No menu items!

திமுகவின் தலைவலிகள் – என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

திமுகவின் தலைவலிகள் – என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

மாற்றம் ஒன்றே மாறாதது

எனது அலுவலக இடமாற்றத்திற்கும் அரசியல் முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வரும் @PKSekarbabuக்கு நெஞ்சார்ந்த நன்றி.

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

“மற்றவர்களை மதிக்காமலும் தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும் தன்னைத் தானே பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத்தொலைவார்கள்” -முத்தமிழறிஞர் கலைஞர் உரை.

எதிர்ப்பைக் கண்டு துவளாமல்,
எதிரியைக் கண்டு அஞ்சாமல்,
இலட்சியப் பயணம் தொடர்வோம்…

இது எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரந்தாமனின் ட்விட்டர் பதிவு. இந்தப் பதிவை மேலோட்டமாக பார்க்கும்போது அமைச்சர் சேகர்பாபுவை எம்.எல்.ஏ.பரந்தாமன் பாராட்டி பேசுவது போல் தெரியும். ஆனால் அப்படியல்ல, அமைச்சருக்கும் எம்.எல்.ஏ.க்கும் உள்ள பனிப்போரின் வெளிப்பாடுதான் இந்த வஞ்சப்புகழ்ச்சி.

பரந்தாமனின் அலுவலகம் சமீபத்தில் வேறு இடத்துக்கு மாற வேண்டிய சூழல் உருவானது. அதற்கு காரணம் அமைச்சர் சேகர்பாபுதான் என்று பரந்தாமன் கருதுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். சேகர்பாபு அதிமுகவில் இருந்து வந்து இன்று திமுகவின் மிக அதிகாரமிக்கவராக இருக்கிறார். பரந்தாமன் நீண்டகாலமாக திமுகவில் இருக்கிறார். ஆனால் அவருக்கு அந்த உயர்வு கிடைக்கவில்லை. சென்னை நகருக்குள் கட்சி வேலைகளை செய்ய சேகர்பாபு தடையாக இருக்கிறார் என்று பரந்தாமனின் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால் சேகர்பாபு மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வருத்தமும் விரக்தியும்தான் பொதுவெளியில் அமைச்சர் சேகர்பாபுவை வஞ்சப்புகழ்ச்சி செய்தது என்று கூறப்படுகிறது.

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வெளியில் உள்ள பிரச்சினைகளை விட உட்கட்சி பிரச்சினைகளே அதிகமாக இருக்கின்றன. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பேச்சாளர்கள் என தொடர்ந்து திமுகவுக்கு பிரச்சினைகள் கொண்டு வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களுக்கும் திமுக எம்.பி.சிவாவுக்கும் மோதல் ஏற்பட்டது. சிவாவின் வீடும் காரும் தாக்கப்பட்டது. அந்தப் பிரச்சினை சமாளிக்கப்பட்டது.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளி வந்து திமுகவை ஆட்டியது. நிதித்துறையிலிருந்து பிடிஆர் மாற்றப்பட்டார்.

அமைச்சர் நாசர் மீது தொடர் புகார்கள். அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி வழக்குகள் தீவிரமடைந்து அமலாக்கத் துறையினாரால் கைது செய்யப்பட்டார். இப்போது பைபாஸ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இலாகா இல்லாத அமைச்சராக படுத்து இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி பேராயத்தில் நடந்த சண்டையில் திமுக ஞான திரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற பேச்சாளர் குஷ்பு குறித்து பேசிய பேச்சுக்களினால் கடுமையான விமர்சனங்கள் வந்ததால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இவை மட்டுமல்லாமல் துரைமுருகன், பொன்முடி போன்ற மூத்த அமைச்சர்கள் மேடையில் உதிர்த்த வார்த்தைகளும் சர்ச்சைகளாகின.

இப்படி திமுகவுக்கு தினம் தோறும் தலைவலிகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.

இது போன்ற சிக்கல்களும் சர்ச்சைகளும் திமுகவுக்கு மக்கள் மனதில் தவறான பிம்பத்தை உருவாக்கும்.

சாட்டையை சுழற்றுவேன் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.

நிஜமாகவே சாட்டையை சுழற்ற வேண்டும். சர்வாதிகாரியை மாற வேண்டும். அப்போதுதான் திமுகவினரை அடக்க முடியும். அடுத்த தேர்தலில் வெல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...