விஜயகுமார் ஐபிஎஸ். கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தார். இவரது கட்டுப்பாட்டில்தான் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்கள் இருக்கின்றன. இன்று காலை நடைபயிற்சி முடிந்து தனது ரேஸ் கோர்ஸ் அலுவலகத்துக்கு வந்தவர் தனது பாதுகாவலரிடம் ‘Weapon (ஆயுதத்தை) கொண்டு வா’ என்று கூறியிருக்கிறார். பாதுகாவலர் தனது துப்பாக்கியைக் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு உள் அறைக்குச் சென்று தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கோவையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு 2015ல் திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா என்ற பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து மற்றொரு உயரதிகாரி தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயகுமாரின் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், பணி அழுத்தம் என பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.
எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜயகுமார். தேனி மாவட்ட அனைக்கரை கிராமத்தை சேர்ந்தவர். அப்பா கிராம அதிகாரி. அம்மா ஆசிரியை. விஜயகுமார் படித்ததெல்லாம் தமிழ் வழிக் கல்வியில். நல்ல படிப்பாளி. பொறியியல் படித்தார். ஆனாலும் அவருக்கு அரசு உயரதிகாரி ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதற்காக அரசு போட்டித் தேர்வுகள் பல எழுதினார்.
2003ல் தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் எழுதி தேர்ச்சிப் பெற்று டிஎஸ்பியாக தமிழக காவல் துறையில் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஐபிஎஸ்க்காக யுபிஎஸ்சி தேர்வுகள் எழுதினார்.
2009ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார். சிறு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர், கடுமையான சோதனைகளை போராட்டங்களைக் கடந்துதான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் இத்தனைப் போராட்டங்களை போராடி வென்றவர் இப்போது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் என்ன காரணம் என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழும் கேள்வி.
ஐபிஎஸ் தேர்வில் தமிழ்நாடு பிரிவு அதிகாரியாக வந்தவர் விஜயகுமார். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றிய போது அரும்பாக்கம் வங்கியில் நடந்த கொள்ளையை இரண்டு நாட்களுக்குள் கண்டுபிடித்தது இவருக்கு பெருமை சேர்த்தது. அதன்பி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரகத்துக்கு இந்த வருட ஜனவரி மாதம் வந்தார்.
விஜயகுமாருக்கு மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் சென்னையில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதிக் கொண்டிருப்பதாகவும் நீட் தேர்வில் மகள் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விஜயகுமார் வருத்தத்திலிருந்ததாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
குடும்ப சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக விடுமுறையில் இருந்ததாகவும் மன அழுத்தத்துக்காக மருந்துகள் சாப்பிடுவதாகவும் தகவல்கள் வந்தன.
விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை குறித்து வரும் செய்திகளை தமிழக காவல்துறையின் ஏடிஜிபி அருண் மறுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே விஜயகுமார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். கடந்த சில தினங்களில் விஜயகுமாரின் மன அழுத்தம் அதிகமானதால் சென்னையிலிருந்து அவரது மனைவியும் மகளும் கோவை வந்து அவருடன் தங்கியிருப்பதாகவும் விஜயகுமார் மரணத்துக்கு குடும்பச்சூழலோ அல்லது பணிச்சுமையோ காரணமல்ல என்று கூறியிருக்கிறார். விஜயகுமாருக்கு சிகிச்சையளித்த மருத்துவருடனும் ஏடிஜிபி அருண் பேசியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவரிடம் விஜயகுமார் தனக்கு மன அழுத்தம் தீவிரமாக இருப்பது குறித்து தெரிவித்திருக்கிறார். அதற்கான மருந்துகளை மருத்துவர் கொடுத்திருக்கிறார். இந்தத் தகவல்களையும் ஏடிஜிபி குறிப்பிட்டிருக்கிறார்.
சில வருடங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு காவல் துறையில் போதிய ஓய்வு வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏடிஜிபி அருண், அவர் மன அழுத்தத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது எங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்று குறிப்பிட்டார். விஜயகுமாருக்கு ஓசிடி – டிப்ரஷன் (OCD and Depression) சிக்கல் இருந்ததாக மருத்துவர் ஏடிஜிபியிடம் தெரிவித்திருக்கிறார்.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கோகுல் ராஜ் கொலை வழக்கினால் வந்த மன அழுத்தம் என்று கூறப்பட்டது. அந்த தற்கொலை குறித்து சிபிஐ விசாரித்தது. அவரது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று சிபிஐ அறிக்கை வெளியிட்டது.
விஜயகுமார் தற்கொலை குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவல்துறை பணி என்பது மன அழுத்தம் அதிகம் வர வாய்ப்புள்ள பணி. குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரிவில் இருப்பவர்களுக்கு கூடுதல் அழுத்தம். கொலை, கொள்ளை இப்படி நடந்து கொண்டு இருக்கும் அதற்கெல்லாம் காவல்துறை கண்காணிப்பாளர் தான் பொறுப்பு. மேல் அதிகாரிகள் கேள்விகளாலும் மெமோக்களாலும் துளைத்து எடுத்து விடுவார்கள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும். காவல் துறை பணிக்கு வருபவர்கள் இதற்கெல்லாம் தயாராகதான் வர வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு கொஞ்ச காலத்துக்கு கடுமையான் வேலைப் பளு உள்ள பதவிகளில் நியமிக்கக் கூடாது. Non Sensitive என்று சொல்லப்படும் அதிகம் மன அழுத்தம் தராத பணிகள் தரப்பட வேண்டும். இப்படி செய்தால் மன அழுத்தம் குறையும்” என்றார் அவர்.
விஜயகுமாரை எடுத்துக் கொண்டால் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து காவல் துறை கண்காணிப்பாளராக பணி ஆற்றி இருக்கிறார். சிறிது காலம் போலீஸ் பயிச்சி கல்லூரி, தொழில் நுட்பத் துறை இப்படி ஏதாவது பணியில் அமர்த்தி இருந்தால் அவரது மன அழுத்தம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அந்த ஓய்வுப் பெற்ற அதிகாரி.
நன்றாக படித்து தனது உழைப்பால் உயர்ந்த அதிகாரி தன் உயிரை தானே எடுத்துக் கொண்டது துயரமானது. துரதிர்ஷ்டவசமானது.