No menu items!

ஊர்வலத்துக்கு தடை ஆர்எஸ்எஸ் ஹேப்பி – மிஸ் ரகசியா

ஊர்வலத்துக்கு தடை ஆர்எஸ்எஸ் ஹேப்பி – மிஸ் ரகசியா

“பொன்னியின் செல்வனைப் பார்த்துட்டேன்…” என்று உற்சாகமாக ஆபீசுக்குள் நுழந்தாள் ரகசியா.

“படம் எப்படி இருக்கு? பிரம்மாண்டத்துல பாகுபலியை முந்திடுச்சா?”

“பிரம்மாண்டத்துல பாகுபலியை முந்தலைன்னாலும் ரசிகர்களை படம் ஏமாத்தாம இருக்கு. பொதுவா ஒரு படத்து மேல நிறைய எதிர்பார்ப்பு இருந்தா, அது ரிலீஸ் ஆனதும் கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனா பொன்னியின் செல்வன் ஏமாற்றலை. நிச்சயம் நல்லா ஓடும்.”

“நல்லா ஓடட்டும். தமிழ் சினிமாவுக்கு இப்போதைய தேவை சக்சஸ்தானே…”

“ஆமா… பொதுவாவே இந்த வருஷம் தென்னிந்திய சினிமாவுக்கு நல்ல காலமா இருந்திருக்கு. தொடர் வெற்றிகள் வர்றதாலே இன்னும் நிறைய புது முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.”

“சினிமா போதும். அரசியலுக்கு வா…. பொன்னியின் செல்வனைப் போலவே திமுககாரங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பும் வந்துடுச்சே…”

“ஆமாம். இதுல கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டு இருந்தாராம் முதல்வர் ஸ்டாலின். மாவட்டங்களோட எண்ணிக்கையையும் அவர் குறைக்க திட்டமிட்டு இருந்ததா சொல்றாங்க. ஆனா அவர் நினைச்சது எதுவுமே நடக்கல. 7 மாவட்டச் செயலாளர்களை மட்டும்தான் அவரால மாத்த முடிஞ்சது. அதேமாதிரி கோயம்புத்தூர்ல மட்டும்தான் 2 மாவட்டங்களை குறைக்க முடிஞ்சது. நாடாளுமன்றத் தேர்தல் வர்றதால இப்போதைக்கு பெரிய அளவில் மாத்த வேணாம்னு மூத்த தலைவர்கள் கடிவாளம் போட்டதுதான் இதுக்கு முக்கிய காரணம். ஒருவித அதிருப்தியோடதான் பட்டியலை வெளியிடச் சொன்னாராம்.”

“தலைமைக் கழகத்துல மாற்றங்கள் வருமா?”

“வரும்னு சொல்றாங்க. டி.ஆர். பாலு மாற்றப்பட்டு பொருளாளர் பதவி எ.வ. வேலுவுக்கு வரலாம்னு சொல்றாங்க. அமைப்புச் செயலாளராக இருக்கிற ஆர்.எஸ். பாரதி மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு அன்பகம் கலை வருகிறார். இவர் பட்டியிலினத்தை சேர்ந்தவர். சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்த துணைப் பொதுச்செயலாளார் பதவிக்கு கனிமொழி பெயர்தான் அடிபடுது. மேலும் இரண்டு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்படுகிறது. இந்தப் புதிய பதவிகளுக்கு வெள்ளக்கோவில் சாமிநாதன், ஜெகத்ரட்சகன் பெயர்கள் சொல்லப்படுது.”

“தென் மாவட்டங்கள்ல எடப்பாடி ரவுண்டு கட்டி அடிக்கறாரே? ஓபிஎஸ் ஏரியாவிலேயே பலத்தைக் காட்டுறாரே?”

“எடப்பாடி ரவுண்டுக்கு முன்னாடி அதிமுக தலைமைக் கழக கட்டிடம் பத்தி கசிஞ்சிக்கிட்டு இருக்கிற நியூசை சொல்லிடுறேன்.”

“என்னது.”

“இப்போ சென்னைல அதிமுக தலைமைக் கழகம் இருக்கிற இடம் ஜானகி எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு கொடுத்தது. ஜெ, ஜா அணிகள் ஒன்றான போது ஒன்றுபட்ட அதிமுகவுக்கு அந்தக் கட்டிடத்தை கொடுக்கிறேன்னு சொல்லிக் கொடுத்தாராம். இப்ப அதிமுக இரண்டாக இருக்கிறது. ஜானகி சொன்ன ஒன்றுபட்ட அதிமுக இல்லாதபோது அந்தக் கட்டிடத்தை அவங்க சொந்தம் கொண்டாட முடியாது எங்களுக்கே கொடுத்துரணும்னு வி.என். ஜானகி குடும்பத் தரப்புலருந்து சில வாரிசுகள் கேட்டிருக்காங்களாம். அது கோர்ட்டுக்கு போகப் போகுதுனு பேசிக்கிறாங்க.”

“இண்ட்ரஸ்டிங். இதுக்கு எடப்பாடி தரப்புலருந்து என்ன ரியாக்‌ஷன்?”

“வரும்போது பாத்துக்கலாம்னு எடப்பாடி டூர் கிளம்பிட்டார்.”

“ஓபிஎஸ் ஏரியாவுலேயே சூப்பரா டூர் போகிறாரே… நல்ல கூட்டம் வேற வருது.”

