“அண்ணனும் தம்பியும் கூடிய சீக்கிரம் ஒண்ணா சேரப் போறாங்க” – ஆபீஸுக்கு வந்ததும் முதல் ஸ்கூப் நியூஸைச் சொன்னாள் ரகசியா.
“யாரைப் பத்திச் சொல்றே?”
“வேற யாரு… முதல்வர் ஸ்டாலினையும், அவரோட அண்ணன் அழகிரியையும் பத்தித்தான் சொல்றேன். போன வாரம் தயாளு அம்மாளோட பிறந்த நாள் விழால சந்திச்ச பிறகு அண்ணன் தப்பிக்குள்ள இருந்த வருத்தமெல்லாம் மறைஞ்சு போச்சாம். குடும்பத்துல திரும்பவும் ஒற்றுமை வந்திருக்காம்.”
“கண்கள் பனிக்கட்டும். இதயம் இனிக்கட்டும்.”
“இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. அழகிரி பொறுப்புல இருந்த வரைக்கும் தென் மாவட்டங்கள்ல கட்சியை வலுவா வச்சிருந்தார். ஆனா இப்ப ஆளாளுக்கு கோஷ்டி சேர்த்துட்டு திரியறாங்கன்னு முதல்வருக்கு வருத்தம் இருந்திருக்கு. ஆட்சியையும் கவனிச்சு, கட்சியில இருக்கிற கோஷ்டி பிரச்சினைகளையும் கவனிக்க முடியலைங்கிற டென்ஷன் அவருக்கு. அதோட பிடிஆர் கொஞ்ச நாளா ஒதுங்கி இருக்கறதும் அவருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கு. அவரோட இந்த மனநிலையைத் தெரிஞ்சு அவர்கிட்ட பேசின அமைச்சர் மூர்த்தி, பேசாம நாடாளுமன்ற தேர்தல்ல மதுரை தொகுதியை அழகிரியோட மகன் துரை தயாநிதிக்கு கொடுத்து ராசியாயிடலாம். மத்த விஷயங்களை அவர் பார்த்துப்பார்னு சொல்லி இருக்காரு. பாஜக, அமலாக்கத் துறைன்னு சுத்தி பிரச்சினைகள் இருக்கும்போது இதைச் செயல்படுத்தினா என்னன்னு முதல்வரும் யோசிக்கறாராம்.”
“துரை தயாநிதி இதுவரை அரசியல்லேயே இல்லையே திடீர்னு அவரால அரசியல்ல ஜெயிக்க முடியுமா?
முக்கியமான தேர்தல்ல இப்படி ரிஸ்க் எடுப்பாரா முதல்வர்”
“கலைஞர் குடும்பத்துல யார்தான் அரசியல்ல இல்லை. நேரடி அரசியல்ல இல்லைனாலும் அவங்க வீடு ஃபுல்லா அரசியல்தானே இருக்குது”
“நீ எதுவும் உள்ளர்த்தம் வச்சு பேசலையே”
சிரித்தாள் ரகசியா.
“சரி, அழகிரிக்கும் பிடிஆருக்கும் ஆகாதே. அந்தக் காலத்திலேயா அது பிரச்சினையா இருந்ததே? அழகிரி உள்ள வந்தா பிடிஆர் என்ன செய்வார்?”
“ஆமாம். அது ஒரு சிக்கல்தான். அதைதான் முதல்வர் ரொம்ப யோசிக்கிறாராம். இப்ப இருக்கிற சூழல்ல பிடிஆரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைக்கிறதாகவும் தகவல் இருக்கு”
“எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் கிளம்பற நேரமா பார்த்து பொன்முடி வீட்ல அமலாக்கத் துறை ரெய்டு போயிருக்கே?”
“முதல்வரை பெங்களூருக்கு போக விடாம முடக்கறதுதான் இந்த ரெய்டோட நோக்கம். முதல்வரும் தன்னோட பயணத்தை தள்ளிப் போடறதா இருந்தார். ஆனால், ‘இது பாரதிய ஜனதாவோட பூச்சாண்டி வேலை. நீங்க எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு போகக்கூடாதுன்னே சோதனைக்கு உத்தரவு போட்டிருக்காங்க. அதனால இதுக்காக பயணத்தை தள்ளிவைக்க வேண்டாம்’னு டி.ஆர்.பாலுதான் அட்வைஸ் பண்ணி இருக்காரு. அதுக்குப் பிறகுதான் ஸ்டாலின் கிளம்பி இருக்காரு.”
“ரெய்டைப் பத்தி ஏதாவது தகவல் இருக்கா?”
“ரெய்ட் விஷயத்துல செந்தில் பாலாஜி மாதிரி பொன்முடி பதறல. அதிகாரிகள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அமைதியா பதில் சொல்லி இருக்கார். ‘அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நீங்க வரணும்’னு அதிகாரிங்க சொன்னப்ப, ‘விசாரணையா இல்லை கைது செஞ்சிருக்கீங்களா’ன்னு அமைதியா கேட்டிருக்கார். கைதெல்லாம் கிடையாது. உங்ககிட்ட வாக்குமூலம் வாங்கணும்னு அதிகாரிங்க சொன்னதும் தன் காரிலேயே போயிருக்கார்.”
“முதல்வரோட ரியாக்ஷன் என்ன?”
