No menu items!

வெற்றி வேண்டுமா? வழிகாட்டும் மலையாள சினிமா

வெற்றி வேண்டுமா? வழிகாட்டும் மலையாள சினிமா

கோவிட் பாதிப்பினால் ஒட்டுமொத்த சினிமா உலகமும் கடும் பாதிப்பிற்கு உள்ளானது. இதில் தமிழ் சினிமாவும் தப்பவில்லை. ஆனால் கோவிட் பரவலின் தீவிரம் குறைந்து வரும் இந்நேரத்தில் இந்திய சினிமா உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர ஆரம்பித்திருக்கிறது.

இதில் தெலுங்கு சினிமா பான் – இந்தியா படங்களின் மூலம் புதுப் பாய்ச்சலோடு களமிறங்கி இருக்கிறது. இதுவரையில் அதிகம் பேசப்படாத கன்னட சினிமா கேஜிஎஃப் பட வரிசையால் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மலையாள சினிமா ரசிகர்களைக் கவரும் கதையம்சங்களுடனான படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவலாக இருக்கும் ஹிந்தி சினிமாவின் மிகப்பெரும் மார்க்கெட் மீண்டும் புதிய படங்களுக்கு கைக்கொடுத்து வருகிறது.

ஆனால் தமிழ் சினிமாவோ திரும்பும் திசைகளில் எல்லாம் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை. மறுபக்கம் கதை பஞ்சத்தினால் தள்ளாடி வருகிறது.

இன்னொரு பக்கம் படங்கள் எடுப்பதற்கான நிதி ஆதாரமுள்ள தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு அப்பால் சினிமாவிற்கு அஸ்திவாரமாக இருக்கும், திரையரங்குகளுக்கு வந்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிர்களின் வருகை ஒற்றை இலக்கங்களில் கலங்கடித்து வருகிறது.

இதற்கிடையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து படங்கள் எடுத்துவரும் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் ஒரே நாளில் கரன்சி கட்டுக்களாக ஃபைனான்ஸ் செய்யும் பைனான்சியரின் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையின் ரெய்ட் அதில் சிக்கிய ஆவணங்கள் சுனாமியைப் போல தமிழ் சினிமாவை சுருட்டி அடித்து சென்றிருக்கிறது.

இத்தகைய சூழலில் இருந்து தமிழ் சினிமா மீண்டு வர வாய்ப்பில்லையா என்று பதட்டத்தோடு இருக்கையில், நமக்கு வழி காட்டுகிறது மலையாள சினிமா. கம்பீரமாக இருந்த தமிழ் சினிமா மீண்டும் வேகமெடுக்க உதவும் ’மலையாள மாடல் சினிமா’வை பற்றி இங்கே பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபீஸை பாதிக்காத பட்ஜெட்


சினிமாவை பொறுத்தவரை 100 கோடியில் படம் எடுத்துவிட்டு, படம் வெளியாகி 130 கோடி வசூல் செய்யும் போது, அப்படம் பட்ஜெட்டின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. ’100 க்ரோர் க்ளப்’ படம் என்று முதலில் பரபரப்பை கிளப்புகிறார்கள். ஆனால் வசூலைப் பொறுத்தவரை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்சியர் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பணம் மற்றும் படத்தின் ப்ரமோஷன்களுக்காக செலவிடும் தொகை ஆகியவற்றை கழித்துவிட்டு மீதி வருவதே உண்மையான லாபம்.

உண்மையில் அது சொற்ப தொகையாகவே இருக்கும். சில நேரங்களில் அத்தயாரிப்பாளரின் முந்தையப் படங்களின் செட்டில்மெண்ட்டுக்கு அத்தொகையும் போய்விடும் வாய்ப்புகளும் இருக்கும். இந்நிலையில் அத்தயாரிப்பாளர் அடுத்து படமெடுக்கும் வாய்ப்பே இருக்காது.

