No menu items!

எ.வ.வேலு ரெய்ட் – யார் இந்த மீனா ஜெயக்குமார்? – மிஸ் ரகசியா

எ.வ.வேலு ரெய்ட் – யார் இந்த மீனா ஜெயக்குமார்? – மிஸ் ரகசியா

“உதயநிதிகிட்ட அவங்க அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்களாம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“எதுக்கு? என்னாச்சு?”

“முதல்வர் ஸ்டாலினோட உடல்நிலையை நினைச்சுத்தான்”

“ஏன்? முதல்வர் நல்லா இருக்கிறார். வழக்கமா மழைக்காலத்துல வர ஜுரம்தான். இப்ப சரியாய்டுச்சுனு மருத்துவத் துறை அமைச்சர் மா.சு. இன்னைக்கு கூட சொல்லியிருக்கிறாரே?”

”ஆமா சரியாயிடுச்சு. ரெஸ்ட்ல இருக்கிறார். ஆனா கட்சிப் பணி, ஆட்சிப் பணி, எதிர்க்கட்சிகளை சமாளிக்கற பிரச்சினைன்னு பல விஷயங்களால கடுமையா உழைக்க வேண்டிய நிலை முதல்வருக்கு. இதனால அடிக்கடி சோர்வடையறார். அவர்கிட்ட டாக்டர்கள், ‘நீங்க சின்னப் பையன் இல்லை. எழுபது வயசாயிடுச்சு. அதனால கொஞ்சமாவது ஓய்வு எடுக்கணும்’னு ஆலோசனை சொல்லி இருக்காங்க. சில நாட்களுக்கு முன்னால சளித் தொல்லையால அவதிப்பட்ட முதல்வரை பரிசோதிச்ச டாக்டர்கள், அவருக்கு ஓய்வு கண்டிப்பா வேணும்னு திரும்பவும் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினிடம் சொல்லியிருக்காங்க. உடனே உதயநிதியை கூப்பிட்டு, ‘முழு நேர அரசியலுக்கு வந்துட்ட, இப்பவும் அப்பாதான் எல்லா வேலையையும் பார்த்துக்க வேண்டி இருக்கு. இனிம நீ எல்லாத்தையும் எடுத்து பண்ணனும்’ன்னு சொல்லியிருக்காங்க”

“அதுக்கு உதயநிதி என்ன சொன்னாராம்?”

”சரிமானு சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லாம, கட்சில எல்லோரும் என்னைவிட சீனியர். அவங்களை நான் எப்படி கண்ட்ரோல் பண்றது. அப்பா பேச்சை கேப்பாங்க. என் பேச்சை கேப்பாங்களா..நான் அவங்களை சொல்றதும் நல்லாருக்குமானும் கேட்டிருக்கிறார்”

“அதுவும் கரெக்ட்தான்”

“எல்லோருக்கும் உன்னை பிடிக்குது. அப்பா வரும்போதும் இதே மாதிரி பிரச்சினைகள் இருந்தது. அதனால நீ எல்லாத்தையும் எடுத்து செய்னு சொன்னாங்களாம் துர்கா ஸ்டாலின்”

“இதுக்கு முதல்வரின் ரியாக்‌ஷன் என்ன?”

“அவருக்கும் உதயநிதிக்கிட்ட பொறுப்புகளை பகிர்ந்துக்கிறதுல சந்தோஷம்தான். நீ நடந்துக்கிற விதத்துலதான் இருக்கு, கெட்டப் பேர் மட்டும் வாங்கிடாத, எல்லோரையும் அனுசரிச்சு முடிவுகள் எடுனு சொன்னதா இளைஞரணி வட்டாரத் தகவல்கள் சொல்லுது. இப்ப பாத்துருப்பிங்களே எல்லா இடத்துக்கும் உதயநிதிதான் போகிறார். ரொம்ப முக்கியமான விஷயங்களில் மட்டும்தான் ஸ்டாலின் உள்ளே வரார்”

”கண்ணாடி போட ஆரம்பிச்சிருக்கிறாரே உதயநிதி. தன்னை கொஞ்சம் மூத்தவரா காட்டிக்கணும்னா?”

