No menu items!

இவ்ளோ தூரமா கிளாம்பாக்கம்: குமுறும் தென் மாவட்ட மக்கள்!

இவ்ளோ தூரமா கிளாம்பாக்கம்: குமுறும் தென் மாவட்ட மக்கள்!

கிளாம்பாக்கம் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த பேருந்து நிலையத்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஆட்சியாளர்களுக்கு புதிய தலைவலியாக மாறியிருக்கிறது, கிளாம்பாக்கம். என்ன பிரச்சினை?

பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகள் பாரிமுனையில் இருந்துதான் முதலில் இயக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு எழும்பூரில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. பிராட்வே, எழும்பூர் இரண்டும் சென்னை மாநகரின் மையத்தில் இருந்ததால், இங்கே இருந்து சென்னை மாநகரின் எந்த பகுதிக்கு செல்வதற்கும் ஏதுவாகவே இருந்தது. தென் மாவட்ட மக்களில் கணிசமானவர்கள் வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில்தான் அதிகம் வசித்தனர். ஆகையால் தென்மாவட்ட மக்கள் சென்னை மாநகருக்குள் வரவும் சொந்த ஊர் திரும்பி செல்லவும் பேருதவியாகவே இருந்தது. தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்களுக்கு, வழியில் ஏறிக்கொள்ளலாம்  என்பதால் அவர்களுக்கும் எளிதானதாகவே இருந்தது.

ஆனால், சென்னை வளர வளர வெளியூர் பேருந்துகளால் மாநகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வெளியூர் பேருந்துகளுக்கான நிலையம் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. கோயம்பேடுக்கு மாற்றப்பட்ட ஆரம்ப காலத்தில், சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்பவர்களும் வெளியூரில் இருந்து சென்னை வருபவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதற்கு மக்கள் பழகி வந்தபோது, சென்னை மேலும் வளர்ந்து, மீண்டும் வெளியூர் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. குறிப்பாக, பண்டிகை நாட்களில், பெருங்களத்தூரை கடந்து சென்னைக்குள் வருவதும் சென்னையில் இருந்து போவதும் கடும் சிரமம் என்றானது. இதனால், பண்டிகை நாட்களில் மாநகருக்கு வெளியே தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு, வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு

இந்நிலையில், மீண்டும் மாநகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பெருங்களத்தூர் தாண்டி கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. இப்போது பணிகள் முடிந்து தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரால் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் போல் முகப்பு, நாள்தோறும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாக இடவசதி, 1000 கார்கள் மற்றும் 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கழிவறைகள், பேருந்து நிலையத்துக்குள்ளேயே அவசர சிகிச்சை மையம், மருந்தகம், 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, மாநகர பேருந்துகள் வந்து செல்வதற்கென தனி நடைமேடை, மாநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்து நிலையத்துக்கு செல்ல எஸ்கலேட்டர் வசதி, அதிக பாரத்தை கொண்டு செல்ல லிஃப்ட், பயணிகள் ஓய்வறை, ஓட்டுநர் – நடத்துநர் ஓய்வறை, 150 கண்காணிப்பு கேமராக்கள் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம்.

இதனால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும் என ஆட்சியாளர்கள் எதிர்பார்த்திருக்க எல்லா பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் புறப்பட திமுகவினர் திகைத்து போயிருக்கிறார்கள்.

குமுறும் தென் மாவட்ட மக்கள்

சென்னை பாரிமுனையில் இருந்து 39 கிமீ, தி.நகரில் இருந்து 37 கிமீ, கோயம்பேட்டில் இருந்து 29 கிமீ, திருவான்மியூரில் இருந்து 28 கிமீ, எண்ணூரில் இருந்து 55 கிமீ என சென்னையின் பிரதான பகுதிகளில் இருந்து தொலைவில் இருக்கிறது கிளாம்பாக்கம். இதனால், மாநகரில் இருந்து கிளாம்பாக்கம் வந்து செல்வதே கடும் சிரமமாக இருக்கும் எனக் குமுறுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். கிளாம்பாக்கத்தில் இறங்கி மூட்டை முடிச்சுகளுடன் பேருந்து பிடித்து வட சென்னையான எண்ணூர், தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் போவதாகட்டும்.. அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு போவதாகட்டும் மலைக்க வைக்கக் கூடியதுதான் என்பதுதான் பெரும்பாலானவர்கள் குரலாக இருக்கிறது. 

இது தொடர்பாக நம்முடன் பேசிய திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாசுதேவன், “கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்னையின் பிரதான பகுதியிலிருந்து தோராயமாக 35 – 40 கிமீ  தொலைவில் உள்ளது. வட சென்னை மக்கள் தான் பரிதாபத்திற்குரியவர்கள். இங்கு வந்து செல்ல 60 கிமீ பயணம் செய்ய வேண்டும். கையில் லக்கேஜ்ஜோடு இவ்வளவுதூரம் பயணம் எளிதல்ல. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் இருக்கும்பகுதி தொடர்ந்து மழைநீர் தேங்கும் பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. அத்தோடு அந்த பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலைகள் சின்ன மழைக்கு கூட வெள்ளம் தேங்கும் சாலைகள் என்பதோடு, ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை என்பதும் நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது” என்கிறார்.

ஆனால், இப்போது உருவாகியுள்ள எதிர்ப்புகளுக்கு மத்திய அரசே காரணம் என்கிறார், நா. செல்வகுமார். “மெத்தனமா ஊர்ந்து கொண்டிருந்த கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வேலைகளை திமுக ஆட்சிக்கு வந்ததும் முடுக்கிவிட்டது. அதே நேரத்தில் கிளம்பாக்கம் வரை மெட்ரோ விரிவாக்கத்திற்கும், புதிய ரயில் நிலையம் அமைக்கவும் ஒன்றிய அரசிடம் முறையான அனுமதியை கோரிவிட்டது. 3 ஆண்டுகளில் பேருந்து நிலையத்தையே கட்டி முடிந்துவிட்டது திமுக அரசு. புதிய ரயில் நிலையத்துக்கு தென்னக ரயில்வேயிடம் நிதிக்கு காத்திருந்து இறுதியில் அதற்கும் மாநில அரசே நிதி ஒதுக்கிவிட்டது. ஆனால், மெட்ரோ அனுமதி இன்னுமே வழங்கப்படவில்லை. 3 ஆண்டுகளாக கோப்புகளை கூட நகர்த்தாமல் திட்டமிட்டு முடக்குகிறது ஒன்றிய அரசு. மெட்ரோ மற்றும் புதிய ரயில் நிலைய பணிகள் முடிந்திருந்தால் மக்கள் தற்போது சந்திக்கும் பிரச்சினைகள் இருந்திருக்காது” என்கிறார், செல்வகுமார்.

அதேநேரம் ஆரம்பகால சிரமங்கள் இருந்தாலும் விரைவில் மக்கள் புதிய பேருந்து நிலையத்துக்கு பழகிவிடுவார்கள் என்பதும் பலரது கருத்தாக உள்ளது. “கொத்தவால் சாவடியை கோயம்பேட்டுக்கு மாற்றிய போதும், ப்ராட்வே பேருந்து நிலையத்தை கோயம்பேடுக்கு மாற்றிய போதும் இந்த நடைமுறை சிக்கல்கள் இருந்தது. ஆனால், சென்னை மக்கள் அதைப் பழகிக்கொண்டோம். அதுபோல் இதுவும் பழகும். சென்னை வளர இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது” என்கிறார்கள் அவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...