No menu items!

விடைபெறும் மகாராஜா – ரோஜர் ஃபெடரர்

விடைபெறும் மகாராஜா – ரோஜர் ஃபெடரர்

டென்னிஸ் உலகுக்கு இது இலையுதிர் காலம். சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் ராணியாக கருதப்பட்ட செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெற்று சரியாக 13வது நாளில் டென்னிஸ் உலகின் ராஜாவாக, குறிப்பாக புல்தரை டென்னிஸ் மைதானங்களின் மகாராஜாவாக புகழப்படும் ரோஜர் ஃபெடரர், டென்னிஸில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். வரும் 23-ம் தேதி தொடங்கவுள்ள லேவர் கோப்பைக்கான டென்னிஸ் தொடருடன் தன் ராக்கெட்டுக்கு ஓய்வு கொடுக்கப் போகிறார் ரோஜர் ஃபெடரர்.

டென்னிஸ் போட்டிகளில் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆகிய நான்கு போட்டிகள் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரரான ரோஜர் ஃபெடரரைப் பற்றி 20 சுவாரஸ்யமான விஷயங்கள்:

ரோஜர் ஃபெடரரின் அம்மா லைனெட் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அப்பா ராபர்ட் ஃபெடரர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அதனால் இரு நாடுகளின் குடியுரிமையும் ஃபெடரருக்கு உள்ளது.

தனது 8 வயதுமுதல் டென்னிஸ் போட்டிகளில் ஆடிவரும் ரோஜர் ஃபெடரர், 11 வயதுமுதலே பல்வேறு போட்டிகளிலும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

இரு நாடுகளின் குடிமகனாக இருந்தாலும், சுவிட்சர்லாந்து நாட்டுக்காகத்தான் பெடரர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

தங்கள் நாட்டுக்காக ஆடிய ஃபெடரரை கவுரப்படுத்தும் விதமாக சுவிட்சர்லாந்து அரசு 2017-ம் ஆண்டில் அவருக்கு தபால் தலை வெளியிட்டுள்ளது.

ஃபெடரருக்கு இசையிலும் ஆர்வம் அதிகம். அவர் பியானோ இசைக்கருவியை நன்றாக வாசிப்பார்.

டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக 23 நாடுகளுக்கு ஃபெடரர் பயணித்துள்ளார். இதில் 15 நாடுகளில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். எந்த ஊருக்கு ஆடச் சென்றாலும், போட்டி முடிந்த பிறகு கொஞ்ச நாட்கள் அங்கு சுற்றுலாப் பயணியாக சுற்றிவருவது ஃபெடரரின் வழக்கம்.

மாலத்தீவு, துபாய் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ரோஜர் ஃபெடரரின் இப்போதைய சொத்து மதிப்பு 550 மில்லியன் டாலர்கள்.

ஆங்கிலம், ஜெர்மனி, ப்ரெஞ்சு, ஸ்விஸ் ஆகிய மொழிகளில் ஃபெடரரால் சகஜமாக பேச முடியும்.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக 302 வாரங்கள் ஃபெடரர் இருந்துள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஃபெடரர், இவற்றில் 30 முறை இறுதிச் சுற்றுக்கும், 43 முறை அரை இறுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளார்.

ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் போட்டிகளில் மிக அதிகபட்சமாக மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் செய்துள்ளார்.

ஃபெடரரின் மனைவியான மிர்கா வாவ்ரினெக்கும் ஒரு டென்னிஸ் வீராங்கனை. இவர்கள் இருவரும் 2009-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 4 குழந்தைகள்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதர் என்பதால் அந்த நிறுவனத்தின் கார்களையே ஃபெடரர் பயன்படுத்துகிறார்.

முன்னாள் டென்னிஸ் வீரர் பீட் சாம்பிராஸை தனது ரோல் மாடலாக கருதுகிறார் ஃபெடரர்.

16 வயது வரை சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டுவந்த ஃபெடரர், அதன்பிறகு அசைவ உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தார். அவருக்கு பிடித்த உணவு பாஸ்தா.

முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றபோது ரோஜர் ஃபெடரருக்கு ஒரு பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது. அதற்கு ‘ஜூலியட்’ என்று பெயர்வைத்து வளர்த்து வருகிறார் ரோஜர் ஃபெடரர்.

டென்னிஸ் உலகின் தான் சம்பாதித்த பணத்தை வைத்து அறப்பணிகளிலும் ஃபெடரர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ‘ரோஜர் ஃபெடரர் பவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கிய ஃபெடரர் வசதியற்ற குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். குழந்தைகளுக்கான யூனிசெஃப் அமைப்பின் விளம்பர தூதராகவும் அவர் இருக்கிறார்.

டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெறும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக பரிசுத் தொகை வழங்குவதில் ரோஜர் ஃபெடரருக்கு உடன்பாடு இல்லை. பெண்களைவிட ஆண்கள் அதிக நேரம் ஆடவேண்டி உள்ளது. அதனால் அவர்களுக்கு அதிக பரிசுத்தொகை கொடுக்க வேண்டும் என்பது அவரது வாதம்.

2003-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக தான் பங்கேற்ற 24 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஃபெடரர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...