No menu items!

அடி வாங்கிய அர்ஜெண்டினா, ஜெர்மனி – அடுத்து என்ன?

அடி வாங்கிய அர்ஜெண்டினா, ஜெர்மனி – அடுத்து என்ன?

இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதல் போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்திருக்கிறது ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகள். ஜெர்மனி அணி இதுவரை 4 முறையும், அர்ஜெண்டினா 2 முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கத்துக்குட்டிகளான ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் தோற்றால் எத்தகைய அதிர்ச்சி இருக்குமோ, அத்தகைய தாக்கத்தை இந்த தோல்விகள் ஏற்படுத்தி உள்ளன. உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பாக்கப்பட்ட இந்த அணிகள் முதல் போட்டியில் தோற்றதால் இரண்டாவது சுற்றை நெருங்குவதே இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

புதன்கிழமை மாலை நடந்த போட்டியில் ஜப்பான் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றிருக்கிறது ஜெர்மனி அணி. இந்தத் தோல்வியினால் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி இருக்கிறது.

ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஹன்ஸி பிளிக் இந்தத் தோல்வி குறித்து பேசும்போது “ஜப்பான் அணியிடம் தோற்றது மிகப்பெரிய ஏமாற்றம். இதற்கு எங்களையேதான் நாங்கள் குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும். இப்போட்டியின் முதல் பாதியில் நன்றாகத்தான் ஆடினோம். பந்து 80 சதவீதம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இரண்டாவது பாதியிலும் எங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நாங்கள் அவற்றை பயன்படுத்த தவறிவிட்டோம். முதல் போட்டியில் தோற்றதினால் ஜீரோவில் நிற்கிறோம். இது எங்களுக்கு பிரஷர்தான்” என்று கூறியுள்ளார்.

ஜெர்மனி அடுத்து ஸ்பெயின் அணியை எதிர்த்து ஆடவுள்ளது.

ஸ்பெயின் இப்போது பலம் பெற்று இருக்கிறது. முதல் போட்டியில் கோஸ்டாரிகா அணிக்கு எதிராக 7 கோல்கள் அடித்து தங்கள் பலத்தைக் காட்டியுள்ளது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் 6 வீரர்கள் கோல் அடித்து பீக் ஃபார்மில் உள்ளனர். இப்படிப்பட்ட ஸ்பெயினை வெல்ல ஜெர்மனி வீரர்கள் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

ஸ்பெயினை ஜெயித்தால் மட்டும் ஜெர்மனி அணி அடுத்த ரவுண்டுக்குள் நுழைந்துவிடாது. அதற்கு இன்னொரு சவாலும் இருக்கிறது.

டிசம்பர் 2-ம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் கோஸ்டா ரிகாவை அதிக கோல் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். இந்தப் போட்டிகளில் ஜெர்மனி அணி வென்றாலும், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் தலா 2 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் சமமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அதிக கோல்களை அடித்துள்ள அணிகள் இரண்டாவது சுற்றை எட்டும். ஸ்பெயின் அணி ஏற்கெனவே 7 கோல்களையும், ஜப்பான் 2 கோல்களையும் அடித்துள்ளன. ஆனால் ஜெர்மனியின் வசம் இப்போது ஒரு கோல் மட்டுமே இருக்கிறது. எனவே அடுத்த போட்டிகளில் ஜெயிப்பதுடன், அதிக கோல்களையும் அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி இருக்கிறது.

ஜெர்மனியைப் போலவே அர்ஜென்டினா அணியும் திக்கித் திணறிக் கொண்டு இருக்கிறது. சவுதி அரேபிய அணியிடம் 2-1 என்ற கோல்கணக்கில் தோற்ற அர்ஜென்டினா, இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிடும் ஆபத்து இருக்கிறது.

அந்த அணிக்கு உள்ள ஒரே ஆறுதல், தங்கள் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் போலந்தும், மெக்சிகோவும் 1-1 என்ற கோல்கணக்கில் டிரா செய்ததுதான். இப்போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் 27-ம் தேதி நடக்கும் போட்டியில் மெக்சிகோ அணியையும், டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் போட்டியில் போலந்து அணியையும் அர்ஜெண்டினா வென்றால் கோல் வித்தியாசங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அர்ஜெண்டினா தானாக இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

அதேநேரத்தில் அந்த 2 போட்டிகளில் ஒன்று டிராவில் முடிந்தாலும், கோல் வித்தியாசங்கள் உட்பட பல விஷயங்கள் அர்ஜென்டினாவின் கழுத்தை நெரிக்கும்.
முதல் போட்டியில் தோற்று சுணங்கியிருந்த அர்ஜென்டினா வீரர்களிடம் மெஸ்ஸி கூறிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

“இது நமக்கு பலத்த அடிதான். ஏனென்றால் இதை நாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியின் மூலம் நமக்கு 3 புள்ளிகள் கிடைக்கும். அதிக பரபரப்பில்லாமல் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. எதிர்பாராதது நடந்துவிட்டது. அடுத்து நடக்கவுள்ள விஷயங்களுக்காக நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் நாம் வென்றாக வேண்டும். அது நம்மைச் சார்ந்தே இருக்கிறது.

நாம் கடுமையான அணிகளைக் கொண்ட பிரிவில் இருக்கிறோம். அதனால் முன் எப்போதையும்விட வலிமை கொள்வோம். அடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம்” என்று அப்போது பேசியிருக்கிறார் மெஸ்ஸி. அவரது இந்த வார்த்தைகள் அடுத்த போட்டிகளை எதிர்கொள்ள அர்ஜென்டினா வீரர்களுக்கு புதிய சக்தியைக் கொடுத்துள்ளதாக சக வீரர்கள் சொல்கிறார்கள்.

சக்தியைக் கொடுத்ததா என்பது வரும் போட்டிகளில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...