No menu items!

இயக்குநர் மகேந்திரனின் மறுபக்கம்: முதன்முறையாக மனம் திறந்த துணைவி!

இயக்குநர் மகேந்திரனின் மறுபக்கம்: முதன்முறையாக மனம் திறந்த துணைவி!

‘இயக்குநர் மகேந்திரனை திருமணம் செய்துகொண்டது நான் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு. அவருடன் வாழ்ந்த காலத்தில் அவருக்கு வருமானம் இல்லாத காரணத்தால் நான் தையல் தைத்து, அப்பளம் போடுவது என பல வேலைகள் செய்தேன்’ என்று மகேந்திரனின் துணைவியும் துணை நடிகையுமான பிரேமி தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்கள் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் படம் ‘உதிரிப்பூக்கள்.’ இந்தப் படத்தை இயக்கியவர் மகேந்திரன். ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ ஆகியவையும் மகேந்திரன் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த சிறந்த படைப்புகள். தனது ஸ்டைலான மேனரிசம் மகேந்திரனிடம் இருந்து எடுத்ததுதான் என்று ரஜினியே பல முறை கூறியுள்ளார். இயக்குநரான மகேந்திரன் ‘காமராஜ்’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். விஜய்யின் ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் ‘பேட்ட’, சசிகுமாருடன் ‘கொம்பு வச்ச சிங்கம்’, உதயநிதியுடன் ‘நிமிர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ள மகேந்திரன், கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார்.

பிரேமி, 1964ஆம் ஆண்டு தொடங்கி திரையுலகில் 60 ஆண்டுகளை கடந்துள்ள துணை நடிகை. தற்போது சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 1990களில் சிறந்த துணை நடிகையாக வலம் வந்த பிரேமி, மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்போதுதான் அப்படத்தின் இயக்குநர் மகேந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிட்டதட்ட 7 ஆண்டுகள் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பிறகு பிரிந்தனர். மகேந்திரன் – பிரேமி திருமண விவகாரம் திரைத்துறையிலேயே பலருக்கும் தெரியாதது.

இந்நிலையில் பிரேமி  சமீபத்தில், ‘நான் வாழ்க்கையில செய்த மிகப்பெரிய தவறு மகேந்திரனை திருமணம் செய்துகொண்டது தான்’ என்று கூறியுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரேமி கொடுத்த பேட்டியில், “நான் சினிமாத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது. நான் முதல்முறையாக இப்போதுதான் பேட்டி கொடுக்கிறேன்.

என்னை பார்த்தால் யாரும் நடிகை என்று சொல்ல மாட்டார்கள். நானும் நடிகை என்பதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். திரைத்துறையைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் என்றாலும் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மட்டுமே நான் நடிக்க வந்தேன். முதலில் நடிப்பதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. நாம் கான்வென்ட் பள்ளியில் படித்த நிலையில் கன்னியாஸ்திரிகளுடன் தான் வளர்ந்தேன். அவர்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், சினிமாவுக்கு வந்துவிட்டேன்.

என் அப்பாவுக்குள் இருந்த ஆர்வம் தான் நான் நடிகையாக காரணமாக அமைந்தது. சிவாஜி நடித்த ‘அன்பு’ படத்தில் எனது அப்பா நடித்துள்ளார். சிவாஜி கணேசன் எனக்கு தூரத்து உறவினர்.

பல இயக்குநர்களின் இயக்கத்தில் நான் நடித்திருந்தாலும் எனக்கு பிடித்த இயக்குநர் ஸ்ரீதர் தான். இன்னைக்கும் அவரின் படங்கள் டிவியில் போட்டால் முதல் ஆளாக பார்ப்பேன்.

1970கள் காலகட்டத்தில் படங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது தான் ‘உதிரிப்பூக்கள்’ படத்தால் என் வாழ்க்கையே தடம் மாறிப்போனது. மறைந்த நடிகர் செந்தாமரை தான் மகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘தங்கப்பதக்கம்’ படத்தில் நல்லதொரு குடும்பம் பாடல் ஷூட்டிங்கில் அவரை காட்டினார். முதல்முறையாக நான் மகேந்திரனை பார்த்தேன். அதன்பிறகு ‘முள்ளும் மலரும்’ படத்தின் ஆடிஷனுக்காக கூப்பிட்டார்கள். எனக்கு மனதில் ஏதோ நெருடல் இருந்ததால் போகவில்லை. ஆனால், ‘உதிரிப்பூக்கள்’ படத்துக்கு இவர் தான் இயக்குநர் என தெரியாமல் ஆடிஷனுக்கு சென்றுவிட்டேன். அங்கே மகேந்திரன் இருந்தார். எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது.

