No menu items!

அழகிரியும் ஸ்டாலினும் சந்தித்தபோது – மிஸ் ரகசியா

அழகிரியும் ஸ்டாலினும் சந்தித்தபோது – மிஸ் ரகசியா

“எடப்பாடி அணியோட கூட்டணி வச்சுக்கப் போறோம்கிறதை பாஜக திரும்பவும் உறுதிப்படுத்தி இருக்கு.”

“எப்படி சொல்றே?”

”டெல்லியில 18-ம் தேதி நடக்கப் போற தேசிய ஜனநாயக முன்னணி ஆலோசனைக் கூட்டத்துக்கு எடப்பாடி அணிக்கு அழைப்பு விடுத்திருக்கு பாஜக. அதனால எடப்பாடி குஷியில இருக்காரு.”

“இந்த ஆலோசனைக் கூட்டத்துல கலந்துக்க வேற யாருக்கெல்லாம் அழைப்பு போயிருக்கு?

“சிவசேனா கட்சி ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவு, பீஹாரில் ஆளும் நிதீஷ் குமார் கூட்டணியில இருந்து சமீபத்துல விலகின இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்தி கட்சி மாதிரி கட்சிகளையும் கூப்பிட்டு இருக்காங்க. அதோட தேசிய ஜனநாயக கூட்டணியில இருந்து விலகின அகாலி தளம், தெலுங்கு தேசம் கட்சிகளோடயும் பேசிட்டு இருக்காங்க.”

“தேர்தலுக்கு பாஜகவும் தீவிரமா தயாராயிட்டு வருதுன்னு சொல்லு.”

“ஆமாம். தமிழகத்துல மோடியை நிறுத்தறதைப் பத்தி பாஜக தீவிரமா யோசிச்சுட்டு வருது. அப்படி நின்னா அதுக்கு அதிமுக ஆதரவும் தேவைப்படுமேன்னுதான் இப்ப எடப்பாடியை மதிச்சு கூட்டத்துக்கு கூப்டிருக்காங்க.”

“அப்படி பிரதமர் போட்டியிட்டா அதை எதிர்கொள்ள திமுக தயாரா இருக்கா?”

“முதல்வரைப் பொறுத்தவரைக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தல்ல பிரதமர் மோடி ராமநாதபுரத்துல போட்டியிடுவார்னு உறுதியா நம்பறார். அதனால அவருக்கு எதிரான பிரச்சாரத்தை இப்பவே தொடங்கி இருக்கார். பிரதமர் பற்றிய விமர்சனங்களை இப்ப அதிகமா வைக்கத் தொடங்கி இருக்கார் ஸ்டாலின். பிரதமர் வங்கிக் கணக்கில் போடுறதாச் சொன்ன 15 லட்சம் ரூபாய் என்ன ஆச்சுன்னு கூட்டங்கள்ல கேட்கச் சொல்லி திமுக தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டு இருக்காராம். இந்த விஷயத்துல பிரதமரை கிண்டல் செய்ற மாதிரி ஒரு போஸ்டர் மதுரையில் ஒட்டப்பட்டு இருக்கு. விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த சுவரொட்டி ஒட்டப்படும்னு திமுக்காரங்க சொல்றாங்க.”

“தேசிய ஜனநாயக கூட்டணியோட கூட்டத்துக்கு எடப்பாடியைக் கூப்டு ஓபிஎஸ்ஸை கண்டுக்காததால அவர் வருத்தமாயிருப்பாரே?’

“அதை சொல்லித்தான் தெரியணுமா? ஏற்கெனவே மகன் விஷயத்துல சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பால கவலையில இருக்கற ஓபிஎஸ், இப்ப பாஜக தன்னை முழுசா கைவிட்டுடுச்சேன்னு துக்கத்துல இருக்காராம்.”

“ஆளுநரோட டெல்லி விசிட் பத்தி ஏதாவது தகவல் இருக்கா?”

