No menu items!

டாப் 5 மெகா பட்ஜெட் படங்கள் – 2023

டாப் 5 மெகா பட்ஜெட் படங்கள் – 2023

இப்பொழுதெல்லாம் கதையை நம்புவதை விட, நூறு கோடி, இருநூறு கோடிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட சினிமாக்களின் சூப்பர்ஸ்டார்களை நடிக்க வைத்து, பல கோடிகளில் ப்ரமோஷன் செய்து படங்களை வெளியிடுவது இப்போது தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அந்த வகையில் 2023-ல் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் டாப் – 5 மெகா பட்ஜெட் படங்களைப் பற்றிய ஒரு பார்வை இதோ.

ஜெயிலர் [Jailer]

ரஜினிகாந்தின் 169-வது படம்.

ரஜினி ஒரு கதையைக் கேட்டு, அது பிடித்துவிட்டால், அந்த கதையில் ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமென அவர் விரும்பினால், ஷூட்டிங் போவதற்கு முன்பாக அதை சொல்லிவிடுவார். ஷூட்டிங் போனப் பிறகு கதை விஷயத்தில் தலையிடமாட்டார்.

ஆனால் ‘அண்ணாத்த’ கொஞ்சம் சறுக்கியதால், ரஜினி அதிக மாற்றங்களைச் சொன்ன கதை இதுவாகதான் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் சொல்கிறார்கள். அந்தளவிற்கு கதையில் ஈடுபாட்டோடு இறங்கி இருக்கிறார் ரஜினி.

’பீஸ்ட்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ரஜினி நெல்சனுடன் கைக்கோர்த்திருப்பதால், கதையில் ஏதோ ஒரு கலக்கான அம்சம் நிச்சயம் இருக்கிறது. அதனால்தான் ரஜினி ஒகே சொல்லியிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், நயன்தாராவை வைத்து அடுத்தடுத்து டார்க் காமெடி படங்களை எடுத்த நெல்சனை நம்பி ரஜினிகாந்த் களத்தில் இறங்கியிருக்கிறார். இதனால் நெல்சன் ரஜினியையும் டார்க் காமெடியில் களமிறக்குவாரா அல்லது ஆக்‌ஷனில் ஆட்டம் போட வைப்பாரா என்ற எதிர்பார்பு ஏற்பட்டு இருக்கிறது.

ரஜினி செம மாஸ் ஆன ஆக்‌ஷன் காட்சியில் நடித்திருக்கிறார். ரஜினியின் உடல்நிலையை மனதில் கொண்டு, இந்த சண்டைக்காட்சிகான ரிகர்சலை ஒரு வாரம் வைத்திருக்கிறார்கள்.. ஸ்டண்ட் நடிகர்கள் பக்காவாக ரிகர்சல் பார்த்தபிறகு ரஜினி இந்த சண்டைக்காட்சியில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஷாரூக்கானின் ‘பதான்’ படத்தில், ஒரு சண்டைக்காட்சியில் ஷாரூக்கானை வில்லன் ஆட்கள் வெளுத்து வாங்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் கான் வந்து ரவுண்ட் கட்டி அடிப்பார். இதே போல் ஜெயிலர் படத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சியில் ரஜினியுடன், மோகன் லால், சிவராஜ் குமார், சுனில் ஆகிய மூவரும் நடித்திருப்பதாக ஒரு பேச்சு அடிப்படுகிறது.

ரஜினியை வைத்து படமெடுக்க வேண்டுமென்றால் இனி லைகா, சன் பிக்சர்ஸ் மாதிரி வெயிட்டான கார்பொரேட் ப்ரொடக்‌ஷன் கம்பெனிதான் தயாரிக்க முடியும் என்ற சூழலில் மீண்டும் சன் பிக்சர்ஸ் ரஜினியை வைத்து 200 கோடிவரை பட்ஜெட்டை இறக்கியிருக்கிறது. ரஜினியின் சம்பளம் 80 கோடி என்றும் ஒரு கிசுகிசு இருக்கிறது.

முதலில் ஏப்ரல் மாதம் ஜெயிலர் வெளியாகலாம் என்ற சொல்லப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 28-ம் தேதி ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதால், அப்படத்தோடு போட்டியிட வேண்டாமென படக்குழுவினர் நினைக்கிறார்களாம், இதனால் இந்த கோடை விடுமுறைக்கு ஜெயிலரை களத்தில் இறக்குகிறார்களா அல்லது ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களா என்பது அப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடிந்தப்பிறகே அறிவிக்கப்பட இருக்கிறது.

