’விக்ரம்’ படம் வசூலை அள்ளிக் குவித்து கொண்டிருக்கிறது என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்க, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அறிவாலயம் அருகில் இருக்கும் பார்க் ரிஜென்ஸி நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கமல் ஹாஸன். அவருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் வந்திருந்தார்.
ப்ரஸ் மீட் நடக்கும் அரங்கில் நூற்றுக்கணக்கில் கேமராக்கள். ஏறக்குறைய 300 ஊடகவியலாளர்கள் என அந்த ஹோட்டலே அல்லோகலப்பட்டு கொண்டிருந்தது.
முதலில் மேடையில் ஒரேயொரு இருக்கை மட்டும் போடப்பட்டிருந்தது. கமல் மட்டும்தான் வருகிறார் போல என அங்கிருந்தவர்கள் கிசுகிசுத்து கொண்டிருக்க, அடுத்து ஒரு இருக்கையும் மேடையில் ஏற்றினார்கள். ஓகே இயக்குநரும் வருகிறார் என ஒருவருக்கொருவர் உறுதி செய்து கொண்டனர்.
வலதுப்பக்கம் 4 பவுன்ஸர்கள் இடதுப்பக்கம் 4 பவுன்ஸர்கள் என மொத்தம் 8 பவுன்ஸர்கள் சூழ கமல் விறுவிறுவென நடந்து வந்தார். மேடையில் கமல் மட்டும் வந்து அமர, இயக்குநர் எங்கே என்ற திரும்பவும் ஒரு குழப்பம் என்று கமல் ஊடகங்களுக்கு கமல் நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அடுத்த இரண்டு நிமிடங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் வந்து மேடையில் அமர்ந்தார்.
‘’நாங்க நாலு நாளாக எங்களது நண்பர்களையும் தோழர்களையும் அங்கேயும் இங்கேயும் சந்தித்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கெல்லாம் நன்றி சொல்றதுன்னா, அடுத்து இதேபோல ஒரு நல்ல படத்தை கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.
உங்களுடைய பாராட்டுக்களுக்கு தகுதியுடையவர்களாக நாங்க இருக்க வேண்டுமென்பதுதான் எங்களோட ஆசை. கிடைச்சிருச்சி. இனி நாங்கதான் பெரிய ஆளு. இதுபோதும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது இல்ல. அதேபோல என்னப் பார்த்து வளர்ந்தவர்கள் என்னை முன்மாதிரியாக பார்த்தவர்களுக்கும் அது இருக்காது என்று நம்புகிறேன்’’ என்று கமல் புன்னகைத்தார்.
படம் ஹிட் கொடுத்த உடனே உச்சத்திற்கு போய்விட வேண்டாம். சாதிக்க இன்னும் அதிகம் இருக்கிறது என்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு மேடையிலேயே அறிவுரை சொல்வது போல இருந்தது கமலின் அந்த வார்த்தைகள்.
’’இந்த மாபெரும் வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தைக் கொடுத்திருக்கு. இன்னும் பொறுப்பு கூடியிருக்கு. இது பத்தாது’ என்று கமலின் வார்த்தைகளுக்கு பதிலாக அமைந்தது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமெண்ட்.
விக்ரம் ஹிட்டானதும் இயக்குநருக்கு பரிசு கொடுக்கிறீங்க. சூர்யா, அஸிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கெல்லாம் பரிசு கொடுக்கிறீங்க. இதுக்கு முன்னாடி பல சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்தப்பெல்லாம் இது போல பரிசு கொடுக்கல்லையே’ என்ற கேள்விக்கு, ‘’இப்பதான் இதெல்லாம் தெரிய வருது. இதுக்கு முன்னாடி நிறைய விஷயங்கள் சத்தமில்லாமல் நடந்திருக்கு.
வெற்றி கூட அமைதியாகதான் நடக்கும். இப்ப தும்மினா கூட பீரங்கி சத்தத்திற்கு இணையாக பிரதிபலிக்கப்படுது. இது ஊடக பலம்’’ என்று சிரித்தார் கமல்.
