No menu items!

பதற்றத்தில் பாஜக – கவலையில் தங்க தமிழ்ச்செல்வன் – பாவமாய் ஓபிஎஸ் – மிஸ் ரகசியா

பதற்றத்தில் பாஜக – கவலையில் தங்க தமிழ்ச்செல்வன் – பாவமாய் ஓபிஎஸ் – மிஸ் ரகசியா

“வெயிலும் சூடாயிருச்சு அரசியலும் சூடாயிருச்சு” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா.

”வேட்பாளர் லிஸ்ட்லாம் வந்துருச்சு போல. இப்பவே தெரியுமே யார் ஜெயிப்பா யார் தோப்பானு? எந்தக் கட்சி குஷியா இருக்கு?”

“இப்போதைக்கு திமுகதான் குஷியா இருக்கு.”

“அவங்களுக்கு என்ன எதிரணி இரண்டா இருந்தா சந்தோஷம்தானே? சரி, இந்தத் தேர்தல்ல போட்டியில்லனு சொன்ன அண்ணாமலை போட்டில இறங்கிட்டாரே?”

“ஆமா, நாடாளுமன்ற தேர்தல்ல ஜெயிக்கறோமோ இல்லையோ, அதிமுகவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடிச்சுடணும்னு அண்ணாமலைக்கு டார்கெட் கொடுத்திருக்காராம் பிரதமர் மோடி. இது தமிழ்நாட்டு பாஜகவை பதற்றத்தில் வைத்திருக்கிறது. அதனாலதான் பாஜகவோட முதல் லிஸ்ட்லயே அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன்னு பெரிய தலைகளை களத்தில் இறங்கிட்டாங்க”

”இத்தனை தலைவர்கள் போட்டியிட்டா பிரச்சாரத்துக்கு எப்படி போக முடியும்?”

”கரெக்ட்தான். ஆனா, முக்கிய தலைவர்கள் தேர்தல்ல நின்னா, நடுநிலை வாக்காளர்களை கவரலாம்கிறது பாஜக தலைமையோட திட்டம். அண்ணாமலைக்கு முதல்ல இந்த தேர்தல்ல போட்டியிட விருப்பம் இல்லை. ‘நான் தேர்தல்ல போட்டியிட்டா யார் ஊர் ஊராப் போய் பிரச்சாரம் பண்றது’ன்னு பாஜக மேலிடத்துல கேட்டிருக்கார். அதுக்கு கட்சித் தலைமை, ‘அதையெல்லாம் நாங்க பாத்துக்கறோம்’னு சொல்லி அவரை கோவை தொகுதிக்கு வேட்பாளராக்கி இருக்கு.”

“அண்ணாமலைக்கு மோடி கொடுத்த டார்கெட் மாதிரியே அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் ஒரு டார்கெட் கொடுத்திருக்காராமே?”

“கோவை தொகுதியில அண்ணாமலைக்கு டெபாசிட் கிடைக்க கூடாதுங்கிறதுதான் அந்த டார்கெட். இடைத்தேர்தல் வியூகம் வகுக்கறதுல முத்துசாமி கெட்டிக்காரர். அவர் அதிமுகல இருந்தப்ப எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இடைத்தேர்தல் வந்தா அதைச் சமாளிக்கற பொறுப்பை முத்துசாமிகிட்டதான் கொடுப்பாங்க. இப்ப அவரை கோவை தொகுதி பொறுப்பாளரா முதல்வர் ஸ்டாலின் நியமிச்சிருக்கார். இதுக்கு சபரீசனோட சிபாரிசும் ஒரு காரணம். இடைத்தேர்தல் வியூகத்தை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தணும்னு முதல்வர் ஸ்டாலின் முத்துசாமிகிட்ட சொல்லி இருக்கார். அவரும் ஒரு கை பார்க்கிறதா சொல்லி இருக்காராம். திமுக மாதிரியே அண்ணாமலை மேல அதிமுகவும் கோபத்துல இருக்கு. அவரை எப்படியும் தோற்கடிக்கணும்னு எஸ்.பி.வேலுமணிகிட்ட எடப்பாடி சொல்லி இருக்காரு.”