’ஜெயிலரில்’ கன்னட சூப்பர் ஸ்டாரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்குமாரின் மகனுமான சிவ ராஜ்குமார் நடிப்பதன் மூலம் முதல் முறையாக தமிழ்ப் படத்தில் தோன்ற இருக்கிறார். இவருடன் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால், தெலுங்கு சினிமாவை சேர்ந்த சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவியும் நடிக்கிறார்கள். நெல்சனின் ஆஸ்தான கம்பெனி ஆர்டிஸ்ட்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லியும் நடித்திருக்கிறார்கள். அனிரூத் மூன்றாவது முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார்.


இந்தியன் 2 [Indian 2]

1996-ல் லஞ்சத்திற்கு எதிராக மிரட்டலாக வெளியானப்படம் ’இந்தியன்’.

கமலின் நடிப்பும், ஷங்கரின் பிரம்மாண்டமும் கலந்து கமர்ஷியல் கலைஞனாக கமல் தூள் கிளப்பிய இந்தியனின் இரண்டாம் பாகம் இப்பொழுது தயாராகி வருகிறது.

இப்படத்தில் இந்தியன் தாத்தா லஞ்சம், அரசியல் பிழைகளுக்கு எதிராக போராடும் ஒரு இளைஞருக்கு கைக்கொடுப்பது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் படத்தின் ஹைலைட் அப்பா கமலின் அந்த முதியவர் தோற்றம்தான். இப்போது ’இந்தியன் 2’-லும் அப்பா கமல்தான் ஹீரோ. இந்த கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட 5 மணி நேரம் பிடிக்கிறதாம். இதனால் காலை 5 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடும் கமலுக்கு ப்ரொதெடிக்ஸ் மேக்கப்பை ஆரம்பித்துவிடுகிறார்கள். பத்துமணி ஷூட் ஆரம்பித்தால், கமல் மேக்கப்பை கலைப்பதே இல்லை. சென்னை வெயிலுக்கு வியர்த்து கொட்டினாலும் கூட அதை சகித்து கொண்டு மேக்கப்புடனேயே இருக்கிறார் கமல். அந்த மேக்கப்பை கலைக்கவே இரண்டரை மணி நேரம் ஆகிறதாம்.

ஆரம்பத்தில் செம குஷியாக இப்படத்தின் ஷூட்டிங்கில் இறங்கிய கமலும், ஷங்கரும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து நடந்த பிரச்சினைகளால் இந்தியனை மறந்துவிட்டார்கள்.

’விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி கமலுக்கு உற்சாகம் கொடுத்திருப்பதால் இப்பொழுது மீண்டும் இந்தியன் ஓட்டமெடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த முறை லைகா, ரெட் ஜெயண்ட் என இரு நிறுவனங்களும் கைக்கோர்த்திருப்பதால் பட்ஜெட் பற்றி கவலை இல்லாமல் ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 250 கோடியைத் தாண்டிவிட்டது என்றும் சொல்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அநேகமாக மே மாதம் இப்படத்தின் ஷூட்டின் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இந்தியன் 2’ படத்தை எப்படியாவது தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற நெருக்கடியுடன் படம்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.

இதனால் சமீபத்தில் சென்னையில் ஷூட்டிங்கை பரபரவென வேகமாக முடித்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்தில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

இப்போது தென்னாப்ரிக்காவில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். இந்திய சினிமாவில் இதுவரையில் பார்த்திராத வகையில் இந்த ஆக்‌ஷன் காட்சி இருக்கும் என்று ’இந்தியன் 2’ குழுவில் பேச்சு அடிப்படுகிறது.. 14 நாட்கள் இந்த சண்டைக்காட்சியை ஷூட் செய்ய இருப்பதாகவும், இதற்கான ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஆக்‌ஷன் கோரியக்ராஃபர்கள் வடிவமைக்க போவதாகவும் சொல்கிறார்கள்.

ஆக்‌ஷன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் கமல் இறங்கி அடிக்கும் அட்ரனலின் ஆக்‌ஷன் சூட்டைக் கிளப்பும் என்கிறது படக்குழு.

காஜல் அகர்வால், ரகுல் ப்ரீதி சிங், குல்ஷன் க்ரோவர், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திர கனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னில கிஷோர் என ஒரு மளிகை கடை பட்டியலுக்குப் போட்டியாக இப்படத்தின் நட்சத்திரப்பட்டியல் நீள்கிறது.


