No menu items!

அண்ணாமலை தனிக் கட்சியா? – மிஸ் ரகசியா

அண்ணாமலை தனிக் கட்சியா? – மிஸ் ரகசியா

மாண்டாஸ் புயலுக்கு பயந்து பாதி பேருக்கு மேல் லீவ் கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டிருக்க, எதற்கும் அஞ்சமாட்டேன் என்பதைப்போல் டாணென்று 11 மணிக்கு ஆபீசில் ஆஜரானாள் ரகசியா.

“பரவாயில்லையே புயலுக்கு பயப்படாமல் ஆபீசுக்கு வந்துவிட்டாயே?”

 “நானே ஒரு பெண் புயல். அதனால் மாண்டாஸ் புயலெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. இந்த புயலில்கூட காலையில் அறிவாலயம், கமலாலயம் பக்கமெல்லாம் ஒரு ரவுண்ட் அடித்துத்தான் வந்தேன்.”

 “பலே… தைரியமான பெண்தான் நீ. கட்சி ஆபீஸ்களை ரவுண்ட் அடித்ததில் ஏதும் செய்திகள் கிடைத்ததா?”

 “முதலில் கமலாயத்தில் ஆரம்பிக்கிறேன். பொதுவாக ஒரு அரசியல் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் வந்ததால் அவருக்கு அதனால் பாதிப்புதான் ஏற்படும். ஆனால் கேசவ விநாயகத்தின் விஷயத்தில் அது தலைகீழாக இருக்கிறது.”

 “அது எப்படி?”

 “கேசவ விநாயகம் மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்புக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன.  அதனால் அவரை அப்பதவியில் இருந்து மாற்றுவது பற்றி ஆறு மாதத்திற்கு முன்பே டெல்லி தலைமை யோசித்து வந்தது. தமிழ்நாட்டுக்கு தோதான வேறொரு நிர்வாகியை டெல்லி தலைமை  தேடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் அவரைப் பற்றிய சர்ச்சைகள் வந்திருக்கிறது. இந்த நிலையில் அவரை மாற்றினால் அந்த புகார்களை அங்கீகரித்தது போல் ஆகிவிடும் என்று டெல்லி தலைமை  யோசிக்கிறது. அதனால் இப்போதைக்கு சர்ச்சைகள் காரணமாக அவரது பதவி தப்பி இருக்கிறது.”

  “இது அண்ணாமலைக்கு டென்ஷனைக் கொடுக்குமே?”

 “இப்போதைக்கு அதைப் பற்றியெல்லாம் அவர் யோசிப்பதாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தனது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதியாக நம்புகிறார்”

“என்ன காரணம்?”

“தன்னைவிட்டால் மக்கள் முன் நிறுத்த வேறு ஆள் இல்லை என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் நினைக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், கேசவவிநாயகம் லாஜிக் இவருக்கும் பொருந்தும். இப்போது அண்ணாமலையை நீக்கினால் தமிழ்நாட்டு பாஜகவில் பெரிய பிரச்சினை இருக்கிறது என்ற பிம்பம் வரும் என்று மேலிடம் யோசிக்கிறது. இதெல்லாம் அண்ணாமலைக்கு சாதகமாக இருக்கிறது”

“ஓஹோ!”

”பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்கள்,  மாநில நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கிறது.  அந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘மாவட்ட வாரியாக கட்சி நிலவரம் எனக்குத் தெரியும்.  நான் யார் மீதும் இரக்கம் காட்ட மாட்டேன். மனதை கல்லாக்கிக் கொண்டு விட்டேன். கட்சிக்கு உதவாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீக்க நான் யோசிக்க மாட்டேன். இனிமேல் என்னிடம் கருணையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்’ என்று  கூறியிருக்கிறார்.”

 “வலிமையான தலைவராக மாறிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்.”

 “அதற்கான முயற்சியில் இருக்கிறார் என்பதே சரி.  கட்சியில் தனது எதிர்ப்பாளர்களை கண்காணிக்க  அவர்கள்  என்ன செய்கிறார்கள் என்று தனியார் ஏஜென்சி மூலம் வேவு பார்ப்பதாகவும், செல்பேசிகளை ஒட்டுக் கேட்பதாகவும் ஒரு சாரார் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக அவரது எதிர்ப்பாளர்கள் டெல்லிக்கு புகாரை தட்டி விட்டிருக்கிறார்கள்.”

”இத்தனை விஷயங்கள் நடக்கிறதா தமிழ்நாட்டு பாஜகவில்?”

“தன்னை ஓரம் கட்டினால் தனிக் கட்சி காணவும் தயாராக இருக்கிறார் அண்ணாமலை. அவர் இப்போதுதானே பாஜகவில் சேர்ந்தார். இந்த ஒரு வருடத்தில் தன்னை நன்றாக முன்னிறுத்திக் கொண்டார். அந்த தைரியம் அவருக்கு இருக்கிறது”

 “வந்ததில் இருந்து பாஜக புராணமாகவே இருக்கிறதே.. அறிவாலயம் பக்கம் வா.உதயநிதி 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்பார் என்ற செய்தி பலமாக அடிபடுகிறதே?’

