No menu items!

சவுக்கு சங்கர் காவலுக்கு பெண் போலீஸ் – மிஸ் ரகசியா

சவுக்கு சங்கர் காவலுக்கு பெண் போலீஸ் – மிஸ் ரகசியா

“தமிழ்நாட்ல தேர்தல் நடந்து முடிஞ்ச நாள்ல இருந்து தூக்கம் இல்லாம தவிக்கற ஒரே தலைவர் எடப்பாடிதான். எந்த நேரத்துல யார் கட்சியை உடைப்பாங்களோங்கிற திகில்லயே அவரை வச்சிருக்கு பாஜக” என்றபடி ஆபீசுக்குள் எண்ட்ரி ஆனாள் ரகசியா.

“பாஜக மட்டுமா?… திமுகவும் அந்த முயற்சியில இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“தேர்தல் முடிவுக்கு பிறகு செங்கோட்டையன் அல்லது வேலுமணி அதிமுக பொதுச்செயலாளரா பதவி ஏற்பார்கள்ன்னு சட்ட அமைச்சர் ரகுபதி சொன்னதை வச்சு கேட்கறீங்களா? அவரோட இந்த பேச்சுக்கு பிறகு எடப்பாடிக்கு திமுக மேலயும் சந்தேகம் வந்திருக்கு. தன்னோட பிறந்த நாளுக்கு கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சிலர் வராததும் அவரோட சந்தேகத்தை அதிகரிச்சிருக்கு. அதனால கழுகு கிட்ட இருந்து கோழி, குஞ்சுகளை காப்பாத்தற மாதிரி எடப்பாடி மூத்த நிர்வாகிகளை கவனிச்சுட்டு வர்றார். ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு, நீங்க என்னை விட்டு போயிட மாட்டீங்களேன்னு கேட்டுட்டு இருக்கார்.”

“அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?”

“பிறந்த நாள் அன்னைக்கு நேர்ல வர முடியாதுன்னு சில நாட்கள் முன்னாடியே எடப்பாடிகிட்ட எஸ்.பி.வேலுமணி சொல்லி இருக்கார். அதுக்கான காரணத்தையும் அவர் விளக்கி இருக்கார். அப்ப அவர்கிட்ட கட்சி எப்படி இருக்கு, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாற்றம் வருமா?னு டவுட்டா கேட்டிருக்கிறார் எடப்பாடி. அதுக்கு எஸ்.பி.வேலுமணி, ‘கட்சி நிர்வாகிகளைப் பற்றி எனக்கு தெரியாது ஆனால் தொண்டர்கள் உங்களைத் தவிர வேறு யாரையும் பொதுச் செயலாளரா இப்போதைக்கு ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அதனால தேவையில்லாம நீங்கள் வதந்திகளைப் பற்றி நினைச்சு மனசை குழப்பிக்க வேண்டாம்’னு அட்வைஸ் பண்ணினாராம்”

“செங்கோட்டையன்?”

“செங்கோட்டையனும் எடப்பாடிகிட்ட பேசி இருக்கார். ரகுபதி தேவையில்லாமல் வம்பு வளர்க்கிறார். இதைப் பற்றியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. ஜூன் 10-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளரான உங்கள் தலைமையில என் பேரன் திருமணம் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை’ன்னு அப்ப எடப்பாடிகிட்ட செங்கோட்டையன் பேசி இருக்கார்.”

“இப்ப திருப்தியாகி இருப்பாரே?”

“இன்னும் ஆகலை. கட்சி நிர்வாகிகளை அவர் இன்னும் கூர்ந்து கவனிச்சுட்டுதான் இருக்கார். அந்த விஷயத்துல முன்னாள் அமைச்சர் பொன்னையன்தான் அவருக்கு உதவியா இருக்கார். அவர் தினந்தோறும் கட்சி அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கே வந்துடறார். இரவு 7 மணிக்குத்தான் வீடு திரும்புறார். கட்சி ஆபீஸ்ல இருக்கற நேரத்துல தொண்டர்களோட நிறைய பேசறார். அவங்க தர்ற மனுக்களையும் வாங்கி வச்சுக்கறார். அப்படியே ‘எந்த கட்டத்துலயும் எடப்பாடியை யாரும் விட்டுக் கொடுத்துட கூடாது. அவர்தான் கட்சியோட காவலன்’னு வேண்டுகோளும் விடுக்கறார். மாலையில் கட்சி ஆபீஸ்ல இருந்து கிளம்பினப் பிறகு அன்னைக்கு நடந்த விஷயங்களை நேர்லயோ இல்லை போன்லயோ எடப்பாடிகிட்ட ஒப்பிச்சுடறார்.”

“சரி, அதிமுகல இருந்து நீக்கப்பட்டவர்கள் பகுதிவாரியா தன்கிட்ட விவரங்களைத் தரலாம்னு சசிகலா சொல்லி இருந்தாரே… இதுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கா?”

“இதுக்கு யாரும் ரெஸ்பாண்ட் பண்ற மாதிரி தெரியல. அதனால பாஜகவும் இனி சசிகலாவை நம்பறதா இல்லை. அதிமுகவை உடைக்கறதுல அவங்களோட முழு நம்பிக்கையும் இப்ப தினகரன் மேலதான் இருக்கு.”

”பாஜகவால அதிமுகவை உடைக்க முடியுமா?”

“தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்னு பாஜக நினைக்குது. இப்போதைக்கு அவங்க மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற சந்தேகத்துல இருக்காங்க. அதனால அதிமுக பத்தி யோசிக்க நேரமில்லை”

“அப்படியா. பிரதமர் பேட்டியா கொடுத்து தள்றாரே?”

“ஆமாம். கட்சிக்காரங்களே அதை ரசிக்கல. இது மாதிரி பேட்டி கொடுக்கிறதை மூணு மாசம் முன்னாடியே தொடங்கியிருக்கணும். இப்ப பேசுனா யார் நம்புவாங்கனு ஒபனா கட்சிக்குள்ளேயே பேசிக்கிறாங்க”

“பிரதமரைப் பத்தி பாஜகவுலேயே இப்படி பேச ஆரம்பிச்சிட்டாங்களா?”

“ஆமாம். டெல்லிலருந்து வர்ற தகவல்கள் அப்படிதான் சொல்லுது. கட்சியிலிருக்கிற மூத்தவங்க இப்ப மோடி, அமித்ஷாவுக்கு எதிரா பேச ஆரம்பிச்சிருக்காங்களாம். இப்போதைக்கு ரகசியாம பேசுற பேச்சுக்கள் தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் வெளிப்படையாவே வரலாம்”

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வராதுன்ற முடிவுக்கே வந்துட்டாங்களா?”

“எல்லோரும் வரல. இந்த ஒதுக்கப்பட்ட மூத்தவங்க நினைக்கிறாங்க. அதனால இவங்க கூட பேசுறதுக்கு பலர் பயப்படுறாங்களாம். அவங்க ஏதாவது பேசி அது நாளைக்கு மோடி, அமித்ஷா காதுக்கு போச்சுனா கட்சில நமக்கு சிக்கல்னு நினைக்கிறாங்களாம்”

“யார் அந்த மூத்தவங்க?”

“பிரதமருக்கு ஆகாதவங்கதான். அதுல ஒரு மூத்த மத்திய அமைச்சரும் இருக்கிறார்.”

“திமுக செய்திகள் ஏதாவது இருக்கா?”

“அன்பாகத்தில் கடந்த 2 நாட்களா இளைஞர் அணி நிர்வாகிகளை சந்திச்சு உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்திட்டு இருக்கார். சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் அணியோட பங்களிப்பு பற்றி அவங்க கிட்ட கருத்து கேட்டுட்டு இருக்கார். மாநில நிர்வாகிகளை நியமிக்கும்போது அதுல இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு அப்ப உதயநிதி ஸ்டாலின்கிட்ட அவங்க வேண்டுகோள் விடுத்திருக்காங்க. இப்போது இருக்கும் மூத்த நிர்வாகிகள் பலர் எழுபதை கடந்து விட்டார்கள். அவர்கள் வாரிசுகள் தான் கட்சி வேலை பார்க்கிறார்கள். மூத்த நிர்வாகிகள் சும்மாதான் இருக்கிறார்கள். அந்த பொறுப்புகளை இளைஞர் அணிக்கு தந்தால் கட்சி இன்னும் வேகம் எடுக்கும்னு பலரும் உதயநிதி ஸ்டாலின்கிட்ட சொல்லி இருக்காங்க.”

”உதய் என்ன சொன்னாராம்?”

”தலைவர்கிட்ட பேசுறேன். தலைவரும் அப்படிதான் நினைச்சுக்கிட்டு இருக்கிறார்னு சொல்லியிருக்கிறார். இப்படி சொன்னதுல இளைஞர் அணி உற்சாகமாயிருக்கு”

“சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பா இப்ப பெண் போலீஸாரையே அதிகமா அனுப்பறாங்களே?”

“அதுமட்டும் இல்லை. வழக்கு விசாரணையின்போது சில பெண் போலீஸார் நீதிபதிகள்கிட்ட, ‘நாங்கள் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறோம். சவுக்கு சங்கர் எங்களைப் பற்றி சொன்ன கருத்தால் நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் கூட எங்களை இப்போது கேவலமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்’னு உருக்கமா பேசறாங்க. நீதிபதிகளும் அவங்களோட கருத்தை பதிவு செய்யறாங்க. அதனால இப்போதைக்கு அவர் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை.”

”இதெல்லாம் புதுசா இருக்கே? இது முன்னாடி வேற வழக்குகள்ல இது மாதிரி பண்ணியிருக்காங்களா?”

“இது மாதிரி நடந்ததா தெரியல”

“மீடியா சங்கங்கள் எதுவும் சவுக்கு, ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கலையே?”

“அதனாலதான் கைது செய்து அழைத்து போகும்போது நாளைக்கு உங்களுக்கும் நடக்கலாம்னு ஜெரால்ட் சத்தமா சொல்லிட்டு போனார். ஆனாலும் எந்த கண்டனமும் வரல”

“அப்போ இப்போதைக்கு அவங்க ரெண்டு பேர் ரீலிசும் இல்லையா?”

“இவங்க ரீலீஸ் இப்போதைக்கு வாய்ப்பில்லைனு போலீஸ்ல சொல்றாங்க”

“அரசியல் கட்சிகள் எதுவும் கூட குரல் கொடுக்கலையே?”

“எடப்பாடியும் சீமானும் மட்டும் கண்டனம் தெரிவிச்சாங்க. ஆனா அத்தோட நிறுத்திக்கிட்டாங்க.”

“ஏன்?”

”எல்லோரையும் பகைச்சுக்கிட்டா இப்படிதான்.இதை நான் சொல்லல போலீஸ்காரங்க சொல்றாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...