கமல் ஹாஸன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷூட்டிங்கில் பிஸியாகி இருக்கிறார்.
கமர்ஷியல் ஹீரோவாக இப்போது பார்க்கப்படும் கமல், இப்போது வில்லனாகவும் நடிக்க கிளம்பி விட்டார். இந்த வில்லன் அவதாரம் இங்கில்லை. அக்கட தேசத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் ’ப்ராஜெக்ட் கே’ என்ற படத்திற்காகதான் என்கிறது கமல் வட்டாரம்.
கமல் இப்படத்திற்கு 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். தெலுங்குப் படமான ‘ப்ராஜெக்ட் கே’ ஒரு சயின்ஸ்- ஃபிக்ஷன் த்ரில்லர் வகையறா படம். முற்றிலும் கற்பனை கதை. இந்தப்படத்தில் பாலிவுட்டின் அமிதாப் பச்சன், திபீகா படுகோனும் நடிக்கிறார்கள். சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் திஷா பதானியும் நடிக்கிறார்.
தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலமிக்க ஒரு வில்லன் என கொடூரமான குணமுள்ள ஒரு பக்கா வில்லனாக கமல் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
லேட்டஸ்ட தகவல் என்னவென்றால், ‘ப்ராஜெக்ட் கே’ படமானது கற்பனைக்கதையாக இருந்தாலும், இது கடவுள் விஷ்ணுவின் ‘கல்கி’ அவதாரத்தைத் தழுவி எழுதப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.
பிரபாஸ் கதாபாத்திரம் உலகைக் காக்கும் கல்கியைப் போன்றும், மகாபாரத்தில் இடம்பெற்றிருக்கும் அஸ்வதாமா கதாபாத்திரத்தைப் போலவே அமிதாப் பச்சன் கதாபாத்திரமும், வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது.
கமல் ஹாஸனுக்கு இப்படத்தில் நடிக்க சுமார் 50 கோடி சம்பளமாம்.
’ஜவான்’ அடடா அப்டேட்!
நம்மூர் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்திருக்கும் ‘ஜவான்’ படத்தின் முதல் பார்வை வெளியாகி ட்ரெண்ட்டிங்கில் இருக்கிறது. வெளியான முதல் நாளிலேயே அதாவது 24 மணி நேரத்திற்குள்ளாகவே டீசர்கள், ட்ரெய்லர்கள் விஷயத்தில் சாதனையைப் படைத்திருக்கிறது.
Jawan Prevue என்று வெளியான வெறும் 24 மணிநேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை கடந்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அதாவது மிக அதிகம் பார்க்கப்பட்ட முதல்பார்வை என்ற பெயரைத் தட்டி சென்றிருக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை இவ்வளவு பார்வைகளைப் பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது ‘ஜவான்’.
மொட்டைத் தலையுடன் ஷாரூக்கான் சண்டைப் போடும் காட்சிக்கு இப்போது எக்கச்சக்க லைக்குகள், கமெண்ட்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
இப்படத்தின் ஒடிடி உரிமையும் நூறு கோடிக்கும் அதிகமான விலைக்கு வியாபாரமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பர் 7-ம் தேதி, ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என இதர மொழிகளிலும் ‘ஜவான்’ வெளியாக இருக்கிறது.
பெரும் வரவேற்பை பெற்ற போதிலும், முதல் பார்வையில் இடம்பெற்று இருக்கும் ஷாரூக்கானின் வித்தியாசமான தோற்றங்கள் இப்போது ட்ரோலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
அட்லீயின் குரு ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தில் விக்ரம் போட்டிருந்த அதே கெட்டப்பை பிரதிபலிக்கும் வகையில் ஷாரூக்கான் தோற்றமும் முகத்தில் ஒரு மாஸ்க் அணிந்தபடி இடம்பெற்று இருக்கிறது.
அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து பட்டையைக் கிளப்பிய ‘சிவாஜி’ படத்தில்’, எம்.ஜி.ஆரும் நானே சிவாஜியும் நானே’ என மொட்டைத் தலையுடன் ரஜினி கலாய்க்கும் அதே மொட்டைத் தோற்றத்திலும் ஷாரூக்கான் நடித்திருக்கிறார்.
அடுத்து இந்திய சினிமாவில் ஹீரோயிஸத்தை பிரம்மாண்டமாக காட்டிய ‘பாகுபலி’ படத்தில், ஹீரோ பாகுபலியை இவர்தான் மகேந்திர பாகுபலியின் வாரிசு மக்களுக்கு காட்டும், காட்சியைப் போலவே இதிலும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
The Dark Knight’ என்னும் ஆங்கிலப் படத்தில் ஹீரோ தலையில் துணியைக் கட்டிக்கொண்டு வரும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. அதே போன்று ஷாரூக்கானும் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு இருப்பது போல் ஒரு காட்சியும் ஜவானில் இருக்கிறது.
இவ்வளவா என்றால் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் வரும் பைக் சேஸிங் காட்சியைப் போன்று ஒரு காட்சியும் இருக்கிறது என நெட்டிசன்கள் ஒரு ஃப்ரேமை எடுத்து காட்டியிருக்கிறார்கள்.
இப்படியாக ஷாரூக்கானின் கெட்டப்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படங்களிலிருந்து சுடப்பட்டதா என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் கொண்டிருக்கின்றனர்.