 “அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்பது உண்மைதான். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பதவியோ அல்லது தற்போது முதல்வரிடம் இருக்கும் ஏதாவது ஒரு இலாகாவோ ஒதுக்கப்படாலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கு மாற்று கருத்தையும் சொல்கிறார்கள்”

“என்ன சொல்கிறார்கள்?”

”14-ம் தேதி உதயநிதிக்கு பதவியேற்பு நடக்கும் என்று நிச்சயமாக கூறமுடியாது. உதயநிதி இப்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள்.”

“ஆக உதயநிதி விஷயத்தில் திமுக குழம்பி கிடக்கிறது என்று சொல்”

“ஆமாம். ஆனால் அமைச்சரவை மாற்றம் உண்டு என்கிறார்கள். அமைச்சர் மூர்த்தியிடமிருந்து பத்திரப்பதிவு துறை பறிக்கப்படும் என்கிறார்கள். பத்திரப்பதிவு துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து செய்தி வெளியானது. அதன் எஃபெக்ட் இது. டிஆர்.பாலுவின் மகன் டிஆர்பி ராஜா அமைச்சராக வாய்ப்பு உள்ளது.

கேகேஎஸ்எஸ்ஆரிடமிருந்து ஒரு துறையைப் பறித்து ஐ.பெரியசாமியிடம் கொடுக்கப் போவதாகவும் செய்திகள் உள்ளன. அறிவாலயத்தில் இப்போது இதுதான் பரபரப்பான செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது.”

 “சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கட்சியில் சீனியர்களை மதிப்பதில்லை என்று ஆர்.எஸ்.பாரதி புலம்பி இருக்கிறாரே?”

 “ஆர்.எஸ்.பாரதி துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த பதவி கனிமொழிக்கு போய்விட்டது. ராஜ்யசபா எம்பி பதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. மகனை கவுன்சிலராக்க முயன்றார். அதுவும் நடக்கவில்லை. ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு போன்றோரின் மகன்களுக்கெல்லாம் பதவி கிடைக்கும்போது, தனது மகனுக்கு பதவி கிடைக்கவில்லை என்பது அவருக்கு மிகவும் மனவேதனையைக் கொடுத்துள்ளது. அதன் எதிரொலிதான் இந்த பேச்சு என்று அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் துரைமுருகன் ஈடுபட்டிருக்கிறாராம்.”

’ஆர்.எஸ்.பாரதியின் மகன் டாக்டர் சாய் லட்சுமிகாந்த் மறுத்திருக்கிறாரே. மகனுக்கு பதவி இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி வருத்தம் என்ற செய்தியைப் போட்டு கிண்டலடித்திருக்கிறாரே”

“ஆமாம். டிவிட்டரில் பார்த்தேன். இது சங்கிகளின் வேலை என்று குறிப்பிட்டிருக்கிறார்”

 “ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்திருக்கிறார்களே?”

 “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவுக்கு  ஒப்புதல் தருமாறு தமிழக மற்றும் அரசியல் கட்சிகள்  ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இனிமேல் ஆன்லைன் சூதாட்டத்தில் யாராவது தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக  சொல்லியிருக்கிறது.  இந்த சூழ்நிலையில் ஆன்லைனில் விளையாட்டு நிறுவன நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து இந்த மசோதா சட்டப்படி செல்லாது இன்று சட்டவிதிகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் தவிர இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்றெல்லாம் வாதிட்டு இருக்கிறார்கள். இது தவறான செயல் என்று எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்றன. தமிழ்நாட்டு பாஜகவிலேயே இந்த சந்திப்பை விரும்பவில்லையாம்”

“அப்புறம் ஏன் சந்தித்தாராம்?”

“டெல்லியை சேர்ந்த முக்கிய பாஜக தலைவர் ஆளுநர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாராம். அந்த அழுத்தத்தை ஆளுநரால் தட்ட முடியவில்லையாம்”

“ஆளுநருக்கு எதிரான திமுக போஸ்டர்களை கவனித்தாயா?”

“ஆமாம். கவர்னர் மாளிகையில் காத்திருக்கும் மசோதாக்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவது இந்த பெரிய சைஸ் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. ஆளுநருக்கு எதிரா திமுக தீவிரமாக இருப்பதைக் காட்டுகிறது”

“ஆளுநர் ரியாக்‌ஷன் என்னவாம்?”

“அவருக்கென்ன…மேலிடம் சொல்வதை செய்யப் போகிறார்” என்று சிரித்துக் கொண்டே ரெயின்கோட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...