No menu items!

கூட்டணியை உடைத்த டெல்லி விசிட் – மிஸ் ரகசியா

கூட்டணியை உடைத்த டெல்லி விசிட் – மிஸ் ரகசியா

”ஒருவழியா பாஜக கூட்டணிக்கு அதிமுக ஃபுல்ஸ்டாப் வச்சிடுச்சே…” என்றவாறு ஆபீசுக்கு வந்த ரகசியாவை வரவேற்றோம்.

 “அதிமுக மூத்த தலைவர்களோட டெல்லி விசிட்தான் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாம்.”

“இந்த டெல்லி விசிட்ல அப்படி என்னதான் நடந்துச்சு?”

“கூட்டணி பத்தி பேசுறதுக்காகவும் அண்ணாமலை பத்தி கம்ப்ளைண்ட் பண்றதுக்காகவும் டெல்லிக்கு அதிமுக தலைவர்கள் போனாங்கன்றது உங்களுக்குத் தெரியும். அங்க அவங்களை மதிக்கவே இல்லையாம்”

“ஐயோ பாவம்..அப்புறம்”

“அமித்ஷாவை பார்க்கலாம்னுதான் போயிருக்காங்க. ஆனா அவர், நீங்க நான் சொல்றதையெல்லாம் கேக்குறதில்லை. எதுக்கு உங்களைப் பாக்கணும், நீங்க பாஜக தலைவர் நட்டாவை பாருங்கனு திருப்பி அனுப்பிச்சிருக்கார். நட்டாவை பாக்கப் போன இடத்திலும் சரியான கவனிப்பு இல்லை”

“அவர் என்ன சொன்னாராம்?”

”அதிமுக தலைவர்கள் ரூமுக்குள்ள நுழையும்போதே, ‘கூட்டணியே வேணாம்னுதானே உங்க தலைவர்கள் சொல்லிட்டு இருக்காங்க. இப்ப என்னை எதுக்காக பார்க்க வந்திருக்கீங்க?’ன்னு கேட்டுருக்கார் நட்டா.  இதை இவங்க எதிர்பார்க்கல. ஆனாலும் சமாளிச்சுக்கிட்டு,

அண்ணாமலை மேல குற்றப்பட்டியல் வாசிச்சிருக்காங்க. அதுக்கு நட்டா, ‘அவர் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்கிற வேலையில இருக்கார்.  அதை நான் எப்படி தடுக்க முடியும்?’னு சுருக்கமா பேசி, ஒரு டீயைக் கொடுத்து அனுப்பிட்டார்.  அடுத்து  பியூஷ் கோயலை சந்திச்சிருக்காங்க. அவர் எல்லாத்தையும் கேட்டுட்டு, அவரும் எதுவும் உருப்படியா சொல்லாம டீ சாப்பிடுறீங்களானு கேட்டு அனுப்பிச்சிட்டார். அடுத்து எங்க போறதுனு தெரியலை. எடப்பாடி பழனிசாமிக்கு போனைப் போட்டு சொல்லியிருக்காங்க. இனிம அங்க யாரையும் பார்க்க வேண்டாம். வந்துருங்கனு சொன்னதும் ஃப்ளைட்டை பிடிச்சிட்டாங்க. டெல்லியில இருந்து திரும்பினதும் எடப்பாடியைச் சந்திச்ச கே.பி.முனுசாமி, இனியும் பாஜக கூட்டணி வேணாம்னு அடிச்சு சொல்லி இருக்கார். ‘இது என்னோட கருத்து மட்டுமில்லை. பெரும்பாலான அதிமுக மாவட்ட செயலாளர்களோட கருத்து’ன்னு சொல்லி இருக்கார். அதுக்குப் பிறகுதான் அதிமுக மாவட்ட செயலாளர்கள்,  கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களோட அவசரக் கூட்டத்தை எடப்பாடி கூட்டி இருக்கார். அந்த கூட்டத்துல வச்சு பாஜக கூட்டணியில இருந்து விலகறதா அறிவிச்சிருக்காங்க”

”இவங்க எதுக்கு டெல்லி போய் அசிங்கப்படுணும்”

“அதுக்கு காரணமும் ஒரு பாஜக பெண் தலைவர்தான்னு அதிமுகவுல பேச்சு இருக்கு”

“யாரு வானதி சீனிவாசனா?”

”நான் பேரைச் சொல்ல மாட்டேன். அவங்களுக்கும் அண்ணாமலைக்கும் ஆகாது. வெளில சிரிச்சுப்பாங்க. ஆனா முதுகுக்குப் பின்னால கத்தி வச்சிருப்பாங்க. புரிஞ்சிருச்சா” என்று சிரித்தாள் ரகசியா.

“புரிஞ்சிருச்சு. விஷயத்தை சொல்லு”

”அண்ணாமலையை நீக்கிவிட்டு தன்னைத் தலைவரா நியமிக்க சிபாரிசு செய்யணும்னு  அதிமுக தலைவர்கள்கிட்ட இவங்க கேட்டதாவும், அதுக்கு அவங்க சம்மதிச்சதால இந்த சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செஞ்சு கொடுத்ததாகவும் சொல்றாங்க. இதில கவனிக்க வேண்டியது  என்னனா இவங்கதான் ஏற்பாடு செஞ்சதுனு சொல்றதே அண்ணாமலை தரப்புதான். இந்தப் பெண்மணி ஏற்பாடு பண்ணிதான் நம்பிக்கையா அதிமுகவினர் டெல்லி போயிருக்காங்க”

“கோவையலருந்துக்கிட்டு  முழு தமிழ்நாட்டுக்கும் அவங்க ஆசைப்படுறாங்களா?”