“ஆளுநரோட டெல்லி நடவடிக்கைகளை, அங்க இருக்கற தமிழக உளவுத் துறை அதிகாரிங்க உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்காங்களாம். அங்க நடக்கறதையெல்லாம் அவங்க உடனுக்குடன் முதல்வருக்கு தெரிவிச்சுட்டு வர்றாங்க. ஆளுநரும் உள்துறை அமைச்சரோட சந்திப்பு, சட்ட அமைச்சரோட சந்திப்புன்னு பிசியா இருக்கார். அதனால அவர் சென்னைக்கு திரும்பி வந்ததும் பெருசா ஏதாவது செய்யலாம்னு ஒரு பேச்சு இருந்துட்டு இருக்கு. தமிழக அரசுக்கு எதிராக ஒரு பக்கம் ஆளுநர் மூவ் பன்ணிட்டு இருக்க, மறுபக்கம் அவருக்கு எதிரான ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு தட்டி விட்டிருக்காரு முதல்வர். இது கடிதம் அல்ல… குற்றப்பத்திரிகைன்னு முரசொலி சொல்ற அளவுக்கு கடிதம் ரொம்ப காரசாரமா இருக்கு.”

“இந்த கடிதத்துக்கு ஜனாதிபதி கிட்ட இருந்து ஏதாவது ரியாக்‌ஷன் கிடைச்சிருக்கா?”

“எதிர்க்கட்சிகள் இப்படி அனுப்பற புகார்களுக்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் ஏதாவது ஒரு பதில் சொல்ல வேண்டாமா? நாங்க என்ன பதில் சொல்றது?’ன்னு பிரதமர் அலுவலகத்திடம் குடியரசுத் தலைவர் அலுவலகம் கருத்து கேட்டிருக்காம்

“மாநில அரசோட இப்படி மோதறதைப் பத்தி டெல்லியில ஆளுநர் என்ன பேசினாராம்?”

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மேல சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு தமிழக அரசு அனுப்பின கடிதத்துக்கு ஆளுநர் மாளிகைல இருந்து எந்த பதிலும் வரலைன்னு சட்ட அமைச்சர் எழுதின கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை மழுப்பலாக ஒரு பதிலை ஏற்கெனவே கொடுத்திருக்கு. இந்த நிலையில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணை பத்தின கடிதத்துக்கு நான் என்ன செய்யணும்னு ஆளுநர் கேட்டிருக்கார். அதுக்கு அமித் ஷா, “அது திமுக அதிமுக சண்டை. அதுல நீங்க தலையிட வேண்டாம். அனுமதி கொடுத்திடுங்க’ன்னு சொல்லி இருக்காராம்.”

“பனையூர் பக்கம் போனீங்களா? விஜய் என்ன மூட்ல இருக்காரு?”

“நாடாளுமன்ற தேர்தல்ல விஜய் சார்பா வேட்பாளர்கள் நிறுத்தப்படப் போறது உறுதின்னுதான் சொல்றாங்க. அதுலயும் எங்க நிறுத்தாட்டியும் தூத்துக்குடியில விஜய் கண்டிப்பா வேட்பாளரை நிறுத்துவார்னு அவரோட ஆதரவாளர்கள் சொல்றாங்க.”

“அது ஏன் தூத்துக்குடி?’

“துத்துக்குடியில துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தப்ப, விஜய் ராத்திரியோட ராத்திரியா பல குடும்பங்களை சந்திச்சு ஆறுதல் சொல்லி இருக்காரு. ஒரு சில குடும்பங்களுக்கு நிதியும் கொடுத்திருக்காரு. அதனால் அங்க தனக்கு ஆதரவு அதிகமா இருக்கும்னு விஜய் நினைக்கறாராம். அதனால அங்க அவர் கண்டிப்பா வேட்பாளரை நிறுத்துவார்னு சொல்றாங்க.”

“எதிரும் புதிருமான அண்ணன் தம்பிகள் சந்திச்சுக்கிட்டாங்களே… அதுபத்தின நியூஸ் ஏதும் இல்லையா?”

“தயாளு அம்மாளின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளைப் பத்திதானே கேட்கற. நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னைக்குத்தான் மு.க.ஸ்டாலிலும், அழகிரியும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்ப அவங்களுக்குள்ள மோதல் ஏதாவது வந்துடுமோன்னு மத்த சொந்தக்காரங்க பயந்திருக்காங்க. ஆனா அப்படி ஏதும் நடக்கலை. அதே நேரத்துல ரெண்டு பேரும் பேசிக்கவும் இல்லை. இருந்தாலும் ஒருத்தர் கையை ஒருத்தர் ரொம்ப நேரம் பிடிச்சுட்டு நின்னாங்களாம். அதைப் பார்த்து மத்த சொந்தகங்களுக்கும் சந்தோஷம். அதேநேரத்தில் துரை.தயாநிதியும், உதயநிதியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்களாம்.” என்றவாறு கிளம்புவதற்கு தயாரானாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...