“அதிமுக நிர்வாகிகளுக்கு எல்லாம் இப்பவே வேண்டுகோள் விடுக்க ஆரம்பிச்சுட்டார் எடப்படி” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“என்ன வேண்டுகோள்?… வாக்குப்பதிவு நாள்ல கவனமா இருக்கச் சொல்லியா?”
“அதுதான் இல்லை. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை உடைக்க பல்வேறு முயற்சிகளை பாஜக செய்யும்னு எடப்பாடி நம்பறார். அதை எதிர்கொள்ள இப்பவே அவர் தயாராகிட்டு வர்றார். இது விஷயமாத்தான் எல்லாருக்கும் வேண்டுகோள் விடுக்கிறார். ‘தேர்தலுக்குப் பிறகு நாம எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கு. பொதுக்குழு விஷயத்தில் நீங்கள் எல்லாரும் எப்படி ஒத்துமையா எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தீங்களோ… அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.”
“நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக தினகரனைத் தேடிப் போகும்னு அண்ணாமலை சொன்னாரே அதனால இப்படி சொல்லி இருக்காரா.”
“ஆமாம். அண்ணாமலை அப்படி சொன்னதுல ஒரு பக்கம் எடப்பாடி உஷாராக, இன்னொரு பக்கம் ஓபிஎஸ் வருத்தப்பட்டு கிடக்கறாரு.”
“அவருக்கு என்ன வருத்தம்?”
“தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்த அண்ணாமலை, ‘ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அதிமுக தினகரன் கைக்கு வந்துடும்’னு பேசி இருக்கார். இதைக் கேட்ட ஓபிஎஸ், ‘இரட்டை இலை சின்னத்துக்காகவும், பொதுச் செயலாளர் பதவி தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை எடப்பாடியோட மல்லு கட்டிட்டு இருக்கறது நானு. ஆனா கட்சியை மட்டும் தினகரன்கிட்ட ஒப்படைப்பாங்களா?’ன்னு கூட இருக்கறவங்ககிட்ட புலம்பிட்டு இருக்கார்.”
“தேர்தல் களத்துல இப்போதைக்கு முன்னணியில் இருக்கிறது கனிமொழிதான். 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் ஜெயிப்பார்னு சொல்றாங்களே?”
“கள நிலவரம் கிட்ட்த்தட்ட அப்படித்தான் இருக்குது. மத்த வேட்பாளர்கள் எல்லாரும் தேர்தல் செலவுக்கு கட்சியில பணம் கேட்க, கனிமொழி மட்டும் இன்னும் ஒத்தை ரூபாயைக்கூட கட்சியில இருந்து வாங்கலையாம். ஸ்டாலினே பணம் வேணுமான்னு கேட்டப்பகூட, ‘எனக்கு தேவைன்னா உங்களைத் தவிர வேற யார்கிட்ட கேட்கப் போறேன். தேவைப்பட்டா வாங்கிக்கறேன்’ன்னு மட்டும் சொல்லி இருக்காங்க. தன்னோட தொகுதி மட்டும் இல்லாம மத்த தொகுதிகள்லயும் அவர் பிரச்சாரம் செய்யறதுல திமுக தலைமைக்கு ரொம்ப மகிழ்ச்சி.”
“காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களோட நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேனே?”
“எல்லாத்துக்கும் கோஷ்டி பூசல்தான் காரணம். அதனால சொந்த கட்சிக்காரங்களே காங்கிரஸ் வேட்பாளருக்காக களத்துல இறங்காம இருக்காங்க. இது திமுககாரங்களுக்கும் அதிருப்தியை கொடுத்திருக்கு. அவங்க இதுபத்தி முதல்வர் ஸ்டாலின்கிட்ட புகார் சொல்லி இருக்காங்க. அதுக்கு ஸ்டாலின், ‘எல்லாம் எனக்கு தெரியும். காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கிறேன்னு நான் ராகுல் காந்திக்கு வாக்கு கொடுத்திருக்கேன். அதுக்காக நீங்க வேலை செய்யுங்க’ன்னு சொல்லி அனுப்பி இருக்கார்.”
“பாஜக நியூஸ் ஏதாவது இருக்கா?”
“டெல்லியில் இருந்து பாஜக வேட்பாளர்களுக்கான பணம் வந்திருக்கு. ஆனா அதை வேட்பாளர்களுக்கு பட்டுவாடா செய்யும்போது பட்டுவாடா செய்யறவங்களே சர்வீஸ் சார்ஜ்னு சொல்லி கணிசமான தொகையை பிடித்தம் செய்துக்கறாங்களாம். அதுக்கு ஒத்துக்கலைன்னா, ‘நான் கொடுத்துட்டேன். நீங்கள் செலவு செய்யலைன்னு நானே டெல்லியில் போட்டுக் கொடுத்துடுவேன்’ன்னு சொல்றாங்களாம். இந்த தேர்தல்ல பாஜக ஜெயிக்குதோ இல்லையோ கட்சியில பல பேர் கோடீஸ்வரர்கள் ஆகப்போறாங்க. எல்லாம் விநாயகர் அருள்னு கமலாலயத்துல பேசிக்கறாங்க.”
“மத்தவங்க எல்லாம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தா ஓபிஎஸ் பலாப்பழம் கொடுக்கறதா சொல்றாங்களே?”
“நீங்க கேள்விப்பட்டது சரிதான். ஓபிஎஸ் சின்னம் பலாப்பழம்ங்கிறதால கேரளாவில் இருந்து லாரி லாரியா பலாப்பழத்தை கொண்டுவந்து ராமேஸ்வரத்துல இறக்கி இருக்காங்களாம். தினமும் மக்களுக்கு இதை விநியோகம் செய்யறாங்களாம். அவங்ககிட்ட பலாப்பழம் வாங்கற மக்கள், திரும்ப அதை வியாபாரிகள்கிட்ட கொடுத்து பணம் வாங்கிக்கறாங்க. பலாப்பழம் சின்னம்கிறதால அதைக் கொடுக்கறதை தேர்தல் ஆணையத்தால தடுக்க முடியலை.”
”சரி, யார் யாருக்கு எத்தனை சீட் வரும்? உனக்கு தகவல் வந்திருக்குமே?”
“இப்போதைக்கு 39க்கு 39னு திமுக கூட்டணி ஜெயிக்கும்னுதான் சொல்றாங்க. ஆனா தேனில தினகரன், திருநெல்வேலில நயினார் நாகேந்திரன் ஜெயிக்கறதுக்கு வாய்ப்பிருக்குனும் சொல்றாங்க. ஆனா எல்லாம் கடைசி நாள் வைட்டமின் எம் எவ்வளவு தூரம் வேலை செய்யுதுன்றதை பொருத்தது”
“அப்போ அண்ணாமலைக்கு கூட வாய்ப்பில்லையா?”
‘ஆமா, அப்படிதான் தகவல் வருது”