இன்று ஹிரோஷிமா தினம் 1945-ம் ஆண்டில் இந்த நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இரண்டாம் உலகப்போரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இந்த குண்டுவீச்சு சம்பவம் கருதப்படுகிறது. அணுகுண்டுகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகளை இந்த உலகுக்கு எடுத்துச்சொன்ன இந்த குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் கொல்லப்பட்டதை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி இந்த உலகம் நினைவுகூர்கிறது.
1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப காலகட்டத்தில் ஜப்பான் பங்கேற்கவில்லை. ஆனால் அதன்பிறகு ஆசிய பிராந்தியத்தில் தனது வலிமையை நிரூபிப்பதற்காக இப்போரில் ஜப்பான் கலந்துகொண்டது. 1941-ம் ஆண்டுமுதல் இத்தாலி மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து இந்த உலகப் போரில் ஜப்பான் செயல்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஜப்பானிய படைகள் இந்தியாவின் கிழக்கு எல்லை வரை முன்னேறியது.
இப்போரில் 1942-ம் ஆண்டுவரை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கைதான் ஓங்கி இருந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இப்போரில் நேரடியாக பங்கேற்காமல் இருந்த அமெரிக்கா, பின்னர் இதில் நேரடியாக களம் இறங்கியது, நேச நாடுகளின் கரத்தை வலுப்படுத்தியது. அதே நேரத்தில் ஐரோப்பாவின் கிழக்கு முனையில் ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தை ரஷ்யப் படைகள் தடுத்து நிறுத்தின.
பல ஆண்டுகள் நீடித்த போருக்கு பின்னர் 1945-ம் ஆண்டு மே மாதம் ஜெர்மனி சரணடைந்தது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் போர் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான் போரை தொடர்ந்துகொண்டிருந்தது.
இந்நிலையில் 1945-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீன நாடுகள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டன. ‘பாட்சம் அறிக்கை’ (Potsdam Statement) என்று அழைக்கப்பட்ட இந்த அறிக்கையில், ‘ஜப்பான் அரசு உடனடியாக நிபந்தனையின்றி சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அந்நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும்’ என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜப்பான் பிரதமரான கண்டாரோ சுசுகி, இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தார். ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பிரிட்டனும், அமெரிக்காவும் திட்டமிட்டது. இதற்கு அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த நகரம் ஹிரோஷிமா.
சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசித்துவந்த ஹிரோஷிமா, அப்போது ஜப்பானின் முக்கிய நகரமாக இருந்தது. போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் அங்கிருந்துதான் அனுப்பப்பட்டு வந்தன. இதனால்தான் முதலில் ஹிரோஷிமாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் குறிவைத்தது.
இந்த திட்டத்தின்படி ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி காலையில் பசுபிக் கடற்பகுதியில் உள்ள டினியான் (Tinian) என்ற இடத்தில் இருந்து எனோலா கே (Enola Gay) என்ற போர்விமானத்தில் ‘லிட்டில்பாய்’ என்ற அணுகுண்டு ஏற்றி அனுப்பப்பட்டது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மக்கள் காலையில் எழுந்து சோம்பல் முறிந்துகொண்டிருந்த நேரத்தில் அவர்கள் மீது ‘லிட்டில் பாய்’ வீசப்பட்டது.
ஹிரோஷிமா நகரில் சர்வ நாசத்தை விளைவித்த இந்த அணுண்டு வீச்சில் சுமார் 70 ஆயிரம் பேர் பலியானார்கள். இதே அளவிலான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஹிரோஷிமாவின் 69 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகின. எஞ்சியிருந்த கட்டிடங்களும் வாழத் தகுதியில்லாத நிலையில் இருந்தன.
இந்த அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நேரத்துக்கு பின் அமெரிக்க அதிபர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை இதில் அறிவித்த ட்ரூமேன், இனியும் ஜப்பான் சரணடையாவிட்டால் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கும் என்று எச்சரித்தார். சொன்னபடியே ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகி நகரிலும் அமெரிக்க அணுகுண்டை வீச, ஜப்பான் சரணடைந்தது.
மற்ற நாடுகளாக இருந்தால் அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட அழிவில் இருந்து மீள முடியாமலேயே மண்ணோடு மண்ணாக போயிருக்கும். ஆனால் ஜப்பானிய மக்கள், தங்கள் கடும் உழைப்பின் மூலம் ஜப்பானை மீண்டும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உயர்த்திக் காட்டியுள்ளனர்.
உழைப்பே உயர்வு தரும் என்ற வார்த்தைகளுக்கு மிகச்சிறந்த உதாரணமாக இன்று ஜப்பான் மாறியுள்ளது.