No menu items!

மாண்டஸ் புயல்: நாம் என்ன செய்ய வேண்டும்?

மாண்டஸ் புயல்: நாம் என்ன செய்ய வேண்டும்?

சென்னை அருகே இன்று இரவு சுமார் 85 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் மாண்டஸ் புயலின் தாக்கம் எப்படியிருக்கும்? அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

மாண்டஸ் புயல் எப்போது, எங்கே கரையை கடக்கும்?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை (07-12-2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இன்று (09-12-2022) நள்ளிரவு 12.00 – 1.00 மணிக்குள் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, குறிப்பாக மகாபலிபுரம் அருகில் புயல் கரையைக் கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை புயல் கரையைக் கடக்கும் சுற்று வட்டாரப் பகுதியில் 75 முதல் 85 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன், கனமழை அல்லது அதி கனமழை பெய்யகூடும். இதனை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் மணல் பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு என மிக சமீபத்தில் அமைக்கப்பட்ட பாதை சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தயார் நிலையில் மீட்புப் படை?

புயலையும் தீவிர கனமழையையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை  தமிழ்நாடு அரசு கேட்டுக்கோண்டுள்ளது.

இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்கவும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன.

பலத்தக் காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற, மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளது.

ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சரி, இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசு செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, பொதுமக்களும் தங்களை காத்துகொள்ள அதற்கான முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியம். அதனை தெரிந்துகொள்வோம்.

புயல் தாக்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

இந்திய வானிலை ஆய்வு மையமும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஃபேஸ்புக், ட்விட்டர், TNSMART செயலி மூலம் பகிரும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். இதற்காக இவற்றையும் வானொலி மற்றும் தொலைக்காட்சியையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தை அறிந்து வைத்துக்கொண்டு 12 மணி நேரத்திற்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

காய்கறி, பால், உலர்ந்த உணவு வகைகள் உட்பட தேவையான அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான அளவு குடி நீரையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

புயல் தாக்கும் பகுதியில் இருந்தால், அடிப்படை ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

பழங்கால வீடுகள் என்றால் கட்டடம் பலமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஓடு, ஆஸ்பெடாஸ் போன்ற மேற்கூரை இருப்பின் அதன் கூரை திருகுகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சோதித்துக் கொள்ளவேண்டும்.

வீடு அருகே மரம் இருந்தால், வீடு மேல் அதன் கிளை விழும் அபாயம் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும்.

செல்லப் பிராணிகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.

அவசரகாலத்திற்கான விளக்குகள், குறிப்பாக டார்ச் லைட், பேட்டரி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை தயார்படுத்தி வைத்துக்கொள்ளவும்.

பேண்ட் எய்டு, மருந்துகள், குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகம் உட்பட அவசரகால உபகரணங்களை அருகில் வைத்துக்கொள்வது நல்லது.

மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது.

சுற்றத்தாருக்கு புயல் எச்சரிக்கை பற்றி தெரியவில்லை என்றால் தெரியப்படுத்தவும்.

புயல் தாக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

புயல் தாக்கும் போது வீட்டின் மின்சாரத்தை நிறுத்தி வைத்துவிட வேண்டும். வீட்டிலுள்ள மின் உபகரணங்கள் அனைத்தின் பிளக்கையும் எடுத்து விடவும்.

தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக புயல் கரையை கடக்கும்போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. எக்காரணம் கொண்டும் கடற்கரைக்குச் செல்லக்கூடாது, மரங்களின் கீழ் நிற்கக்கூடாது.

அத்தியாவசிய பணிகளுக்கு தவிர பேருந்துகள், சரக்கு வாகனங்கள் சாலைகளில் செல்லக்கூடாது.

நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் ‘செல்பி’ எடுக்க வேண்டாம்.

புயலின் போது பலமாக காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்பதால், கடற்கரை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்கள் அல்லது அரசு ஏற்படுத்தும் நிவாரண முகாமுக்கு செல்வது நல்லது.

புயலுக்கு பின் என்ன செய்யவேண்டும்?

இனி பாதிப்பு இல்லை என கூறப்படும் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

புயலின்போது பலமான காற்று காரணமாக மின்சார ஒயர்கள் அறுந்துகிட வாய்ப்புண்டு. எனவே, புயலுக்கு பின் வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது கவனமாக செல்லவும். மின்சார வயர்கள் அறுந்து கிடந்தால் உடனே மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

மின்சார வயர் மீது மரம் முறிந்து விழுந்திருந்தாலும் அருகில் செல்லாதீர்கள்.

வீட்டில் ஈரமான கையுடன் மின்சாதனங்களை தொட வேண்டாம்.

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அல்லது சுத்திகரித்து பின் குடிக்கவும்.

உங்கள் வீடு புயலால் சேதமடைந்திருந்தால் உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...