“ரெண்டு பக்கமும் கத்தின்னா அண்ணாமலை பாவம்தான்.”

“அவரைவிட ஓபிஎஸ்தான் பாவம். பாஜககிட்ட டிடிவி தினகரனை கொண்டு போனதே ஓபிஎஸ்தான். ஆனா தினகரனுக்கு 2 சீட்டையும், தமாகாவுக்கு 3 சீட்டையும் கொடுத்த பாஜக, ஓபிஎஸ்ஸுக்கு ஒரு சீட்தான் ஒதுக்கிச்சு. அந்த சீட்லயும் தாமரை சின்னத்துலதான் நிக்கணும்னு பிடிவாதமா இருந்திருக்காங்க.”

“அவரை மட்டும் ஏன் தாமரை சின்னத்துல நிக்கச் சொன்னாங்க?”

“ஓபிஎஸ்ஸும் இந்த கேள்வியை பாஜக தலைவர்கள்கிட்ட கேட்டிருக்கார். அதுக்கு அவங்க, ‘டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் இருக்கு. தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் இருக்கு. உங்களுக்கு சின்னம் இல்லை. அதனால தாமரை சின்னத்துலயே நில்லுங்க’ன்னு கராறா சொல்லி இருக்காங்க. இதைக் கேட்டு ஓபிஎஸ் நொந்து போயிருக்காரு. நான் என் ஆதரவாளர்கள்கிட்ட ஆலோசனை பண்ணிச் சொல்றேன்னு சொல்லி இருக்கார். ஆதரவாளர்கள்கிட்ட இதைச் சொன்னதும் அவங்க பொங்கி எழுந்திருக்காங்க. ‘இதனால்தான் எடப்பாடி பாஜக கூட்டணியில இருந்து கழண்டுக்கிட்டாரு நாமளும் தனியா நிக்கலாம்’னு சொல்லி இருக்காங்க. ஆனா ஓபிஎஸ் அதுக்கு சம்மதிக்கல. ‘இந்த தேர்தல்ல அதிமுக நிச்சயம் படுதோல்வி அடையும். அப்ப கட்சி நம்ம கைக்கு வரும். அதனால பாஜக கொடுக்கற தொகுதியிலயே சுயேச்சை சின்னத்துல நிப்போம். நானே என் செல்வாக்கு என்னன்னு நிரூபிக்க ராமநாதபுரத்தில் நிற்கிறேன்’ன்னு சொல்லி இருக்கார். அந்த முடிவை செய்தியாளர் சந்திப்பிலும் அறிவிச்சிருக்கிறார்.”

“ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரோட முடிவை ஏத்துக்கிட்டாங்களா?”

“ஓபிஎஸ்கிட்ட சரின்னு அரைமனதோட தலையாட்டினாலும் பாஜக மேல அவங்க கோபமா இருக்காங்க. ஒரு சிலர் அதிமுக பக்கம் கரை ஒதுங்கிடலாமான்னு யோசிக்கறாங்க. இன்னும் சிலர் இந்த தேர்தல்ல பேசாம அமைதியா இருந்திடலாம்னு முடிவெடுத்து இருக்காங்க. ஓபிஎஸ் போட்டியிடற ராமநாதபுரம் தொகுதியிலயும், தினகரன் போட்டியிட்டா தேனி தொகுதியிலயும் மட்டும் அவங்க வேலை பார்ப்பாங்கன்னு சொல்றாங்க.”

“கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்காக பாஜக எவ்வளவு பணம் கொடுத்திருக்குன்னு உனக்கு ஏதாவது தெரியுமா?”

“தாமரைச் சின்னத்தில் போட்டி போடாத கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜக தேர்தல் செலவு செய்யாதுன்னு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்துல கையெழுத்து போடும்போதே பாஜக தலைமை சொல்லிடுச்சாம். குறிப்பா பாமககிட்ட இதைச் சொல்லி இருக்காங்க. இருந்தாலும் தேர்தல் நெருங்கும்போது அவங்க பொட்டி கொடுப்பாங்கன்னு கூட்டணி கட்சிகள் நம்புது”

“பாமக கூட்டணி சேராத அதிர்ச்சியில இருந்து எடப்பாடி மீண்டுட்டாரா?”