லியோ [Leo]

’மாஸ்டர்’ படத்திற்குப்பிறகு லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி மீண்டும் இணைவதால் ‘லியோ’ படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்பு உருவாகி இருக்கிறது.

விஜய் நடித்து சுமாரான படம் என சொல்லப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டியிருப்பதால், லியோவுக்கு பட்ஜெட்டில் தாராளம் காட்டியிருக்கிறார்கள். இதனால் ஏறக்குறைய 250 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதில் விஜயின் சம்பளம் மட்டுமே 119 கோடி ப்ளஸ் ஜிஎன்ஸ்டி தொகையும் அடங்கும். அதனால் ஏறக்குறைய 125 கோடி சம்பளம் என்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு குறித்த ப்ரோமோ வெளியான உடனேயே பெரும் விலைக்கு வியாபாரமானது. இப்போது ‘லியோ’ படமும் விக்ரமைப் போலவே சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு வெளிநாடுகளில் நல்ல மார்கெட் இருக்கிறது. படம் நன்றாக இருந்தால், சுலபமாக 125 கோடி வரை வசூலிக்கும் அளவுக்கு தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது.

சமீபத்தில் வெளியான மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’. வெளிநாடுகளில் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 169 கோடிகள் வசூல் செய்திருக்கிறதாம்.

இதனால் இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கான ஒவர்சீஸ் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவுகிறதாம். ஒவர்சீஸ் விநியோகஸ்தரகள் ’லியோ’ படத்தின் ஒவர்சீஸ் உரிமையை 70 முதல் 75 கோடிக்கு கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதையடுத்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ’லியோ’ ஒவர்சீஸ் உரிமையை 90 கோடிக்கு மேல் கேட்டால் கொடுக்கலாம் என தயாரிப்பு தரப்பில் யோசித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

இதற்கிடையில் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமைகள், சாட்டிலைட் உரிமை மற்றும் ஆடியோ உரிமை பல கோடிகளுக்கு வியாபாரமாகி இருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில், இதன் டிஜிட்டல் உரிமை சுமார் 150 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 80 கோடிக்கும், ஆடியோ உரிமை 16 கோடிக்கும் வியாபாரமாகி இருப்பதாக கிசுகிசு அடிப்படுகிறது. இதனால் இப்படம் ரிலீஸூக்கு முன்பாகவே படத்தின் பட்ஜெட்டை சமன் செய்யும் வகையில் வியாபாரம் ஆகிவிடும் என்கிறார்கள்.

சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதால் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையும் நல்ல விலைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஒட்டுமொத்த யூனிட்டும் கொடைக்கானலுக்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடர்ந்த காட்டுப்பகுதியில் ஷூட் செய்ய வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய லியோ படக்குழுவினர் அந்த காட்சிகளை காஷ்மீரில் ஷூட் செய்திருக்கிறார்கள்.

மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை காஷ்மீரில் ஷூட் செய்துவிட்டார்கள். அடுத்த ஷெட்யூல் சென்னையிலும், அதற்கு அடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியிலும் ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மே மாதம் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை செய்யும் வகையில் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அர்ஜூன், ப்ரியா ஆனந்த்., மன்சூரலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி, ஆகியோரும் நடிக்க, லோகேஷின் ஃபேவரிட் அனிரூத் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படத்தை வெளியிட தயாராகி வருகிறது லியோ டீம்.

பொன்னியின் செல்வன் 2 [Ponniyin Selvan: Part II]

எம்.ஜி.ஆர்., கமல் என பலருக்கு பல ஆண்டு கால கனவுப் படமாக இருந்த ‘பொன்னியின் செல்வனை’ வெற்றிகரமாக எடுத்து வெள்ளித்திரையிலும் காட்டிவிட்டார் மணி ரத்னம்.

2022-ல் சோழ சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளைப் பார்த்து ரசிக்க டூரிஸ்ட்களை பேக்குகளுடன் கிளம்பி வரச் செய்ததில் இருக்கிறது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’-ன் வெற்றி.