இதனால் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரது தலைவிதியையும் நிர்ணயிப்பது பாக்ஸ் ஆபீஸ் வசூல் மட்டுமே. காரணம் படங்கள் ஓடினாலும், உடனடியாக திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டாலும் கூட கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களுக்கோ, தொழில்நுட்ப கலைஞர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

காரணம் சம்பளம் வாங்கி கொண்டு நடித்து முடித்து கொடுப்பதோடு அந்தப் படத்தில் அவர்களுக்கும் மற்றவர்களுக்குமான உறவு முற்றிலும் முடிந்துவிடும். ஆனால் படத்தை வெளியிட தயாரிப்பாளர் மட்டுமே கடைசி வரை போராட வேண்டியிருக்கும். அப்படியே கஷ்டப்பட்டு படம் வெளியான பின், சொல்லிக் கொள்கிற மாதிரி ஸ்கிரீன்கள் கிடைத்தாலும், ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் திரையரங்குகளுக்கு வரவேண்டும். அப்படியென்றால் மட்டுமே பாக்ஸ் ஆபீஸில் வசூல் கிடைக்கும்.

தமிழ் சினிமாவுடன் மலையாள சினிமாவை ஒப்பிடும் போது மலையாள சினிமாவிற்கு இங்கிருப்பது போன்ற பிரம்மாண்டமான கட்டமைப்பு எதுவுமில்லை. தொழில்நுட்ப நகாசு வேலைகளை அங்கே நம்புவதும் இல்லை. இதனாலேயே அங்கே எடுக்கப்படும் பெரும்பாலான படங்களின் பட்ஜெட் இரட்டை இலக்கத்தைத் தாண்டுவதில்லை. முடிந்தளவிற்கு 10 கோடிகளுக்குள் படத்தை எடுத்துவிடுகிறார்கள். இப்படங்களில் பிரபல முன்னணி நட்சத்திரங்களும் நடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் ஒரு மொழிக்கான சினிமாவின் மார்கெட் நிலவரம் என்ன? சராசரியாக எந்தளவிலான பட்ஜெட்டில் படமெடுத்தால் தாக்குப்பிடிக்க முடியும்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் மலையாள சினிமாவில் ஒரு தெளிவு இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா ஒரு படத்தை ஆரம்பிக்கும் போதே ‘அந்த இயக்குநரின் ஒரு பிரம்மாண்டமான படைப்பு’ என்றே விளம்பரப்படுத்துவது வாடிக்கையாகி இருக்கிறது.

பிரம்மாண்டமான படைப்பு என்று முன்னிறுத்துவதை விட ‘தரமான தயாரிப்பு’ என்று சொல்லும் வகையில் மாற்றம் காண வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டில் 900+ ஸ்கீரின்கள் இருக்கின்றன என்றால் அதில் எத்தனை ஸ்கீரின்கள் கிடைக்கும். கமிட்டாகும் நடிகருக்கு வசூல் மதிப்பு என்ன என்பது போன்ற முக்கிய அம்சங்களை முதலிலேயே ஒரு மதிப்பீடு செய்து, பட்ஜெட்டை தீர்மானிப்பது மிக மிக அவசியம்.

கவனத்தை ஈர்க்கும் கதையம்சம்

சிறிய மார்க்கெட்டாக இருந்தாலும் மலையாள சினிமாவின் அசுரப் பலத்திற்கு காரணம் கதையம்சம். அங்கே இயக்குநர்கள் இருக்கிறார்கள். கதையாசிரியர்கள் இருக்கிறார்கள். வசனகர்த்தாக்கள் இருக்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இறப்பை இறுதி வரையில் காட்டிய ’ட்ராஃபிக்’, உணவை பின்னணியாக கொண்ட ‘சால்ட் ன் பெப்பர்’, ஆஸ்காருக்கும் அழைத்துச் சென்ற ‘ஆதமின்டே மகன் அபு’ போன்ற படங்கள் வரும் போது கூட, தற்போதைய ஒடிடி ஆதிக்கத்திற்கும் தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கிறது மலையாள சினிமா.

