புதிய வரவு நடிகைகளில் பரபரப்பாக இருக்கும் பட்டியலில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் கீர்த்தி ஷெட்டி, சினிமாவில் தாக்குப்பிடிப்பதற்கான நுணுக்கத்தை நன்றாக கற்று கொண்டிருக்கிறார்.
சூர்யாவுக்கு சைனஸா பாதிப்பா இல்லை வேறென்ன பிரச்சினை என்று யோசிக்குமளவுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறதாம். காரணம் வேறொன்றும் இல்லை. ‘என்னுடன் நடித்த ஹீரோக்களில் சூர்யாதான் மிகவும் மரியாதைக்குரிய மனிதர்’ என்று கீர்த்தி ஷெட்டி வைத்த ஐஸ்தான் காரணம்.
தான் பெரிதாக எதிர்பார்த்த ‘த வாரியர்’ படம் பாக்ஸ் ஆபிஸில் போட்டியிடாமல் பின்வாங்கிவிட ரொம்பவே நொந்து போன கீர்த்தி ஷெட்டிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது சூர்யா.
பாலா இயக்கும் .வணங்கான்’ படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். அதற்குதான் ஒட்டுமொத்த அண்டார்டிகாவையும் தூக்கி சூர்யா தலையில் வைத்திருக்கிறார் என்று ரகசியமாக சிரிக்கிறார்கள்.
இதே வேகத்தில் மற்றவர்களையும் விட்டுவைக்கவில்லை கீர்த்தி ஷெட்டி. விஜய் உத்வேகம் அளிக்கும் சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபு ரீல் லைஃப் மற்றும் ரியல் லைஃப்பிலும் சூப்பர் ஸ்டார், அஜித் ரொம்ப நேர்மையான மனிதர், என்று அடித்துவிட்டிருக்கிறார்.
இந்த ஸ்டேட்மெண்ட் ஸ்டண்ட் எல்லாம் அந்தந்த நடிகர்கள் மத்தியில் எடுப்படுமா இனிதான் தெரியும்.
14 மொழிகள். சிங்கிள் ஷாட் – கமல் அட்டகாசம்
’விக்ரம்’ படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் எதைத் தொட்டாலும் அது வைரலாகி வருகிறது.
இந்த மவுசை கமலே சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இதனால்தான் மனிதரின் முகம் முழுவதும் மகிழ்ச்சி. கண்களில் உற்சாகம். இதன் பலனை அறுவடை செய்ய போவது இயக்குநர் ஷங்கர்தான்.
‘இந்தியன் -2’ ஷூட்டிங் ஒவ்வொரு கட்டமாக நடந்துவருகிறது. கமல் இல்லாமல் இதர நட்சத்திரங்களை வைத்து 10 நாட்கள் ஷூட்டிங் முடிந்தது. அமெரிக்காவிலிருந்து கமல் வந்ததும், அவர் தொடர்பான காட்சிகளை எடுத்து இருக்கிறார்கள்.
அதில் லேட்டஸ்ட் பரபரப்பு. படத்தில் இடம்பெறும் 10 நிமிட வசனம். அதை சிங்கிள் ஷாட்டில் எடுக்கலாம் என ஷங்கர் முடிவு செய்திருக்கிறார்
ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 14 மொழிகளில் 10 நிமிட வசனத்தை சிங்கிள் ஷாட்டில் எடுக்க வேண்டும். இந்த மாதிரி வேளைகளில் ஒரு தேர்ந்த நட்சத்திரம் என்ன சொல்வார் …..’பார்த்துக்கலாம்’
ஸ்பாட்டில் அனைத்து வசனங்களையும் சிங்கிள் ஷாட்டில் நடித்து கொடுத்திருக்கிறார் கமல்.
இதைப் பார்த்து அசந்து போன ஒட்டுமொத்த யூனிட்டிலும் இதைப் பற்றிதான் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒன்றிணையும் தமிழ் தெலுங்கு சினிமா
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சினிமாவின் அசைக்க முடியாத தலைநகராக சென்னை இருந்தது வரலாறு.
இதனால் தெலுங்கு சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் சென்னைவாசிகளாகவே இருந்தனர். தமிழை நன்றாக பேசவும் செய்வார்கள்.
இதனால்தான் இன்றும் கூட தெலுங்கு உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கும் கூட தமிழ் சினிமா மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
இதன் வெளிப்பாடாகவே சமீபத்திய தெலுங்குப் படங்களுக்கு இங்கே விளம்பர வேலைகளை பெரும் பொருட்செலவில் செய்து வருகிறார்கள். அல்லது தமிழ் – தெலுங்கு என இரு மொழி படமாக எடுக்க அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் மீண்டும் தனது தமிழ் சினிமா மீதான ஆசை தீர்க்க கெளதம் வாசுதேவ் மேனனுடன் கைக்கோர்க்க இருக்கிறார் ராம் பொத்னேனி.
லிங்குசாமி இயக்கத்தில் ‘த வாரியர்’படத்தில் நடித்த அதே ராம்தான்.
தெலுங்கு நடிகர்கள் தமிழ்ப் படங்களில் நடிப்பதன் மூலம் இங்கே தங்களது மார்க்கெட்டை விரிவுபடுத்தவும்,, நம்மூர் நடிகர்கள் தெலுங்கு மார்க்கெட்டில் தடம் பதிக்கவும் முயல்வதால் இந்த இரு மொழி சினிமாவும் ஒன்றிணையும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.