ஒரு நாவலை திரைப்படமாக எடுப்பதில் இருக்கும் சிக்கல்களில் மணி ரத்னமும் சிக்கிக்கொண்டார். பலரது கோபத்திற்கு ஆளாகும் வகையில் திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கும் சம்பவங்களுக்கும் இடையே லாங் ஜம்ப், ஹை ஜம்ப் என தாவி தாவிப் போனதில் கல்கியின்கதையில் இருந்த அந்த ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தாலும் கலெக்‌ஷனில் பொன்னியின் செல்வன் ஒரு பட்டத்து ராஜாவைப் போல உற்சாகத்தை கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு மக்கள் அடித்த கமெண்ட்களின் அடிப்படையில், சில காட்சிகளை கூடுதலாக எடுக்கவும், தேவைப்படும் மாற்றங்களுடன் எடுக்கவும், பேட்ச் வொர்க்குகளை முடிக்கவும் ஷூட் நடைபெற இருக்கிறது.

இதனால் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளே அதிகமிருப்பதால், அதற்கான வேலைகள் மளமளவென நடந்து வருகின்றன.

’பொன்னியின் செல்வன் 2’ படம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாவதற்கு முன்பே பிஸினெஸ்ஸில் ஆன்-டேபிள் லாபத்தைப் பார்த்துவிடும். திரையரங்குகளிலும் கூட்டம் அதிகமிருக்கும் என்ற எதிர்பார்பு தமிழ் சினிமாவில் நிலவுகிறது.


சூர்யா 42 [Suriya 42]

சூர்யா, ’சிறுத்தை’ சிவாவுடன் இணையும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிக பெயராக சூர்யா 42 என்று வைத்திருக்கிறார்கள்.

இப்படம் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய ’மகதீரா’ படத்தைப் போன்று சில நூறாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள், தற்போது நடக்கும் சம்பவங்களாகவும் இருக்கும் என்கிறார்கள். அப்படி பார்க்கையில் ஒரு பக்காவான ஃபேன்டஸி அட்வெஞ்சர் படம் இது.

இப்படத்தில் சூர்யாவுக்கு. அறத்தார், வெங்கடேடர், மந்தாகர், முகாதர், ப்ரிமநந்தர் என 5 கேரக்டர்கள் இருக்கிறதாம். இப்படத்திற்கு ‘வீர்’ அல்லது ‘வீரன்’ என்று பொருள்படும்படியான டைட்டில் இருக்கலாம் என்கிறது ’சூர்யா42’ படக்குழு.

முதல் முறையாக சூர்யா 3டி-யில் கலக்க இருக்கிறார். மேலும் இப்படத்தை பான் – இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

’சூர்யா 42’ 3டி படமாகவும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அதிமாகவும் இருக்கும் என்பதால் இதன் பட்ஜெட், வழக்கமான சூர்யா படத்திற்கு இருக்கும் பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் என்கிறார்கள். பட்ஜெட் ஏறக்குறைய 170 கோடியாம்.

கோவாவில் ஷூட்டிங்கை தொடங்கிய இப்படக்குழுவினர் தற்போது நடப்பது போல் இடம்பெறும் காட்சிகளை முழுவீச்சில் ஷூட் செய்திருக்கின்றனர்.

கோவா ஷெட்யூலுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஷூட்டிங் நடந்திருக்கிறது. இதற்காக சென்னையில் இருக்கும் கட்டுக்கோப்பான உடல்வாகு, நல்ல உயரம், முறுக்கேறிய கைகள் இருக்கும் பாடிபில்டர்களை தேடித் தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

கதையின்படி, சண்டைக்காட்சிக்கு 25 முதல் 50 வயது வரை உள்ள ஆஜானுபாகுவான பாடிபில்டர்கள் தேவைப்பட்டார்களாம். இதற்காகதான் இந்த பாடிபில்டர்கள் வேட்டை என்கிறார்கள்.

.மேற்கூறிய சண்டைக்காட்சிகளை எண்ணூர் துறைமுகத்தில் எடுத்திருக்கிறார்கள். கேஜிஎஃப் படத்தில் வருவது போல பிரம்மாண்டமான சண்டைக்காட்சியாக இருக்கவேண்டுமென பெரும் செலவில் இந்தக்காட்சியை எடுத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். ஈவிபி-யில் தொடர்ந்து ஷூட் செய்திருக்கிறார்கள். மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரலில் இப்பட ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் மெல்லிடை அழகி திஷா பதானி நடிக்கிறார். ’ஊ சொல்றீயா மாமா ‘ என இந்தியாவையே ஆட்டம் போட வைத்த தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இப்படம் வியாபார ரீதியாகவும் லாபம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தி திரையரங்கு உரிமை உட்பட இதர உரிமைகளைச் சேர்த்து 100 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளும் இதில் அடங்கும்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...