ஸ்டார் வேல்யூ உள்ள நட்சத்திரங்களுக்குப் பதிலாக கதைகளை ஹீரோக்களாக கொண்டாடும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அங்குள்ள சூப்பர் ஸ்டார்களும் கூட தங்களது ஆன் ஸ்கிரீன் ஹீரோயிஸத்தை ஒதுக்கி வைத்துவிட்டு யதார்த்த கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் கதையின் நாயகர்களாக அவதாரமெடுத்து இருக்கிறார்கள். இதனால் கேரளாவில் சினிமா சமகால சமூகத்தை பல வண்ணங்களில் வெளிப்படுத்தும் கலைடாஸ்கோப் போன்று வலுவாகி வருகிறது.
புத்தம் புதிய ஐடியாக்கள், படத்தோடு ஒன்றிப்போக வைக்கும் திரைக்கதை, கதை சொல்லும் விதம், யதார்த்தமான நடிப்பு, மாற்று சினிமாவுக்கும், கமர்ஷியல் சினிமாவுக்கும் இடையில் மிகச்சரியான கலவையுள்ள படங்கள், இவற்றினால் இன்று மலையாள சினிமா ஒடிடி தளங்களில் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் இங்கு பேரன் பேத்தி எடுக்கும் காலத்தில் கூட மகள் வயதுடைய நடிகைகளுடன் டூயட் பாடுவதை ஒரு சம்பிரதாய சடங்காக கொண்டாடும் போக்கு இன்னும் மாறவில்லை. வழக்கமான வெட்டுக்குத்து, பழிவாங்குதல், காதல் மோதல், கேங்ஸ்டர் வகையறா கதைகளிலிருந்து விடுப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழ் சினிமா.

இயக்குநர்களே கதையையும், திரைக்கதையையும், வசனத்தையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும் என்ற இங்குள்ள ஃபார்மூலா, கோமாவுக்கு சென்று கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் அளிக்கும் என்ற நம்பிக்கையை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

கதை, திரைக்கதை., வசனம் இவற்றிக்கு புத்தம் புது ஐடியாக்களுடன், வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையினரை சீனியர்கள் வாரியணைக்க வேண்டிய நேரம் உருவாகி இருக்கிறது. இல்லையென்றால் இன்று தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பவர்கள் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த மாற்றங்களை தமிழ் சினிமாவில் உள்ள படைப்பாளிகள் ஏற்றுக் கொள்ளும் போது மீண்டும் ஒரு மேஜிக் நிகழலாம்.

சரிவுக்கு வழிவகுக்கும் சம்பளம்

மலையாள சினிமாவில் ரஜினி கமல் போல் ஆதிக்கம் செலுத்தும் மோகன்லாலின் சம்பளம் 8 கோடி, மம்மூட்டியின் சம்பளம் 5 கோடிதான்.

இவர்களை அடுத்து அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் ப்ரிதிவி ராஜின் சம்பளம் 2 முதல் 3 கோடி, நிவின் பாலி 1 முதல் 2 கோடி, துல்கர் சல்மான் 80 லட்சம் முதல் 2 கோடி, பஹத் ஃபாசில் 1 கோடி என யாரும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை.
ஆனால் இங்கு மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடிக்கும் ஒரு கமர்ஷியல் படம் ஒன்றை எடுக்கும் பட்சத்தில், அப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட இங்குள்ள ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் மிக அதிகம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 4 மடங்கு அதிகம்.

படத்தின் பட்ஜெட்டில் மூன்று பங்கு ஹீரோக்களின் சம்பளத்திற்கே போய்விடுவதால் தயாரிப்பாளர்கள் படத்திற்கு அவசியமான விஷயங்களில் சமரசம் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். படத்தை வெளியிடவும் மக்களிடம் கொண்டு செல்லவும் உதவும் முக்கியமான ப்ரமோஷன் சமாச்சாரங்களுக்கு கையில் பணமில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்களுடைய கடந்த ஐந்து படங்களின் வசூல் நிலவரத்தை அடிப்படையாக வைத்து, அதில் கிடைத்த லாபத்தை பொறுத்து தங்களது சம்பளத்தை நிர்ணயிப்பது தற்போதுள்ள சம்பள பிரச்சினைகளை ஓரளவிற்கு தீர்க்க உதவும்.

சம்பளத்தில் நட்சத்திரங்கள் கைக்கொடுத்தால் தயாரிப்பாளர்களின் கடன் சுமை குறையும், லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம், இதனால் அதிக படங்கள் வெளிவருவதும் சாத்தியம், இதன் மூலம் தமிழ் சினிமா அடுத்த ரவுண்ட்டிற்கு தயாரக முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...