நடிக்கத் தெரியாதவர்கள் கூட மகேந்திரனிடம் வந்தால் சூப்பரா நடிப்பார்கள். அவர் நல்லா நடிச்சிக்காட்டி அந்த கேரக்டரை பக்குவப்படுத்துவார். அவரின் இயக்கத்தை எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். எனக்கு நடிகையாக மகேந்திரன் இயக்கத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’ இரண்டு படங்களிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள் அமைந்தது.

‘ஜானி’ படத்தில் நடித்த பிறகு ஏராளனான பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், மகேந்திரன் என்னை நடிக்க விடல. வேண்டாம் என சொல்லி விட்டார். மகேந்திரன் தான் என்னை பார்த்துக் கொண்டார் என்பதால் அவர் பேச்சை மீற முடியவில்லை. ஒருவேளை நான் தொடர்ந்து நடித்திருந்தால் எங்கேயோ சென்றிருப்பேன்.

7 ஆண்டுகள் தான் நாங்கள் ஒன்றாக இருந்தோம் என்றாலும், மகேந்திரனுடனான இனிமையான தருணங்கள் நிறைய உள்ளது. அந்த 7 ஆண்டுகள் 70 ஆண்டுகளுக்கு சமமானது. அவ்வளவு நல்லா பார்த்துகிட்டாரு. நான் கருவுற்றிருக்கும்போது உலக திரைப்பட விழாவுக்கு நடுவராக டெல்லிக்கு சென்றிருந்தார். என்னையும் அழைத்து சென்றார். அங்கே இருந்த பெண், ‘பெண்கள் எல்லாம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அங்கே ஒரு நாளைக்கு 5, 6 படங்கள் பார்க்க வேண்டும்’ என்றார்கள். ஆனால், மகேந்திரன், ‘என் மனைவி இல்லாமல் படம் பார்க்க வர மாட்டேன்’ என கூறிவிட்டார். அதன்பிறகே உள்ளே அனுமதித்தார்கள். கிட்டதட்ட 8 நாட்கள் மகேந்திரனுடன் உட்கார்ந்து 6 படங்கள் வரை பார்ப்பேன். இதெல்லாம் யாருக்காது கிடைக்குமா? அவருடன் கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அருமையா வாழ்ந்தேன்

ஆனால், மகேந்திரன் வாழ்க்கையில் அவர் திருமணம் ஆனவர் என தெரிந்தும் நான் குறுக்கிட்டு இருக்கக்கூடாது. அது தப்புதான். செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன். 7 வருஷம் நாங்கள் ஒன்னா வாழ்ந்தோம். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 7 வருடங்களுக்குப் பின் அவர் படங்கள் பண்ணாமல் போன காரணத்தால் 2 குடும்பத்தையும் சமாளிக்க கஷ்டப்பட்டார். அவருக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாத காரணத்தால், நான் தையல் தைப்பது, அப்பளம் போட்டு கொடுப்பது என பல வேலைகள் செய்தேன்.

ஆனாலும், மகேந்திரன் என்னை விட்டு பிரிந்து சென்றார். நான் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கஷ்டப்பட்டேன். என் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் அரவணைத்து கொண்டதால் நான் திரும்பவும் வேலைக்கு சென்று தனியாளாக என் பையனை வளர்த்து இன்றைக்கு மகன் நல்ல நிலையில் உள்ளான்.

இடையே 7 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த என்னை என்னுடைய தோழியின் கணவரான ஜி.என். ரங்கராஜன் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என வற்புறுத்தி திரைத்துறைக்குள் கொண்டு வந்தார். இடைவெளி விழுந்து நான் திரும்ப வந்தபோது திரைத்துறையில் எல்லாம் மாறிப்போய் இருந்தது. எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ரீ -எண்ட்ரீயில் ராமராஜன் நடித்த ‘தங்கமான ராசா’ படத்தில் நடித்தேன். தொடர்ந்து நிறைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தேன்” என்று கூறியுள்ளார் பிரேமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...