No menu items!

நியூஸ் அப்டேட்: ஜூலை 18-ல் ஜனாதிபதி தேர்தல்

நியூஸ் அப்டேட்: ஜூலை 18-ல் ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ராஜ்யசபாவின் செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார்.

ஜனாதிபதி தேர்தலில் பதிவாக உள்ள மொத்த வாக்குகள் 10,86,431. 4,809 ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜுன் 25-ல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஜுன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜுன் 30-ல் நடைபெறும். மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜுலை 2. ஜுலை 21-ல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “LKG, UKG, வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வரின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் LKG, UKG, வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார்.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்கும் பாரத் நெட் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் ‘கண்ணாடி இழை கம்பி வடம்’ மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் ‘பாரத்நெட்’ திட்டம், தமிழ்நாடு அரசின் ‘தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்’ வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

“இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு இணைய (டிஜிட்டல்) சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம் (Tele Medicine) மற்றும் தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகளை வழங்க இயலும். புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மையடையவும் இத்திட்டம் வழி வகுக்கும்” என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை

மயிலாடுதுறை அருகே நீடூரைச் சேர்ந்த சாதிக் பாஷா உட்பட 5 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் மயிலாடுதுறையில் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், கிளியனூர், உத்திரங்குடி உள்ளிட்ட 5 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

பரத நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை: விசாகா கமிட்டி அறிக்கை

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையில் 17 மாவட்ட அரசு இசைப் பள்ளி கலையியல் அறிவுரைஞராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது, அங்கே பரதநாட்டிய ஆசிரியையாக இருந்த, தேனி சின்னமனூரை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்வானின் பேத்தி, தன்னிடம் அத்துமீறியதாக புகார் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜாகிர் உசேன், “ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்துகொண்டு சொல்லியுள்ள இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன். விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையில், ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகார்கள் அனைத்தும் புனையப்பட்டது என தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு: சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் பிஏ4, பிஏ5 வகை உருமாற்றமடைந்த கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தில் 245 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலை நாம் அலட்சியப்படுத்தினால் அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 200-ஐ தாண்டும். எனவே, மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் எழும் நிலையைக் கருத்தில் கொண்டு, அனைவரும் முகக்கவசம் அணிவதையும் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் முறையாக அதனை செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...