No menu items!

கொஞ்சம் கேளுங்கள் – அண்ணாமலையாருக்கு ஒரு விண்ணப்பம்!

கொஞ்சம் கேளுங்கள் – அண்ணாமலையாருக்கு ஒரு விண்ணப்பம்!

‘அப்பாடியோவ்! என்ன கூட்டம்! அண்ணாமலையார் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது’ என்றார் நிருப நண்பர்.

“அவருடைய எந்த கூட்டத்திற்கு போயிருந்தீர்கள்?” என்று கேட்டபோது -“கூட்டமா? நான் பௌர்ணமி கிரி பிரதட்சணத்தை கூறுகிறேன்” என்றார் கன்னத்தில் போட்டவாறு. ‘புத்தி’ எப்பொழுதும் அரசியலைச் சுற்றியே இருந்தால் இப்படித்தான் ஆகும்.

நண்பர் சிரித்தவாறு, “அண்ணாமலை என்கிற பெயருக்கு ஒரு சக்தி இருக்கவே செய்யும். ‘வந்தேண்டா பால்காரன் அண்ணாமலையிலிருந்து பல அண்ணாமலைகள் இங்கே பிரபலம்தான்” என்றார்.

உண்மை! ராஜா சர். அண்ணாமலை செட்டியார் கல்வியை வளர்த்தார். கலைகளை வளர்த்தார். “அவர் பெரிய அண்ணாமலை… நீ சின்ன அண்ணாமலை” – இணையில்லாத அரசியல் பேச்சாளருக்கு சின்ன அண்ணாமலை என்ற அடைமொழி சூட்டி அழைத்தார் ராஜாஜி. அதுவே அவர் பெயராயிற்று.

காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழக சட்டமன்றத்தில் வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ.வாக ஜொலித்தார் ஒரு அண்ணாமலை. சற்று திக்கி பேசுவார். ஆனால் அவர் ஒவ்வொரு பிரச்சினையை பேசும்போதும் நிதியமைச்சர் சி.எஸ். உன்னிப்பாக கவனித்து குறிப்பு எடுப்பார். தன் உரையில் அவரை பாராட்டி நன்றி கூறுவார். சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தில் அண்ணாமலை மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்து வரவேண்டும் என்றார் சி.எஸ். ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரண புருஷர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு அவரைப் பற்றி தகவல் இல்லை.

“தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மிக சீக்கிரமாக மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்துவிட்டார் என்பதில் ஏது சந்தேகம்? ஆனால் மக்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட, அவருக்கு சில நேரங்களில் குபுக் என்று பொத்துக்கொண்டு வரும் கோபத்தை பற்றித்தான் ‘ஏன் இப்படி?’ என்று வியப்படைவது வழக்கமாக இருக்கிறது” என்றார் நிருபர்.

பொறுப்புமிக்க போலீஸ் அதிகாரியாக இருந்தவர்! வேறு சிந்தனையின்றி பணிநேரத்தில் கடமையில் குறியாக இருக்கும் பெரிய போலீஸ் அதிகாரிகள் சிலரது முகம் நெருக்கடி நேரங்களின்போது சிவந்து போய்விடுவதை பார்த்த அனுபவம் நமக்கு உண்டு.

“பத்திரிகை நிருபர்களை சந்திக்கும்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போல கோபம் கொள்ளும் அரசியல் தலைவர்களை தமிழகம் முன்பு கண்டதில்லை. குறிப்பிட்ட சில நிருபர்கள் விஷயத்தை வரவழைக்க எரிச்சலூட்டும்படி குறுக்கு கேள்விகள் கேட்பதுண்டு. திமுக – ராஜாஜி அரசியல் உறவு பிடிக்காத நிருபர் ஒருவர் இருந்தார். அவர் அந்த அரசியல் உறவில் இருந்த அடிப்படை வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காண்பிக்க, ராஜாஜியிடமும், அண்ணாவிடமும் விஷமமாக கேள்வி கேட்பார். தலைவர்கள் அளிக்கும் பதில் அருமையான தலைப்பு செய்தியாகும். நிருபர் மீது பாய்ந்த வரலாறு இல்லை” என்றார் அந்த மூத்த நிருபர்.

“திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். நீங்கள் கம்யூனிஸ்டுகளை முதல் எதிரி என்பவர். எப்படி இந்த கூட்டணியில் இருக்க முடியும்?” என்று ராஜாஜியிடம் திரும்பத்திரும்ப கேட்டார் அந்த நிருபர்.

