No menu items!

15 ரன் 6 விக்கெட் – முகமது சிராஜ் சாதித்த கதை!

15 ரன் 6 விக்கெட் – முகமது சிராஜ் சாதித்த கதை!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை, அதன் சொந்த மண்ணிலேயே வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியிருக்கிறது இந்தியா. நமது பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சுக்கு முன்னால் தென் ஆப்பிரிக்க அணியால் 24 ஓவர்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். இப்போட்டியில் 9 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை அள்ளி எடுத்திருக்கிறார் முகமது சிராஜ்.

பந்துவீச்சாளர்களில் 2 வகை இருக்கிறார்கள். முதல் வகை பந்துவீச்சாளர்கள் உள்ளூரில் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆனால் வெளியூரில் கோட்டை விடுவார்கள். இரண்டாவது வகை பந்து வீச்சாளர்கள் உள்ளூரில் அத்தனை சிறப்பாக பந்துவீச மாட்டார்கள். ஆனால் வெளியூர்களுக்கு போனால் புலியாக பாய்வார்கள். இதில் முகமது சிராஜ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். வெளிநாடுகளில் பந்துகள் இடுப்புக்கு மேல் குதித்து பாயும் பிட்ச்களில் ஆடுவதென்றால் சிராஜுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முகமது சிராஜ் இதுவரை 67 விக்கெட்களை எடுத்திருக்கிறார். இதில் 47 விக்கெட்களை அவர் வெளிநாட்டு பிட்ச்களில் எடுத்திருக்கிறார் என்பதில் இருந்தே அவர் வெளிநாடுகளில் எந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். கடந்த 2 ஆண்டுகளாகத்தான் வெளிநாட்டு பிட்ச்களில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவித்து வருகிறது. சிராஜ் கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு பிட்ச்களில் சிறப்பாக பந்து வீசி வருவது இதற்கு முக்கிய காரணம்.

தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் முகமது சிராஜ். அவரது அப்பா முகமது காஸ் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர். அவரது வருமானம் மட்டுமே குடும்பத்துக்கு போதாமல் இருந்ததால் அம்மாவும் பல்வேறு வீடுகளில் வேலை பார்த்து குடும்ப செலவுக்காக பணம் சம்பாதித்தார். இப்படி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த சிராஜுக்கு, மற்ற இந்திய வீர்ர்களைப் போல கிரிக்கெட் அகாடமிகளுக்கு சென்று பயிற்சி பெறும் வசதியெல்லாம் கிடைக்கவில்லை. வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய மைதானங்களில் வெறுங்காலில் கிரிக்கெட் ஆடித்தான் சிறுவயதில் பயிற்சி பெற்றார்.

ஆரம்பத்தில் ஒரு பெரிய பேட்ஸ்மேனாக வேண்டும் என்பதுதான் சிராஜின் கனவாக இருந்தது. ஆனால் அவரது பந்து வீசும் வேகத்தைப் பார்த்த நண்பர்கள்தான் வேகப்பந்து வீச்சாளராக பயிற்சி பெறுமாறு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் சிராஜின் பந்து வீசும் ஆற்றலைப் பார்த்த முகமத் மஹ்பூப் அகமத் என்ற பயிற்சியாளர் அவருக்கு இலவசமாக பயிற்சி தர சம்மதித்துள்ளார். இதற்காக தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள உப்பல் ஸ்டேடியத்துக்கு அவர் தினந்தோறும் செல்லவேண்டி இருந்தது. அங்கு மற்ற வீர்ர்கள் எல்லாம் காரில் வந்து பயிற்சி பெற, சிராஜ் மட்டும் தனது அப்பா செகண்ட் ஹாண்டில் வாங்கிக் கொடுத்த பழைய பிளாட்டினா பைக்கில் பயிற்சிக்கு சென்றுள்ளார்.

இந்த காலகட்டத்தைப் பற்றி சொல்லும் சிராஜ், “என் அப்பாவின் வருமானம் குறைவு என்றாலும், நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வருவேன் என்று அவர் நம்பினார். அதனால் தனது வருமானத்தில் இருந்து என் பயிற்சி செலவுக்காக தினமும் 60 ரூபாய் தருவார். அதில் 40 ரூபாய் பெட்ரோலுக்கே போய்விடும். அப்படி பெட்ரோல் போட்டாலும் அந்த பைக்கை சில அடிகளாவது தள்ளிக்கொண்டு ஓடினால்தான் ஸ்டார்ட் ஆகும். பல நாட்கள் காலையில் இருந்து மாலை வரை பயிற்சி இருக்கும். அப்போது சாப்பாட்டு செலவுக்கு என்னிடம் மொத்தமே 20 ரூபாய்தான் இருக்கும்.

அப்பா எனக்கு தினமும் 60 ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஆட அனுப்புவது என் அம்மாவுக்கு பிடிக்காது. என் அண்ணன் இஞ்சினீயரிங் படிக்கும்போது, நான் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக அம்மா திட்டுவார். ஆனா அப்பா, அவரை சமாதானப்படுத்தி என்னை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைப்பார்” என்கிறார்.

நாளொன்றுக்கு 60 ரூபாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திய முகமது சிராஜின் இன்றைய சொத்து மதிப்பு 48 கோடி ரூபாய். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான வீடு, சொகுசுக் கார்கள் என்று உல்லாசமான வாழ்க்கை அவரைத் தேடி வந்திருக்கிறது. இத்தனை வசதிகள் கிடைத்தும், ஒரு காலத்தில் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல தான் பயன்படுத்திய பிளாட்டினா பைக்கை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார் சிராஜ்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நேற்று 6 விக்கெட்களை எடுத்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள முகமது சிராஜ், “பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகும் கேப் டவுன் போன்ற பிட்ச்களில் பல விஷயங்களை பரீட்சித்து பார்க்க விரும்பினால் எதையும் சாதிக்க முடியாது. அதற்கு பதில் பந்துவீச்சாளர்கள் குறிப்பிட்ட ஒரு திட்டத்துடன் பந்துவீச வேண்டும். சரியான இட்த்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும். இன்று நான் இதைத்தான் செய்தேன்” என்கிறார்.

இன்னும் பல போட்டிகளில் இதையே செய்து இந்தியா வெற்றிகளைக் குவிக்க உதவ வேண்டும் என்பதே நம் ஆசை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...