“நான் கோவைனே சொல்லலையே…நீங்களா கற்பனைய வளர்த்துக்காந்திங்க. இதுல என்ன சோகம்னா..இப்பவும் அவங்கதான் அதிமுக தரப்புக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்”

’அடப்பாவமே…சரி, அதிமுக – பாஜக பிரிவைப் பத்தி அவங்களோட கூட்டணி கட்சிகள் என்ன நினைக்குதாம்?”

”எல்லோருக்கும் அதிர்ச்சிதான். அதிமுக கூட்டணி இருந்தாதான் வெற்றி வாய்ப்புனு அவங்களுக்குத் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ள ரெண்டு கட்சியையும் சேர்த்துறனும்னு இருக்காங்க. அதை முன்னெடுத்துப் பண்ணப் போறது ஜி.கே.வாசனும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும்”

”அதிமுக – பாஜக கூட்டணி உடைஞ்சதுல ஓபிஎஸ் குஷியா இருப்பாரே?”

”பாஜகவுடன் கூட்டணி இல்லைங்கிற அதிமுகவோட அறிவிப்பை பட்டாசு வெடிக்காத குறையா கொண்டாடிட்டு இருக்கார் ஓபிஎஸ். தன்னை விட்டு எடப்பாடி பக்கம் பாஜக நின்னதுல அவருக்கு வருத்தம் இருந்தது. இந்த கூட்டணி முடிஞ்சதை சுட்டிக்காட்டி, ‘இதுக்குத்தான் நான் அப்பவே எடப்பாடிய நம்பாதீங்க. அவர் உங்களை ஏமாத்திடுவாருன்னு சொன்னேன். அப்ப நம்பலை. இப்ப அவர் புத்தியை காட்டிட்டார் பாத்தீங்களா?’ன்னு தனக்கு தெரிஞ்ச பாஜக தலைவர்களுக்கு போன் போட்டு நோகடிச்சுட்டு இருக்கார்.”

“பாஜக தலைவர்கள் என்ன நினைக்கிறாங்க?”

“நான் ரெண்டு மூணு பேர்கிட்ட பேசுனேன். ஒரு சீனியர் தலைவர் ரொம்ப வருத்தப்பட்டார். அண்ணாமலையால எல்லா வாய்ப்பும் போய்க்கிட்டு இருக்குனு புலம்புனார். இவரே ஒரு பிரச்சினைல மாட்டுனவர்தான். அதுக்கு காரணமே அண்ணாமலைனு நினைக்கிறார். அதிமுக இல்லாம ஜெயிக்க முடியாதுனு திடமா சொல்றார். இந்த முறை சீட் கேட்கலாம்னு இருந்தாராம்”

“ஐயோ பாவம்!”

“அப்புறம் இன்னொரு பெண் பிஜேபி பிரபலத்துக்கிட்ட பேசினேன். அவங்களும் வருத்தப்பட்டாங்க. ஆனா அவங்க ஒரு லாஜிக் சொல்றாங்க. அதிமுக தனியா போட்டியிட்டாதான் பாஜகவுக்கு வசதி. தனியா நின்னு ஜெயிச்சு தேர்தலுக்கு அப்புறம் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணுவாங்கனு சொல்றாங்க. இதெல்லாம் மோடி, அமித்ஷாவோட பிளானா கூட இருக்கும்னு நம்பிக்கையா சொல்றாங்க.”

”தேர்தல்ல அதிமுக ஜெயிச்சுரும்னு நினைக்கிறாங்களா?”

“பாஜக கூட்டணி இல்லனா சிறுபான்மையினர் ஓட்டுக்கள்லாம் வந்துரும் அதனால அவங்க ஜெயிச்சிருவாங்கனு சொல்றாங்க”

“அவங்களுக்கு நல்ல அரசியல் அறிவு இருக்கிறது. யாரு அவங்க?”

“சென்னைக்காரங்கதான். அதுக்கு மேல சொல்ல முடியாது” என்று சிரித்தாள்.

“அப்போ பாஜகவுல இருக்கிறவங்க டென்ஷனாதான் இருக்காங்க”

“ஆமாம்..ஒருத்தங்க மட்டும் நான் போன் பண்ணதும்…ஸ்வீட் எடு கொண்டாடுனு சொன்னாங்க”

”இவங்க யாரு?”

“இவங்களும் சென்னைக்காரங்கதான். நீங்களே கண்டுபிடிங்க”

”சரி, கமல் கோவையில போட்டி போடுறாராமே?”

 “கமல் கோவை வரது கம்யூனிஸ்ட்களுக்கு சங்கடத்தை கொடுத்திருக்கு. ஏற்கெனவே திமுக கூட்டணியில் கோவை தொகுதியில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஜெயிச்சிருக்கு. இப்ப  கமலஹாசன் தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ரெண்டு பேர்கிட்டயும் பேசி அந்த தொகுதியையும் வாங்கிடுவாரோன்னு அவங்க பயப்படறாங்க.”

“அதுக்கு என்ன தீர்வு?”

“கமல் இடமாறலாம். அவர் ரசிகர்கள் சொல்ற மாதிரி ஆழ்வார்பேட்டைஆண்டவராக மாறலாம். அவர்தான் அவ்வை சண்முகியாகியாவே மாறினவராச்சே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...