No menu items!

அழகிரி மகன் ஹெல்த் அப்டேட் – மிஸ் ரகசியா

அழகிரி மகன் ஹெல்த் அப்டேட் – மிஸ் ரகசியா

முகக்கவசத்துடன் ஆபீசுக்குள் எண்ட்ரி ஆனாள் ரகசியா.

“முகக்கவசம் எல்லாம் போட்டிருக்கியே. உடம்பு சரியில்லையா?”

“என் உடம்புக்கு ஒண்ணுமில்லை. மு.க.அழகிரியோட மகன் துரை தயாநிதிக்குதான் உடம்பு சரியில்லை. அவர் எப்படி இருக்கார்னு தெரிஞ்சுக்க அப்போலோ ஆஸ்பிடல் பக்கம் போயிருந்தேன்.”

”எப்படியிருக்கிறார்? இம்ப்ரூவ்மெண்ட் இருக்கா?”

“நிறைய சிகிச்சை கொடுத்திருக்காங்க. மூளைல ஒரு பகுதி பாதிக்கப்பட்டிருப்பதா தகவல்கள் கிடைச்சிருக்கு. அவர் இயல்பா எழுந்து பேசி, நடமாட பல மாதங்கள் ஆகும்னு சொல்றாங்க..வெளிநாட்டுக்கு கூட்டிட்டுப் போகவும் யோசிச்சுக்கிட்டு இருக்காங்க”

“அங்க நல்ல சிகிச்சை கிடைக்குமா?”

“இங்கேயே அவருக்கு உயர்தர சிகிச்சைதான் கொடுக்கப்படுது. வெளிநாட்டுல இன்னும் சிறப்பான தொழில்நுட்பம் இருக்கும்னு நினைக்கிறாங்க. ஆனா இன்னும் முடிவு செய்யல”

“பாவம்”

“ஆமாம், முழு குடும்பமும் அங்கதான் இருக்கு. அப்போலோவுல விவிஐபிக்கு தனியா தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கு. அந்த அறைக்குப் பக்கத்திலேயே அவங்க குடும்பத்தினர் இருப்பதற்கும் அறைகள் இருக்கு. அங்கதான் அழகிரி குடும்பத்தினர் இருக்காங்க”

“முதல்வர் அடிக்கடி வந்துட்டு போறாராமே?”

“ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை மருத்துவமனைக்கு வந்துடுறார். தயாநிதிக்கு ஆபரேஷன் பண்ணும்போது முதல்வர் அஞ்சு மணி நேரம் அங்கேயே இருந்திருக்கிறார். அழகிரிக்கு தைரியம் கொடுத்துக்கிட்டே இருக்கிறார். முதல்வர் குடும்பத்தினரும் அழகிரி குடும்பத்தோடு மருத்துவமனைல இருக்காங்க. விழாக்கள்ல பாத்தாகூட அழகிரிகூட அதிகம் பேசாத மாறன் சகோதரர்களும் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி வர்றாங்க”

“ஆமா, அவங்களுக்குள்ளதான் தினகரன் எரிப்பு பிரச்சினை இருக்கே”

“இப்ப அதெல்லாம் மறந்து தயாநிதிக்காக ஒண்ணா நிக்கிறாங்க. ஆனா தயாநிதியாலதான் இந்த குடும்ப ஒற்றுமை காட்சியைப் பார்க்க முடியல”

“தயாநிதி சீக்கிரமே குணமாகி வர ஆண்டவன்கிட்ட பிரார்த்திப்போம்”

“நான் சொன்னபடியே தமிழக அரசு வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு நிவாரண நிதியை அறிவிச்சுட்டாங்க பார்த்தீங்களா?”

“வெள்ள நிவாரணமா 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்கன்னு சொன்ன. ஆனா 6 ஆயிரம் ரூபாயாவே அறிவிச்சுட்டாரே முதல்வர்?”

“வெள்ள நிவாரணப் பணிகளால மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை, இந்த நிதி உதவி சரி செஞ்சுடும்னு முதல்வர் நம்பறார். அதனால பாதிக்கப்பட்ட ஒருத்தரையும் விடாம இந்த நிதி சென்று அடையணும்னு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கார்.”

“ஆனா அவ்வளவு பணம் தமிழக அரசுகிட்ட இருக்கா?”

“பற்றாக்குறைதான். இருந்தாலும் மக்கள்கிட்ட கெட்ட பெயர் வாங்கக் கூடாதில்லையா. அதுக்காக மத்த திட்டங்கள்ல இருந்து இதுக்கு கொஞ்சம் நிதி ஒதுக்கி இருக்காங்க. அதோட மற்ற வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தன்னார்வலர்கள்கிட்ட இருந்து நிதி வசூல் செய்யத் தொடங்கி இருக்காங்க. இதுக்காக தன்னோட ஒரு மாச சம்பளத்தை கொடுத்த முதல்வர், மத்தவங்களும் கொடுக்கணும்னு வேண்டுகோள் விடுத்திருக்கார்”

“முதல்வரோட வேண்டுகோளுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?”

“வெள்ள நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள்கிட்ட ஆரம்பத்துல பெரிய அளவு வரவேற்பு இல்லை. இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கார். அதுக்கு பிறகுதான் அவங்க நிதி கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதேபோல சினிமா பிரபலங்கள்கிட்ட உதயநிதி ஸ்டாலின் நிதி பத்தி பேசிட்டு இருக்கார்.”

“சென்னை வெள்ளத்துக்கு அமைச்சர் துரைமுருகன்தான் காரணம்னு ஒரு புது குற்றச்சாட்டு வந்திருக்கே?”

“பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் கராத்தே தியாகராஜன்தான் இந்த குற்றச்சாட்டை சொல்லி இருக்காரு. ‘நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மழைநீர் வடிகால் பணியை சரியா செய்யாமல் விட்டதுதான் சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம்’னு அவர் சொல்லி இருக்கார். ‘சென்னையில் உள்ள 16 கால்வாய்களும், இரண்டு ஆறுகளும் முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதற்கு முழு காரணம் துரைமுருகன்தான். அதனால அவர் பதவியை ராஜினாமா செய்யணும். அவரா ராஜினாமா செய்யலைன்னா முதல்வர் அவரை பதவியை விட்டு நீக்கணும்’னு மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகிட்ட நல திட்ட உதவி நிகழ்ச்சியில் பேசியிருக்கார் கராத்தே தியாகராஜன்.”

”திமுக தரப்புல இதுக்கு என்ன பதில்?”

“துரைமுருகன் அமைச்சராக இருப்பது நீர்பாசனத் துறை. தூர்வாருவது அவரது துறைக்கு கீழே வந்தாலும் சென்னை நகருக்கான மழைநீர் வடிகாலுக்கு தனியாக திட்டங்கள் இருக்கின்றன. அந்த திட்டங்கள் பல துறைகளின் கீழ் வரும். இவருக்கு ஏதோ துரைமுருகன் மீது தனிப்பட்ட கோபம் ஏதோ இருக்கிறது, அதனால் அவரை ராஜினாமா செய்ய சொல்லுகிறார் என்கிறார்கள்”

”5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பா அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் பத்தி தன்னோட அதிருப்தியை ராகுல் காந்தி தெரிவிச்சாராமே?”

“ஆமாம். 5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பா விவாதிக்க நடந்த கூட்டத்துல பேசின ராகுல் காந்தி, ‘நான் பேசற விஷயம் உங்களில் சிலருக்கு வருத்தம் கொடுக்கும். ஆனா நான் சொல்லித்தான் ஆகணும். கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கடுமையா பிரச்சாரம் செஞ்சும் சட்டசபை தேர்தலில் பாஜக தோத்துப் போனதுக்கு சிவக்குமாரும், சித்தராமையாவும்தான் காரணம். அதேபோல் தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி செல்வாக்குள்ள தலைவரா இருந்தார். ஆனால் பெரும்பாலான மாநிலங்கள்ல காங்கிரஸ் தலைவர்கள் உள்ளூரில் செல்வாக்கோட இல்லை. நீங்கள் பலமா இல்லாததாலதான் எங்களை பிரச்சாரத்துக்கு அழைக்கிறீர்கள். உங்கள் செல்வாக்கை நீங்கள் எப்போது அதிகரிக்கறீங்களோ அப்பத்தான் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கு பெறும். ராஜஸ்தானில் வேட்பாளர் தேர்வில் நான் சொன்னபடி எதுவுமே செய்யலை. அதனால்தான் நாம் ஆட்சியை இழந்தோம் நாடாளுமன்றத் தேர்தலில் மூத்த தலைவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முழு சுதந்திரம் கொடுக்கப்படாது’ன்னு சொல்லி இருக்கார். இதனால காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில இருக்காங்க.”

”அவங்க அதிர்ச்சியில இருக்காங்களா இல்லாட்டி அதிர்ச்சியானது மாதிரி காட்டிக்கிறாங்களா? காங்கிரசுல வழக்கமா நடக்கிறதுதானே. சரி, ஓபிஎஸ் பாஜகல சேரப் போறார்னு ஒரு பேச்சு சுத்துதே?”

“ஐந்து மாநில தேர்தல் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமருக்கு ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதி இருக்கார். அதில் பாஜகவின் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம்னு பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி இருக்கார். அதுலருந்துதான் இந்தப் பேச்சு கிளம்பியிருக்கு”

“சரி, நியூஸ் உண்மையா பொய்யா?”

“பாஜக வெற்றி பெற்றதுக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவிக்கல, ஆனா ஓபிஎஸ் தெரிவிச்சிருக்கார். அவரை நம்மோடு சேர்த்துக்கணும்னு பாஜகவுல ஒரு குரூப் கிளம்பியிருக்கு. ஒபிஎஸ் மூலமா அவர் சமூகத்து வாக்குகள் நமக்கு வந்துரும்னு மேலிடத்துல சொல்லியிருக்கு”

“அப்படி வருமா?”

“வருமோ வராதோ..இப்படி ஆசைப்படறது அண்ணாமலைக்கு எதிர் குரூப். ஓபிஎஸ் கட்சிக்குள் வந்தால் அவருக்கு ஒரு பெரிய பதவி கொடுப்பாங்க. அது அண்ணாமலைக்கு செக் வைக்கிற மாதிரி இருக்கும்னு நினைக்கிறாங்க”

“சரி, ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?”

“அவருக்கு பாஜகவோடு சேர ஆசைதான் சேஃபா இருந்துக்கலாம்னு நினைக்கிறார். ஆனா பாஜகவுல சேர்ந்தீங்கனா இருக்கிற ஆதரவும் போய்டும் அவரோட ஆதரவாளர்கள் சொல்லியிருக்காங்க. அதனால வழக்கம் போல…”

“என்ன வழக்கம்போலனு சொல்லிட்டு நிறுத்திட்ட?”

“ஒபிஎஸ் வழக்கம்போல என்ன செய்வார்? நீங்களே யோசிச்சு புரிஞ்சுக்கங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...