“உண்மையிலே அவருக்கு கண்ல கொஞ்சம் பிரச்சினை இருக்கு. சினிமாவுல நடிக்கும்போது கண்ணாடி போட்டிருந்தா நல்லாருக்காதுனு பொது இடங்கள்ல கண்ணாடி போடுறதை தவிர்த்து வந்தார். இப்போ சினிமா ஹீரோ இல்லை அதனால கண்ணாடியை மாட்டிக்கிட்டார். இந்தக் கண்ணாடி அவருக்கு ஒரு சீரியஸ் லுக்கையும் கொடுக்கிறது”

“இதுவும் இளைஞரணிலருந்து கிடைச்ச தகவலா? அவங்கதான் இப்ப திமுகவுல உற்சாகமா இருக்கிறாங்க போல?”

“ஆமாம். கிட்டத்தட்ட அப்படிதான். இளைஞரணி இருக்கிற சந்தோஷம் மாவட்டச் செயலாளர்கள்கிட்ட இல்ல”

“ஏன் என்னாச்சு?”

”இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்தான் இதுக்கு காரணம். மாவட்ட செயலாளர்களோட பரிந்துரையை கேட்காம, முறையா நேர்காணல் நடத்தி தகுதி இருக்கறவங்களை மட்டும் நிர்வாகிகளா அறிவிக்க சொல்லியிருக்கார் உதயநிதி. இதனால மாவட்டச் செயலாளர்கள் டென்ஷனாகிட்டாங்க. முதல்வர் ஸ்டாலின்கிட்ட ‘நீங்க இளைஞர் அணி தலைவரா இருந்தப்ப எங்கள் பரிந்துரைகளை ஏத்துக்கிட்டு நிர்வாகிகளை நியமனம் செஞ்சீங்க. ஆனால் உதயநிதி எங்களை கண்டுக்கறதே இல்லை’ன்னு புகார் சொல்லி இருக்காங்க. ஆனா முதல்வர் இதுக்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டலியாம். உதய் ஒரு காரணத்துடன் தான் செய்வார்னு சொன்னாராம். இதைச் சொல்லி மாவட்ட செயலாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க.”

“எ.வ.வேலு வீட்ல நடந்த ரெய்ட் பத்தி ஏதும் தகவல் கிடைச்சதா?”

“முதல் இரண்டு நாள் வருமானவரித் துறை நடத்தின சோதனைல பெருசா எதுவும் சிக்கல. பிறகு மீனா ஜெயக்குமார் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனைக்கு பிறகுமம், அவர் சொன்ன தகவல்களையும் வச்சு சோதனை நடத்தின பிறகு சில விஷயங்கள் வருமான வரித்துறைக்கு கிடைச்சதா ஒரு தகவல். ஆனா இந்த சோதனைக்கெல்லாம் எ.வ.வேலு அசரல. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு முதல்வர்கிட்ட கூலா சொல்லி இருக்காரு. ஆனா துரைமுருகன்தான் டென்ஷனா இருக்காராம்.”

“துரைமுருகனுக்கு என்ன டென்ஷன்?”

“அடுத்து அவர் வீட்லதான் ரெய்டுன்னு தொடர்ந்து திமுக வட்டாரத்துலயே புரளிகள் வந்துட்டு இருக்கு. இப்ப ரெய்ட் வரும்… அப்ப ரெய்ட் வரும்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்கறது துரைமுருகனை டென்ஷனாக்கி இருக்கு. இப்படி எப்ப வருவாங்களோன்னு டென்ஷன்ல இருக்கறதுக்கு அவங்க வந்து போயிட்டா நிம்மதியா இருக்கலாமேன்னு நினைக்கிறார் துரைமுருகன்.”

“சரி, மீனா ஜெயக்குமார்னு ஒரு பேரு சொன்னியே..அது யாரு? இத்தனை நாள் இந்தப் பெயர் பெரிய அளவுல வெளில வரலையே?”

