No menu items!

பொன்னியின் செல்வன் – சினிமா விமர்சனம்

பொன்னியின் செல்வன் – சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் பல பெரிய நட்சத்திரங்களுக்கும், முன்னணி படைப்பாளர்களுக்கும் ஒரு ட்ரீம் ப்ராஜெக்ட்டாகவே இருந்து வந்தது ‘பொன்னியின் செல்வன்’.

ஆனால் மணிரத்னம் அதை இப்போது சாத்தியாமாக்கி இருக்கிறார்.

மூலக்கதை அமரர் கல்கி. அதனால் கதை விஷயத்தில் மணிரத்னம் பெரிதாக கைவைக்கவில்லை.

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நாவலை திரைப்படமாக எடுக்கும் போது டைரக்டர், ஸ்க்ரீன் ப்ளே ரைட்டர் முன் பெரும் சவாலாக இருப்பது திரைக்கதை. இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் அந்நாவலின் வீரியமும் சுவாரஸ்யமும் குறையாமல் எப்படி விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதுவது என்பது எரிந்து கொண்டிருக்கும் கேஸ் ஸ்டவ் பர்னரை தெரிந்தே கையால் தொடுவது போல.

காரணம் ஒரு நாவலைப் படிக்கும் போது, கதையாசிரியர் விவரிக்கும் வர்ணனைகளும், காட்சிப்படுத்துதலும் படிக்கும் வாசகர்களின் கற்பனைகளுக்கேற்றபடி அவரவர் மனதிற்குள் மிகப்பிரம்மாண்டமாக விரியும்.

அந்த கற்பனையை, படமெடுக்கும் படைப்பாளியின் காட்சிப்படுத்தும் பாணி ஓரளவிற்காகவது மேட்ச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் முதல் ஷோ முடிந்து திரையரங்கில் இருந்து வெளியேவரும் போதே சோஷியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுவது வாடிக்கையாகி இருக்கிறது.

இப்படியொரு ஆஸிட் டெஸ்ட் இருப்பதை உணர்ந்தே மிக கவனமாக கையாண்டு இருக்கிறார் மணி ரத்னம்.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் சூழ்ந்திருக்கும் சூழ்ச்சிகள். ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையில் இருக்கும் பகை, குந்தவையின் ராஜ தந்திர முயற்சிகள், இலங்கையில் அருண்மொழி வர்மன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என சீரியஸான எபிசோட்களை எடுத்து கொண்டு, வந்தியதேவனின் சேட்டைகளை கலந்து ’பொன்னியின் செல்வன் -1’ படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

மணி ரத்னம் எடுத்திருக்கும் இந்த பொன்னியின் செல்வனின் USP, அதன் நட்சத்திரப் பட்டாளம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாக்லேட் பாய் எப்படி இருந்திருப்பார் என்பதற்கு ஒரு உதாரணம் வந்தியதேவன் கதாபாத்திரம். அதை அசால்ட்டாக செய்து அசத்தி இருக்கிறார் கார்த்தி. படம் பார்க்கையில் கார்த்தி வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன.

கோபமும், வேகமும் நிறைந்த ஆதித்த கரிகாலனாக விக்ரம். குளிருக்கு மூட்டிய கேம்ப் ஃபயர் மாதிரி படம் முழுக்க பற்றியெறிகிறார்.

மறுபக்கம் சாந்தமும், வீரமுமாக அருண்மொழி வர்மன். இந்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி அலட்டாமல் நடித்திருக்கிறார்.

குந்தவையாக திரிஷா. [டைட்டில் கார்டில் இப்படிதான் போட்டிருக்கிறார்கள்]. நாட்கள் செல்ல செல்ல திரிஷாவிடம் ஒரு நளினம் நைஸாக சேர்ந்திருக்கிறது. கம்பீர அழகியாக கவர்கிறார். அவரது ’அந்த’ குரல் கிறங்கடிக்கிறது.

பொன்னியின் செல்வன் நாவலில் செம கெத்தான கதாபாத்திரம் நந்தினி. கல்கியின் நாவலில் நந்தினி பற்றி படிக்கும் போதே, ஆண்ட்ரோஜென்கள் ஊற்றெடுக்கும். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் ஐஸ்வர்யா ராயை கமிட் செய்துவிட்டால், அதுவே போதும் என மணி ரத்னம் கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டார். போலும்

சோழ சாம்ராஜ்ஜியத்தையே தனது அழகால் கிறங்கடிக்கும் ஒரு பேரரழகியைக் காட்டும் போது, அவரது கம்பீரமும், கவர்ச்சியும் கலந்த ஆளுமையை பாடி லாங்வேஜிலும், எக்ஸ்ப்ரஷன்களிலும், கேமரா ஆங்கிள்களிலும் காட்டாமல், ஏதோ ப்ரீப்ரோக்ராம் செய்து பேசவிட்ட ரோபோவை போல காட்டியிருக்கிறார்கள். அதித்த கரிகாலனை மயக்கிய பேரரழகி பல காட்சிகளில் எக்ஸ். பேரரழகியைப் போல இருக்கிறார்.