ராஜாஜி சிரித்தபடி, “என் உறவு திமுகவுடன் மட்டுமே. திமுக வேறு யாருடன் உறவு வைத்திருந்தால் எனக்கு என்ன? அது அவர்கள் உரிமை” என்றார்.

1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ராஜாஜி, “திமுகவுடனான தேனிலவு முடிந்து விட்டது” என்றார். அந்த நிருபர் கேட்ட கேள்வியால் வந்த வினை.

உடனே அந்த நிருபர் சற்று நேரத்தில் அண்ணாவிடம் போய், “உங்களுடனான தேனிலவு முடிஞ்சு போயாச்சு என்று ராஜாஜி கூறிவிட்டாரே” என்று கேட்டார். அருமையான பதில் கிடைத்தது.

“உண்மைதான். தேனிலவு முடிந்து விட்டது. குடும்பம் நடத்த ஆரம்பிக்கப் போகிறோம்” என்றார் அண்ணா.

எம்ஜிஆருக்கு சில நிருபர்கள் மீது சந்தேகம் உண்டு. சந்திப்பு முடிந்ததும் அந்த நிருபரிடம் “என்ன… கலைஞரிடம் போய் சொல்ல விஷயம் போதுமா” என்பார் மூக்கை வருடியவாறு.

நிருபர்களின் இடக்குமடக்கு கேள்விகளால் பல சமயம் தலைவர்கள் அளிக்கும் பதில் பரபரப்பு செய்தியாகிவிட்டதும் உண்டு. ஆனால் நிருபர்கள் மீது பாய்வதோ, அதனால் நிருபருக்கு வேலை போனதாகவோ நடந்ததே கிடையாது என்றார் நம் நண்பர்.

“பொதுவாக பா.ஜ.க. தலைவர்கள் எப்போதுமே எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில்தான் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்த பெருந்தலைவர்கள் அமைதியாக மதிப்பான சூழ்நிலையில்தான் பேசுவது வழக்கமாக இருந்தது. எந்த கட்சி பத்திரிகையானால் என்ன. அந்த பத்திரிகையை படிக்கும் மக்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள்தானே” நிருபர் நிகழ்ச்சிகளை கூறி முடித்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவரின் சுறுசுறுப்பும், மின்னல் வேக பதில்களும் பல அரசியல் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் ஆச்சரியப்படுத்துவது உண்மைதான். அவர்கள் சபாஷ் போடுவதும் உண்டு.

“சுப்பிரமணிய சுவாமியை பற்றி அண்ணாமலை கூறியது ஞாபகம் வருகிறது. ‘OLD INDIA’ பழக்கம் என்றார் அல்லவா? அண்ணாமலையின் கோபமும், உரக்க சீற்ற பேச்சுகளும் இன்றைய ‘NORTH INDIA’ பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்!” என்று குறுக்கிட்டார் இதுவரை அமைதியாக இருந்த மூத்த இடதுசாரி தலைவர்.

“ராஜாஜி, அண்ணா, சி.எஸ்., கலைஞர் ஏன் ஜெயலலிதாவின் அணுகுமுறைகளை கவனித்து பாருங்கள் புரியும். ஒரு சினிமா ரிலீஸ் சம்பந்தமாக நடந்த தகராறில் கமல்ஹாசனுக்கு ஜெ. கொடுத்த சூடான புத்திமதிகூட ஒரு உதாரணம்! டென்ஷன் பாதிப்பே இல்லாமல் கூலாக பேசினாரே ஜெ” என்றார் அவர்.

“புதிய தலைவர்… புதிய அரசியல்… புதிய சூழ்நிலை… சீக்கிரத்தில் அண்ணாமலை எதையும் சமாளித்துவிடும் அரசியல்வாதிதான்” என்றார்.

கடைசியாக அண்ணாமலைக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார்.

“சமீபத்தில் ஒரு நிருபரின் கேள்விக்கு அவர் கோபத்தோடு பதில் கூற, அந்த நிருபருக்கு வேலை போயிற்றே. இளம் நிருபர்கள் துடிப்போடு இருப்பார்கள். இளம் கன்று பயம் அறியாது. அண்ணாமலையார் அந்த இளைஞருக்கு அதே பத்திரிகையில் மீண்டும் பணியில் அமர்த்த முயற்சி எடுப்பாரா?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...