ஓரினச் சேர்க்கை தகராறில் நண்பனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மற்றொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில்தான் திடுக்கிட வைக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 25). இவர் அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி வேலைக்கு சென்ற லோகேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் அவரது செல்போனுக்கு போன் செய்தபோது ‛ஸ்விட்ச்ஆப்’ என வந்துள்ளது. நண்பர்களிடம் விசாரித்தனர். யாரிடமும் அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த லோகேஷின் தந்தை அசோக் (50) அமைந்தகரை காவல் நிலையத்தில், ‘மகனை காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான தனிப்படை போலீசார், லோகேஷின் பைக் மற்றும் அவரது செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தினர். மேலும், லோகேசின் போட்டோவை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை தேட தொடங்கினர்.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது 26). இவர் சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி தனது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் செய்த வாஞ்சிநாதன், அதில், ‛‛நான் தற்கொலை செய்யப்போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்” என தெரிவித்து இருந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி உடனடியாக அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில், ‘வாஞ்சிநாதன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவில்லை. அவனை கண்டுபிடித்து தர வேண்டும்’ எனவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அம்பத்தூர் போலீசார் வாஞ்சிநாதன் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
அப்போது வாஞ்சிநாதன் செல்போன் முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள விடுதியில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து அந்த விடுதிக்கு போலீசார் சென்றனர். அங்கே வாஞ்சிநாதன் தங்கியதாக சொல்லப்பட்ட அறை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து மாற்று சாவி உதவியுடன் போலீசார் அந்த அறையை திறந்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் தனது சகோதரிக்கு தெரிவித்திருந்ததுபோல் வாஞ்சிநாதன் தற்கொலை செய்திருந்தார். அவரது உடல் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது.
தொடர்ந்து அவரது அறையை சுற்றிப் பார்த்த போலீசாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறையில் இன்னொரு இளைஞரும் இறந்து கிடந்தார். இதனையடுத்து அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில், லாட்ஜ் அறையில் இறந்துகிடந்த இன்னொருவர் அமைந்தகரையில் காணாமல் போன லோகேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபற்றி விசாரணையை தொடங்கிய நொலம்பூர் போலீசார், லோகேசை கொன்று வாஞ்சிநாதன் தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகித்தனர். அதனால், இருவருக்கும் இடையே என்ன தொடர்பு என்பது பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் ஓரினச் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக காவல்துறையினர், ‘லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் நண்பர்கள். தனித்தனி ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வந்தாலும் கூட முன்பு அவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்துள்ளனர். அப்போது இருவரும் நெருங்கி பழங்கி உள்ளனர். ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் நிறுவனங்கள் மாறியும் தொடர்ந்து நண்பர்களாக இருந்து அடிக்கடி சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், வாஞ்சிநாதனுக்கு அவரது வீட்டில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனை அறிந்த லோகேஷ், அவரை பிரிய மனமில்லாமல் வாஞ்சிநாதனுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். இத்தகைய சூழலில் தான் இருவரும் விடுதியில் அறை எடுத்து தங்கியபோது திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே, வாஞ்சிநாதன் ஆத்திரமடைந்து லோகேஷ் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தான் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இந்த கொலையும் தற்கொலையும் ஓரினச் சேர்க்கை தகராறால்தான் நடந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா எனவும் அந்த லாட்ஜில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து என தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.