பார்த்திபன், சரத்குமார் இருவரும் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையராக முறுக்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் கலாய்க்கிறார்.

பூங்குழலியாக மெல்லிடை ஐஸ்வர்யா லஷ்மி ஏகப்பொருத்தம்.

பிரகாஷ் ராஜுவுக்கு இங்கு பெரிய வேலையில்லை.

முக்கியமான சம்பவங்களை மட்டும் திரைக்கதைக்கு எடுத்து கொண்டவர்கள், அந்த சம்பவங்களில் தொடர்புடைய சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கான டீடெய்ல்களையும், பின்னணியையும் கொஞ்சம் கூட காட்டாமல் போகிற போக்கில் ஒரு டயலாக்குடன் பேட்ச் அப் செய்திருக்கிறார்கள். இதனால் க்ராஷ் டெஸ்ட்டுக்கு வந்த கார்களை போல ஆங்காங்கே காட்சிகள் ஜெர்க் அடித்து கடக்கிறது
பூங்குழலிக்கு அருண்மொழி வர்மன் மீது ஈர்ப்பு வந்தது ஏன்.. குந்தவைக்கும் சேந்தன் அமுதனுக்கும் எப்படி பழக்கம், ஆழ்வார்க்கடியான் பண்ணும் கலகங்கள், நந்தின் வீரபாண்டியனுடன் சேர்ந்தது எப்படி என்பது போன்ற பல கேள்விகளுக்கான பின்னணியைக் காட்டாமல் இரண்டு மணி நேரம் 47 நிமிஷத்தில் படத்தை முடிக்கவேண்டுமென மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் லிஸ்ட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பின்னணி இசை கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் உடன் கலக்கும் போது காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. ஆனால் ஆயிரம் காலத்திற்கு முன்பு நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தை படமாக எடுக்கும் போது, இங்குள்ள தமிழ் இசைக்கருவிகள், வாத்தியக்கருவிகள் அதிகம் கலக்காமல் கம்ப்யூட்டர் சிந்ததைஸ்சரில் கம்போஸ் செய்திருப்பது இந்த தலைமுறையின் டேஸ்ட்டுக்கான ட்ரீட்டாக இருக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கும், 70,80,90ஸ் கிட்ஸூக்கு ட்ராய் படத்தின் தமிழ் வெர்ஷனோ என்று யோசிக்க வைக்கிறது.

ரவி வர்மனின் கேமரா பிரம்மாண்டமான சமாச்சாரங்களுக்குப் பின்னால் போகாமல் கதாபாத்திரங்களுக்குப் பின் தொடர்வதால் நாமும் கதைக்குள் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் கேமராவும் வேகமெடுக்கிறது.

எடிட்டிங்கில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது. ஸ்மூத்தாக நகரும் காட்சிகளில் திடீர் திடீரென ஜெர்க் அடிக்கிறது. அதேபோல் சிஜி சமாச்சாரங்களில் ஒரு முழுமை இல்லாதது குறையாக இருந்தாலும், படம் போகிற போக்கில் மறக்கடித்துவிடுகிறது.

சோழர்களின் புலி கொடியை படம் முழுக்க முழுமையாக காண்பிக்காமல், கவனத்துடன் காட்சியமைத்திருப்பதன் பின்னணி என்ன என்பது அநேகமாக டீகோடிங் எக்ஸ்பர்ட்களுக்கு சரியான தீனியாக இருக்கும்.

ஆதித்த கரிகாலனை முதல் பாகத்தில் உயிரோடு வைத்துவிட்டு, அருண்மொழி வர்மன் இறந்துவிட்டாரா என்பதோடு முதல் பாகத்தை முடித்திருப்பது மணி ரத்னமின் கில்லாடித்தனம்.

அடுத்த பாகத்திற்கு விக்ரமின் மைலேஜை தக்க வைத்திருக்கிறார்.

’பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்தவர்களுக்கு இன்னும் நன்றாக எடுத்திருக்காலாமோ என்று தோன்றும் இந்த பிஎஸ்-1, இந்த தலைமுறைக்கு ஒரு பக்காவான கமர்ஷியல் ப்ரீயட் ஃப்லிம்.

இந்த சோழர்களின் ஆதிக்கம் பாக்ஸ் ஆபீஸில் இன்னும் சில வாரங்களுக்கு இருக்கும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...