No menu items!

ஜான்வி வளைத்துப் போட்ட விக்னேஷ்சிவன்!

ஜான்வி வளைத்துப் போட்ட விக்னேஷ்சிவன்!

பாலிவுட்டில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வெளுத்து வாங்கிய ஸ்ரீதேவியின் வாரிசுகள் ஜான்வி, குஷி. இவர்கள் இருவருக்கும் அம்மாவுக்கு இருந்த அந்த வசீகரம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் கவர்ச்சியில் அன்லிமிடெட் பாலிசியை கையிலெடுத்து இருக்கிறார்கள். இந்த கொள்கையோடு தங்களுடைய சினிமா வாழ்க்கையில் எப்படியாவது தேறிவிட வேண்டுமென ரொம்பவே மெனக்கெட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜான்விக்கு அவர் நடித்த ஹிந்திப்படங்கள் பெரியளவில் பெயரை வாங்கித் தரவில்லை. இதனாலேயே தென்னிந்திய சினிமா பக்கம் தனது கால்ஷீட் ஏஜென்ஸியை களத்தில் இறக்கிவிட்டார்.

நீண்ட நாட்களாக எதுவும் நடக்கவில்லை. காரணம் ஜான்வி கேட்ட சம்பளம்.

ஆனாலும் சோஷியல் மீடியாவில் ஜான்விக்கு இருக்கும் ஃபாலோயர்கள் பட்டாளமும், பிரபலமும் தெலுங்குப்பட வாய்ப்பை பெற்றுகொடுத்திருக்கிறது. ஒரு வழியாக இப்போது முன்னணியில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.’-க்கு ஜோடியாக ‘தேவரா’ படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

ஆனாலும் தனது அம்மா கொடிக்கட்டிப் பறந்த தமிழ் சினிமாவிலும் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென விரும்புகிறாராம். ஆனால் ஆரம்பத்தில் இவரது அப்பா போனி கபூர் இதற்கு சம்மதிக்கவில்லை. ஜான்வியை தான் தயாரித்தப் படங்களிலும் நடிக்க வைக்கவில்லை. ஆனால் இப்போது மகளே உன் சமத்து, வாய்ப்புகள் உன்னைத்தேடி வந்தால் எனக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டாராம்.

லேட்டஸ்ட் கிசுகிசு என்னவென்றால், ஒரு மொபைல் ஃபோனை வைத்து காதலை சீண்டிப்பார்த்து, பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய பிரதீப் ரங்கநாதன் டைரக்‌ஷன் வேலையை ஓரமாக தூக்கி வைத்துவிட்டு, அடுத்தடுத்து நடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தில்தான் பிரதீப்புக்கு ஜோடியாக நடிக்க ஜான்வியை அணுகி இருக்கிறார்கள்.

ஜான்வியை சந்தித்து கதையைச் சொல்லி இருக்கிறார் விக்னேஷ்சிவன். ஜான்வியும் ஒகே சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள். இந்தப்படத்தை கமல் ஹாஸனின் ‘ராஜ் கமல் இண்டர்நேஷனல்’ தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஹீரோக்களை அதிரவைக்கும் அனிருத்!

தமிழ் சினிமாவில் இப்போது இசையில் அனிருத் தனி ஜாகை நடத்திவருகிறார். முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு முதல் தேர்வாக அடிப்படுவது அனிருத் பெயர்தான். இதனால் இவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய ஏகப்பட்ட போட்டி.

‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ ட்யூன் அனிருத்தை திரும்பி பார்க்க வைத்துவிட்டது. இதைக்கேட்டு இப்போது தெலுங்கு சினிமாவிலிருந்தும் வாய்ப்புகள் அதிகம் வருகிறதாம்.

இதற்கும் காரணம் இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் இப்போது பரபரப்பாக இருக்கும் இசையமைப்பாளர்கல் தமன், தேவி ஸ்ரீபிரசாத். இவர்கள் இருவரும், தங்களது ஹிட் ட்யூன்களையே கொஞ்சம் டிங்கரிங் செய்து மற்றப் படங்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால் ஒரே மாதிரியான ட்யூன்களை கேட்டு கேட்டு வெறுத்துப்போய்விட்டது என்கிறார்கள்.

இந்த பிரச்சினையை சமாளிக்கவே இப்போது அனிருத் பக்கம் தெலுங்கு தயாரிப்பாளர்கள் கூட்டம் தென்படுகிறது என அனிருத் வட்டாரம் தெரிவிக்கிறது.

தனக்கு டிமாண்ட் இருப்பதை புரிந்து கொண்ட அனிருத், தெலுங்கு சினிமாவில் இருக்கும் இரண்டாம்கட்ட ஹீரோக்களின் சம்பளத்தை தனது சம்பளமாக கேட்கிறாராம்.

இதைக்கேட்டு அதிர்ச்சியில் அரண்டுப் போய் இருக்கிறார்கள் அங்குள்ள இரண்டாம் கட்ட ஹீரோக்கள். ஆனாலும் வேறு வழியில்லாமல் அனிருத்தையே கமிட் செய்யுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம்.


பிசுபிசுத்து போன ரெட் கார்ட் பஞ்சாயத்து!

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நட்சத்திரங்கள் மீது ரெட்கார்ட் போடப்படும் என தயாரிப்பாளர்கள் கவுன்சில் பரபரப்பை கிளப்பியது.

ரெட்கார்ட் பட்டியலில் சிம்பு, தனுஷ், விஷால், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு என முக்கிய தலைகள் பெயர்களும் இருந்தன.

இந்தப் பஞ்சாயத்து தொடங்கியதுமே, திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே க்ளைமாக்ஸ் இப்படிதான் இருக்குமென பக்காவாக கணித்து சொல்வார்களே, அதைப் போலவே ‘இதெல்லாம் சும்மா’ என்ற கமெண்ட் எழுந்தது.

அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

தனுஷ் மீது பிராது கொடுத்தவர் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் முரளி. இதனால் இந்த பிரச்சினை அவ்வளவு சீக்கிரமாக முடியாது என்றார்கள்.

ஆனால் இப்போது தனுஷ் நடிப்பது சன் டிவியின் தயாரிப்பு பிரிவான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில். அப்புறம் என்ன, ரெட்கார்டை அப்படியே சைலண்ட் கார்ட் ஆக மாற்றும் வேலைகள் தொடங்கிவிட்டதாம்.

தனுஷை விட்டுவிட்டால் மற்றவர்களுக்கு மட்டும் எப்படி ரெட்கார்ட் போடுவது என குழப்பம் நிலவுகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...