”நீங்க மறந்துட்டிங்க. போன வருஷம் உள்ளாட்சித் தேர்தல்ல போட்டியிட வாய்ப்பு கொடுக்கலனு திமுக மேடைல அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலைல எம்.எல்.ஏ.கார்த்திக்கை விமர்சனம் செஞ்சு பேசுனாரு. உன்னுடைய பொண்டாட்டிக்கு வாய்ப்பு கொடுக்கிறதுக்காக என் வாய்ப்பை தட்டிட்டியானு அந்த மேடைல கேட்டாரு. அப்ப அந்த செய்தி வைரலா போச்சு. அதுக்கப்புறம் அவரை கட்சிலருந்து நீக்கி வச்சிருந்தாங்க. அப்போ அவர் திமுகவோட மாநில மகளிர் தொண்டரணி செயலாளராக இருந்தார். அப்போது கனிமொழியிடம் நெருக்கமாக இருந்தார். அதன் பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு இவரது கணவர் நெருக்கம்னு சொல்றாங்க. செந்தில் பாலாஜிக்கும் இந்த குடும்பத்தினர் நெருக்கமா இருந்திருக்காங்க. ஆனா அப்புறம் எ.வ.வேலு பக்கம் சாஞ்சிட்டதாகவும் தகவல் இருக்கு. இவங்க கோவைல ரியல் எஸ்டேட், கட்டிடத் தொழில் பண்றாங்க. ஆரம்பத்துல பியூட்டி பார்லர் வச்சிருந்திருக்காங்க. எல்லாத்தையும் இப்ப நோண்டி எடுத்துக்கிட்டு இருக்காங்க”

”என்னென்ன பூதம் வருமோ..ரெய்ட் விஷயத்துல எடப்பாடியும் அலர்ட்டா இருக்காராமே?”

“அமைச்சர் எ.வ.வேலு வீட்ல ரெய்ட் நடந்தப்ப, எடப்பாடி வீட்லயும் ரெய்ட் நடக்கும்னு ஒரு நியூஸ் வந்துச்சு. ஆனா கடைசி நேரத்தில் டெல்லியில் இருந்து எடப்பாடி வீட்ல இப்போதைக்கு சோதனை வேணாம்னு உத்தரவு வந்ததால அவர் தப்பிச்சிருக்கார். இந்த விஷயம் எடப்பாடிக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் முடிற வரைக்கும் நம்ம மேல கை வைக்கமாட்டங்க. ஆனா தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் நம்ம மேலயும் ரெய்ட் நடத்துவாங்க. அதனால ஜாக்கிரதையா இருங்கனு எடப்பாடி சொன்னாராம்”

”அது என்ன நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும்?”

“இப்ப ரெய்ட் பண்ணா கூட்டணிலருந்து பாஜகவை கழட்டிவிட்டதால ரெய்ட் பண்றாங்கனு அனுதாப ஓட்டு அதிமுகவுக்கு போய்ரும்ல. அதனாலனு எடப்பாடி கணக்கு போடுறார். அது மட்டுமில்லாம தேர்தல் கூட்டணி இன்னும் இறுதியாகல. அதுக்கு முன்னாடி எதுவும் நடக்காதுன்றதும் அவர் யூகம்”

“பாமக நியூஸ் சொல்லி ரொம்ப நாளாச்சு.”

“அவங்களைப் பத்தி நியூஸ் வேனும்னா நேரடியா கேட்க வேண்டியதுதானே?.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடலூரில் போட்டி போட திட்டமிட்டு இருக்கிறாராம். நெய்வேலியில் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் விஷயத்தில் போராட்டம் நடத்தினதால அங்க இருக்கற விவசாயிகள் தனக்கு ஓட்டு போடுவாங்கன்னு அவர் நம்பறார்.”

“விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வரப் போரதா ஒரு செய்தி வந்துச்சே.”

“விஷால் அரசியலுக்கு வர்றதைப் பத்தி இவ்வளவு ஆர்வமாக் கேக்குறது நீங்க ஒருத்தராதான் இருக்கும். விஷாலுக்கே இவ்வளவு ஆர்வம் இருக்குமானு தெரியல” என்று சிரித்துக் கொண்டே கிலம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...