“பாமக முடிவு பத்தி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள், எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசியிருக்கார். ‘நீங்க பெருந்தன்மையா நடந்துக்கிட்டீங்க. எங்க கட்சி தலைமைதான் ஏமாத்திடுச்சு. மன்னிச்சுக்கங்க’ன்னு அவர் எடப்பாடிகிட்ட சொல்லி இருக்கார். அதுக்கு எடப்பாடி பழனிசாமி, ‘அதெல்லாம் இருக்கட்டும்… சட்டசபை தேர்தலுக்கு பாமக எங்களோட கூட்டணின்னு வந்தா நிச்சயம் சேர்த்துக்க மாட்டோம். அதனால உங்க சட்டமன்ற உறுப்பினர்கள் எங்க கட்சியில சேர்றது பத்தி இப்பவே முடிவு செய்யுங்க. அப்படி சேர்ந்தா அடுத்த முறையும் நீங்க சட்டமன்ற உறுப்பினர்களா தொடர முடியும்’னு கராறா சொல்லிட்டாராம்.”


“அதிமுக அறிவிச்ச 33 வேட்பாளர்கள்ல 32 பேர் புதுமுகமா இருக்காங்களே. மூத்த தலைவர்களுக்கும், முன்னாள் எம்பிக்களுக்கும் ஏன் சீட் கொடுக்கல?”

“வைட்டமின் ‘ப’தான் அதுக்கு காரணம். இந்த தேர்தல்ல போட்டியிடற வேட்பாளர்களுக்கு பணம் செலவு பண்ண கட்சி தயாரா இல்லை. அதனால பணம் செலவு பண்ண தயாரா இருக்கிறவங்களுக்குதான் சீட்னு எடப்பாடி ஸ்டிரிக்டா சொல்லிட்டாராம். அதனால பெரிய தலைகள் எல்லாம் ஒதுங்கிருச்சு. இங்க சென்னைல ஜெயக்குமார்கிட்டயும் உங்க பையனை ஏன் இறக்குறிங்க? சைலண்டா ஒதுங்கிடுங்கனு சில அதிமுக தலைவர்கள் சொல்லியிருக்காங்க. ஆனா ஜெயக்குமார் ஒத்துக்கலையாம். கட்சி கஷ்டத்துல இருக்கும்போது கூட நிக்கிறதுதான் கரெக்ட்னு சொல்லி மகன் ஜெயவர்த்தனை தென் சென்னைல போட்டியிட வச்சிருக்கிறார்”

“நல்ல தொண்டரா இருக்கிறார். இதுமாதிரி அதிமுகவுல எல்லோரும் இருந்தா யாரும் பக்கத்துல வர முடியாது.

திமுகலயும் நிறைய புதுமுகங்களுக்கு சீட் கொடுத்திருக்காங்களே?”

“இதில் கனிமொழி சிபாரிசுல 2 பேரும், ஏ.வ.வேலு சிபாரிசுல 2 பேரும் சீட் வாங்கி இருக்காங்களாம். மீதி 6 பேரும் உதயநிதியோட சாய்ஸாம். மொத்தத்துல வேட்பாளர் தேர்வுல உதயநிதியோட கைதான் ஓங்கி இருக்கு.”

“சில பேர் சீட் கிடைக்காததுல வருத்தமா இருக்காங்கனு செய்தி வருதே?”

“ஒருத்தர் சீட் கிடைச்சும் வருத்தமா இருக்கிறார்..அது தெரியுமா உங்களுக்கு?
“யார் அவர்?”

“தேனில போட்டி போடப் போற தங்கத் தமிழ்ச்செல்வன். இப்போ ஜெயிச்சு நாடாளுமன்றத்துக்கு போயிட்டா 2026 தேர்தல்ல போட்டியிட முடியாது. ஜெயிச்சு அமைச்சராக முடியாதுனு இப்பவே கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறார்.”

“இப்படி ஒரு கவலையா?”

“தொலைநோக்கு திட்டம் மாதிரி இது தொலைநோக்கு கவலை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...