவலகத்தில்தான் தயாரானது. ஆனால் அந்த அறிக்கை முதல்வர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு வந்ததும் அதில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. சில காட்டமான வாக்கியங்கள் அங்கு சேர்க்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதேபோல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிக்கையில் இருந்த ‘மத்திய அரசு’ என்ற வாசகத்தை ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றியதும் முதல்வர் அலுவலகம்தானாம்.”

“அதற்குப் பதிலடியாகத்தான் அண்ணாமலை 10 பக்கத்துக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டாரே? அதில் மத்திய அரசின் சுற்றறிக்கையை காண்பித்துள்ளாரே?”

“அந்த சுற்றறிக்கையை மத்திய அரசுதான் அண்ணாமலைக்கு வழங்கியது என்று ஆளும் தரப்பினர் சொல்லி வருகிறார்கள். ஆனால் தமிழக காவல்துறையில் அவருக்கு வேண்டிய ஒருவர்தான் இதை வழங்கி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தவிர தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் எனக்கு வேண்டிய காவல்துறை அதிகாரிகள் தமிழக அரசில் இருக்கிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக அண்ணாமலை சொல்லி வருகிறார். அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது தமிழக காவல்துறை”

“அண்ணாமலையின் 10 பக்க அறிக்கையை திமுக மறுத்துள்ளதே?”

“ஆமாம். அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை அல்ல. 10 பக்கங்களைக் கொண்ட வாட்ஸ்அப் வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளது திமுக. அந்த மறுப்பைக்கூட முன்னணி திமுக தலைவர்களை வைத்து சொல்லவில்லை. திமுகவின் செய்தி தொடர்பாளரான ராஜிவ் காந்தியை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள். இந்த செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார் ராஜிவ் காந்தி. உள்கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளைக்கூட எதிர்கொள்ளத் தெரியாதவர் என்று இந்த சந்திப்பின்போது விமர்சித்திருக்கிறார். அண்ணாமலையை மீறி கோவையில் வானதி சீனிவாசன் பந்த்துக்கு அழைப்பு விடுத்ததைப் பற்றித்தான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார்.”

“அண்ணாமலையின் கோவைப் பயணமும் பரபரப்பாகி உள்ளதே?”

“கோவை கார் வெடிப்பு நடந்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு திடீரென அண்ணாமலை சென்றுள்ளார். ஆனால் அதற்கு முந்தைய தினமே அண்ணாமலையை வரவேற்று கோவையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கோயிலுக்கு போன அண்ணாமலை தரிசனம் செய்ததுடன் பஜனை பாடல்களையும் பாடினார். கார் வெடிப்பு சம்பவம் நடந்தபோது அங்கு இருந்தவர்களிடம் நடந்த விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அண்ணாமலையுடன் உள்ளூர் பிரமுகர்களான வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவில்லை. இதுபற்றி கேட்டபோது, அண்ணாமலை அங்கு வருவது தங்களுக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.”

“போஸ்டர்களைக் கூட அவர்கள் பார்க்கவில்லையாமா?”

“அதை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.”

“திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசும்போது தமிழக அரசு அதிகாரிகள் பலரும் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என்று சொல்லி இருக்கிறாரே?”

“இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. சமீபத்தில் ஓய்வு பெற்ற இரண்டு டிஜிபி களில் ஒருவர் ஆளும் அரசுக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர். அவரிடம் ஒரு அமைச்சர், நான் வேண்டுமானால் மேலிடத்தில் சொல்லி ஒரு வருடம் நீட்டிப்பு வாங்கி தரவா என்று கேட்க, ‘ஆளை விடுங்க சாமி நான் நல்லபடியா இப்படியே ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக் கொள்கிறேன்’ என்று கையெடுத்து கும்பிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.”

“தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் பேரணி நடக்கும் நாளில், ஒரு லட்சம் மனு ஸ்மிருதி புத்தகங்களை வழங்குவோம் என்று திருமாவளவன் அறிவித்திருக்கிறாரே?”

“ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதா இது எதற்கு புது தலைவலி என்ன திமுக தரப்பு அதை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது”

“மம்தா பானர்ஜியின் தமிழக வருகைக்கு அரசியல் அர்த்தம் ஏதும் இருக்கிறதா?”

“எல்.கணேசன் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத்தான் தமிழகத்துக்கு வருகிறார் மம்தா பானர்ஜி. அப்படி வரும் நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மத்தியில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதைப் பற்றியும் ஆலோசனை நடத்துவார் என்கிறார்கள். ஆனால் மம்தாவுக்காக தமிழகத்தில் ஓரளவு வாக்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் பகைத்துக் கொள்வாரா என்பது சந்தேகம்”

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டதே?”

“இது திமுகவினரையும், முதல்வர் ஸ்டாலினையும் ரொம்பவே கவலைப்பட வைத்துள்ளது. இந்த விவகாரம் சற்று முடிவுக்கு வரும்வரை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை ஒதுங்கி இருக்குமாறு சொல்லலாமா என்று யோசிக்கிறாராம் முதல்வர்.” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...