“முதல்ல பொன்முடி கைதுன்னு செய்தி பரவினதும் பெங்களூருவுல இருந்த முதல்வர் ஸ்டாலின் டென்ஷனாகி இருக்கார். பிறகு பல்வேறு இடங்களில் விசாரிச்சு கைது நடவடிக்கை இல்லைன்னு தெரிஞ்ச பிறகுதான் நிம்மதியாகி இருக்கார். பொன்முடி வீட்டுக்கு வந்ததும் அதிகாலையிலேயே அவர்கிட்ட போன்ல பேசி, நடந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டார்.”
“செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு கொண்டு போயிட்டாங்களே?”
“செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கலாம்னு தீர்ப்பு வந்த பிறகு, அவர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்படலாம்கிறதால உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செஞ்சிருக்கு அமலாக்கத் துறை. அதேநேரத்துல அவரை புழல் சிறையில இருந்து மாத்தவும் முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை திஹார் சிறைக்கு மாத்தச் சொல்லி உயர் நீதிமன்றத்துக்கு போகவும் அமலாக்கத் துறை தயாரா இருக்கு. திஹார் சிறைக்கு கொண்டு போனதும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டு இருக்காம்.”
“அடுத்ததா யார் மேல பாய்வாங்கன்னு ஏதாவது தகவல் இருக்கா?”
“டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேருன்னு அமலாக்கத் துறை கிட்ட ஒரு பெரிய லிஸ்டே இருக்கறதா பேசிக்கறாங்க. நேரம் பார்த்து ஒவ்வொருத்தர் மேலயா அமலாக்கத் துறை பாயலாம்.”
“திமுக ஆட்சிக்கு வந்தா ஊழல் செய்த அதிமுக அமைச்சர்களை சிறையில் தள்ளுவோம்னு பிரச்சாரத்துல ஸ்டாலின் பேசினாரு. ஆனா இப்ப திமுக அமைச்சர்கள்தான் சிறைக்கு போயிட்டு இருக்காங்க.”
“இந்த வருத்தம் திமுக தொண்டர்களுக்கும் இருக்கு. கடந்த 2 வருஷத்துல அதிமுக அமைச்சர்கள் விஷயத்துல அரசு கடுமை காட்டியிருக்கணும். இப்ப நடவடிக்கை எடுத்தா வேணும்னே பண்ற மாதிரி இருக்கும்னு தொண்டர்கள் பேசிக்கறாங்க.”
“மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றப்படும்னு சொல்லிட்டே இருந்தாங்க. ஆனா எந்த மாற்றத்தையும் காணோமே…”
“அதுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்தான். நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி போன்ற மூத்த தலைவர்களை கட்சிப் பணிக்கு அனுப்ப மோடியும், அமித் ஷாவும் திட்டமிட்டு இருந்தாங்க. ஆனால் அந்த யோசனையை ஆர்.எஸ்.எஸ் ஏத்துக்கலையாம். அதனால அமைச்சரவை மாற்றத்தை கிடப்பில போட்டிருக்காங்க. அதேபோல் பொது சிவில் சட்டத்தை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேணாம்னும் ஆர். எஸ்.எஸ் சொல்லியிருக்காம். அதனால பொது சிவில் சட்டமும் இப்போதைக்கு வராதுன்னு சொல்றாங்க.”
“தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்கட்சிகளும் மாறி மாறி கூட்டம் போடறாங்க. ஆனா யாரும் கமலைக் கண்டுக்கலையே.”
“கூட்டத்துக்கு கூப்பிடாட்டியும் நாடாளுமன்றத் தேர்தல்ல காங்கிரஸ் கூட்டணியிலதான் போட்டிங்கிறதுல கமல் உறுதியா இருக்கார். அதுவும் கோவையிலதான் போட்டிங்கிறதுலயும் அவர் உறுதியா இருக்கார். கை சின்னத்துல போட்டியிடச் சொல்லி காங்கிரஸ்காரங்க சொல்றாங்களாம். ஆனா கமல், டார்ச் லைட் சின்னத்தை விட்டுக் கொடுக்கறதா இல்லை.” என்று கிளம்பினாள் ரகசியா.”
“எந்த கூட்டணியும் கூப்பிடாத இன்னொரு தலைவரைப் பத்தி சொல்லாம போறியே?”
“ஓபிஎஸ்தானே… எல்லாரும் கைவிட்ட நிலையில திமுகவோட சேர்ந்தா என்னன்னு அவர் யோசிக்கறாராம். தேனி தொகுதியை கொடுத்தா 40 தொகுதியிலயும் பிரச்சாரம் பண்றேன்னு திமுகவுக்கு கேரண்டி கொடுக்கறாராம் ஓபிஎஸ். ஆனா திமுக அந்த தொகுதியை தங்கத் தமிழ்செல்வனுக்கு கொடுக்க திட்டமிட்டு இருக்காம்.”
”சரி, பெங்களூருல எதிர்க் கட்சிகள் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கே..அங்கருந்து ஏதாவது”
“இதுவரைக்கும் எல்லோரும் ரொம்ப ஒற்றுமையா இருக்காங்க. கூட்டணிக்கான பேரை மாத்தணும்னு பேசியிருக்காங்க. ஐக்கிய முற்போக்கு கூட்டணின்ற பேருக்கு பதில் வேற வைக்கப் போறாங்க?”
“என்ன பேரு வைக்கப் போறாங்க?”
“இந்திய மக்கள் கூட்டணினு வைக்கலாம்னு வைகோ சொல்லியிருக்கிறார். இந்தியாவை காப்பாற்றும் கூட்டணி, மதசார்பற்ற கூட்டணினு (SAVE INDIA ALLIANCE or SECULAR INDIA ALLIANCE) ரெண்டு பேரை திருமா சொல்லியிருக்கிறார்”