’இந்த வெற்றி மர்மயோகி, சபாஷ் நாயுடு, மருதநாயகம் ப்ராஜெக்ட்களை மீண்டும் உயிர்பிக்க செய்யுமா’ என்ற கேள்விக்கு, ‘’அவ்வளவு கால தாமதத்துக்கு பிறகு எனக்கே ஒரு டிஸ் இண்ட்ரஸ்ட் என்பார்களே அது போல இருக்கு. எதையும் சிரத்தை இல்லாமல் செய்ய மாட்டேன். எனக்கு புதுசுபுதுசா செய்யணும். அது கூடவே நான் வாழ்ந்துட்டேன். அதனால எனக்கு அது பழசா தெரியுது. என்னைப் பொறுத்தவரை நான் பார்த்த படம். ரொம்ப அதிகம் பார்த்த உணர்வு இருக்கு. தேவைப்படுமென்றால் அதற்கு தயாராக இருப்பவர்கள் வரவேண்டும். கூடவே இணைந்து வர தயாராக இருக்கவேண்டும். தனியாக மாட்டி கொள்ளகூடாது என்பது அந்தப் படம் எனக்கு கத்துகொடுத்த பாடம் அப்படி’’ என்றார்.
இந்தப்படத்துக்கு மட்டும் ஏன் இந்த கொண்டாட்டம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘’இதே போலதான அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி படங்கள் இங்கே வெற்றி பெற்ற பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து ஹிந்திக்குப் போச்சு. அங்கேயும் வெற்றி. அதனால் கொஞ்சம் இடைவெளி விட்டு கொண்டாடினோம்.
இப்ப இந்தியா முழுக்க ஒரே நேரத்துல, ’ஏக் துஜே கேலியே’ படத்துக்கு கிடைச்ச மாதிரி நாடு தழுவிய பாராட்டு கிடைச்சிருக்கு. அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடுங்களேன்’’ என்று சிரித்தார் கமல்.
’ஹீரோக்களின் ஆதிக்கமுள்ள சினிமாவுல, விக்ரம் படத்தோட முதல்பாதியில கமலுக்கு வசனம் அதிகமில்லையே. எப்படி அவரை சம்மதிக்க வைச்சீங்க’ என்று லோகேஷிடம் கேட்டபோது, லோகேஷ் பதிலளிப்பதற்கு முன்பாகவே கமல், ‘’ அவர் ஒரு பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் சொல்லிடுறேன். முதல்பாதியில டயலாக் குறைவாக இருந்தது. ஆனால் நான் டயலாக்கே இல்லாம நடிச்சிருக்கேன். அதனால என்னை சம்மதிக்க வைக்கிறது பெரிய கஷ்டமான விஷயமில்ல’’ என்று லோகேஷூக்கு ஆதரவுக்கரம் நீட்டினார் கமல்.
கமல் படமென்றாலே ஒரு கிஸ் இருக்கும். கிளாமர் பாடல் இருக்கும். இந்தப்படத்துல எதுவுமில்லையே என்ற கேட்டபோது, ‘’அது உங்க ஆசை. என் ஆசை இல்ல’’ என்று கமல் பலமாக சிரிக்க, அந்த அரங்கமே ஹை டெசிபல் சிரிப்பில் நிறைந்திருந்தது.
வழக்கம் போல, ஒரு கேள்வி எழுந்தது. ரஜினி – கமல் – லோகேஷ் இணைய வாய்ப்பிருக்கா என்ற கேள்விக்கு, ‘’நான் ரெடி. ரஜினி ரெடியான்னு அவரு சொல்லணும். லோகேஷ் ரெடியான்னு இவரு சொல்லணும். எல்லாம் ஒகேன்னா நாங்க பேசிட்டு, உங்களுக்கு சொல்றோம்’’ என்று முடிக்கும் போதே சந்திப்பு முடிந்தது என்ற தொனியில் கமல் எழுந்து நிற்க் லோகேஷும் எழுந்துவிட்டார்.
இதனால் போட்டோ எடுக்கலாம் என நினைத்த போட்டோகிராஃபர்களுக்கு ஏமாற்றம். அடுத்த நொடியே கமல் வெளியேற இரு பக்கமும் பவுன்ஸர்கள். கமலும், லோகேஷூம் மதிய உணவுக்காக ஹோட்டலின் மாடி அறைக்கு சென்றனர்.
கமல் கீழே வருவார் என லிப்ட் பக்கம் போட்டோகிராஃபர்கள் காத்திருக்க, மற்றொரு லிப்ட்டில் கமல் கீழே இறங்கி ஜம்மென்று தனது காரில் ஜெட் வேகத்தில் கிளம்பினார்,