“எல்லாம் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஏற்பாடு. சிவகாசி பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்பாடு செய்திருக்கார். ஒண்ணு கவனிச்சிங்களா, இந்த ஏரியாவுல பேசும்போது சசிகலா, தினகரன், ஓபிஎஸ் பத்தியெல்லாம் பேசாம திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் மட்டும்தான் விமர்சனம் செஞ்சிருக்கார்.”

“ஓபிஎஸ் ஏரியாவுல அவரை விமர்சனம் பண்ணா அதிமுககாரங்களுக்குப் பிடிக்காதுனு அவருக்கு தெரிஞ்சிருக்கு.”

“இனிம நிறைய சுற்றுப்பயணம் போகப் போகிறாராம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால தமிழ்நாடு முழுவதும் இரண்டு முறையாவது சுற்றி வந்துரணும்னு சொல்லியிருக்கிறாராம்.”

“பாஜக தலைவர் ஜேபி நட்டாவை விஜயபாஸ்கர் சந்திச்சிருக்கிறாரே?”

“ஆமா. அது அதிமுகவுல சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு. அவர் மட்டும் ஏன் தனியா சந்திக்கப் போனார்னு பிரச்சினை எழுந்துருக்கு. நட்டாவை விஜயபாஸ்கர் சந்திக்கும்போது மத்திய இணையமைச்சர் முருகனும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கூட இருந்திருக்காங்க. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சது முருகன்தன்னு பேசிக்கறாங்க. நட்டாவுடனான விஜயபாஸ்கர் சந்திப்பை எடப்பாடி ரசிக்கலையாம். விஜயபாஸ்கரைக் கூப்பிட்டு, ‘இப்போதைக்கு நம்ம கட்சி வேலையை மற்றும் பாருங்க’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு.”

“இது பாஜக தலைவர்களுக்கு தெரிஞ்சா கோவிச்சுக்க மாட்டாங்களா?”

“அதைப்பத்தியெல்லாம் எடப்பாடி கவலைப்படறதா இல்லை. அதிமுக விவகாரங்கள்ல தேர்தல் ஆணையம் ஆரம்பத்துல சுறுசுறுப்பா இருந்திருக்கு. சில விளக்கங்களையும் ஆவணங்களையும் எடப்பாடிகிட்ட கேட்டிருக்கு. இதனால எடப்பாடி நம்பிக்கையோட இருந்திருக்கார். ஆனா அமித்ஷா – எடப்பாடி சந்திப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு ஸ்பீட் பிரேக் போட்டதா சொல்லப்படுது. ஆனால், ‘இதுபத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். திமுக எதிர்ப்பு அரசியல்ல தீவிரம் காட்டுவோம்’ன்னு கட்சித் தலைவர்கள்கிட்ட சொல்லியிருக்காராம் எடப்பாடி.”

“இந்த வாரம் பண்ருட்டியை வேற கட்சியை விட்டு நீக்கி இருக்காரே?”

“பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கெனவே அம்மாவோட கோபத்துக்கு ஆளானவர். அப்ப கட்சியை விட்டு வெளியில போனவர். பாமக, தேமுதிக, தனி அமைப்புன்னு போய் எதுவுமே சரிவராம அதிமுகவுக்கு வந்தார். அவரால நமக்கு எந்த லாபமும் இல்லைன்னு முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமியும் சி.வி.சண்முகமும் தந்த தைரியம்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க.”

“ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும் விடுதலை சிறுத்தைகள் மனித சங்கிலிக்கும் தமிழக அரசு தடை விதிச்சிருக்கே?”

“அதுவே ஒரு வியூகம் என்கிறார்கள். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் நாங்களும் நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவோம் என்று திருமாவளவன் அறிவித்தார். இப்போது அரசு இரண்டுக்கும் தடை விதித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை மட்டும் தடை செய்தார்கள் என்று கூற முடியாதல்லவா?”

“நல்ல வியூகம்தான். இதுல ஆர்.எஸ்.எஸ்.காரங்க ரொம்ப அப்செட் ஆகியிருப்பாங்களே?”

“ஆமா. ஆனா ஒரு வகைல ஹேப்பிதான். தமிழ்நாடு முழுவதும் ஊர்வலம் நடத்துனும்னா கூட்டத்தைக் காட்டணும். கூட்டம் இல்லாம சும்மா ஐம்பது பேர் நடந்துப் போனா சோஷியல் மீடியாவுல கிண்டலடிப்பாங்க. இதுக்காக எப்படி ஆள் தேத்துறதுன்ற கவலைல இருந்தாங்க. அது மட்டுமில்லாம அத்தனை பேருக்கும் ட்ரெஸ் வேற தைக்கணும். சும்மா கூட்டத்தை கூட்டுறது ஈஸி. ஆர்.எஸ்.எஸ். யூனிஃபார்ம்ல கூட்டத்தை சேர்க்கணும்னா கஷ்டம்ல. அதனால ஒரு வகைல அவங்க ஹேப்பி.” சிரித்தாள் ரகசியா.

“ஆனா இப்பதான் அவங்களுக்கு காசுக்கு பஞ்சமில்லைய… இதெல்லாம் கூட ஏற்பாடு செய்ய முடியாதா என்ன?”

“உண்மைதான். கோவை, மதுரை, திருச்சி பகுதில இருக்கிற பாஜக தலைவர்களைப் பார்த்து தொண்டர்களே வாயப் பிளக்கிறார்கள். எப்படியிருந்தவர்கள் இப்ப இப்படி பளபளப்பாக மாறிவிட்டார்களே என்று… அத்தனை பணம் பாய்ந்துக் கொண்டிருக்கிறது.”

“மத்தியில பவர்ல இருக்காங்க பணம் பாயாம இருக்குமா?” என்று கேட்டுக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...