“ஆளுநர் ரவியை அண்ணாமலை திடீர்னு சந்தித்துப் பேசியிருக்கிறாரே… என்ன விஷயம்.” ரகசியா உள்ளே நுழைந்துமே கேள்வியை எழுப்பினோம்.
“ஆபிஸ்க்குள்ள வந்து உட்கார்வதற்குள் கேள்வியா?” என்றவள் செய்திகளை சொல்ல ஆரம்பித்தாள்.
“ஆளுநர் – அண்ணாமலை சந்திப்புங்கிறது புதுசு இல்லை. அடிக்கடி சந்திக்கிறதுதானே. இப்ப சந்திச்சது காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா ஆபாச ஆடியோ சர்ச்சையிலருந்து கவனத்தை திசை திருப்பறதுக்குனு அவங்க கட்சிக்காரங்களே சொல்றாங்க.”
“ஓ… அதான் பிரதமர் சென்னை வந்திருந்தபோது பாதுகாப்புல குளறுபடி அண்ணாமலை பிரஸ் மீட்ல சொன்னாரா?”
“பிரதமர் பாதுகாப்புலேயே குளறுபடினா எல்லோரும் கவனிப்பாங்கல, அண்ணன் அண்ணாமலையோட ஸ்டைலே தனினு அவரோட ஆதரவாளர்கள் சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்காங்க.”
“ஆனா காயத்ரி ரகுராம்தான் சந்தோஷமா இல்ல போல…”
“ஆமா உடனடியாக டெல்லி மேலிடம் ஏதாவது நடவடிக்கை எடுக்கும்னு நினைச்சாங்கபோல. ஆனால், அதிரடியா எந்த அறிவிப்பும் வரல.”
“அப்படி பாஜகவுல அதிரடியா நடவடிக்கை எடுப்பாங்களா?”
“கரெக்ட்தான். ஆனா காங்கிரஸ்ல ரூபி மனோகரனுக்கும் கே.எஸ்.அழகிரிக்கும் பிரச்சினை வந்தபோது அழகிரி எடுத்த நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் தடுத்துடுச்சு. அது மாதிரி தன் மேல எடுத்த நடவடிக்கைக்கும் தடை வரும்னு நம்பியிருக்காங்க. அதுக்காக டெல்லில பலமா மோதியிருக்காங்க. ஆனா எதுவும் நடக்கல. ‘எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு’னு ட்விட் போட்டு… நான் ஆடியோவை வெளியே விடல. அதை கண்டுபிடிப்பது அண்ணாமலைஜிக்கு எளிதுனு எழுதியிருக்காங்க… அதாவது ஆபாச ஆடியோவை வெளில விட்டது யார்ன்றது அண்ணாமலைக்கு தெரியும்ன்ற மாதிரி சொல்றாங்க.”
“இப்போதைக்கு அண்ணாமலை அசைக்க முடியாத இடத்துல இருக்கார்… அப்படிதானே.”
“அப்படி முழுதும் சொல்ல முடியாது. இன்னைக்கு பெரம்பலூர்ல சிஎம் பேசும்போது அண்ணாமலையை ஜாடைமாடையா சொன்னார் கவனிச்சிங்களா?”
“என்ன சொன்னார்? கவனிக்கலையே?”
“வாவ்தமிழா யூடியூப் சேனல்லயே (https://www.youtube.com/watch?v=Ej45bmT2WTo) இருக்கு. பாருங்க. ’தமிழ்நாடு அமைதியா இருக்குனு சிலருக்கு வயிறு எரியுது, புகார் கொடுக்கப் போறாங்க… தமிழ்நாட்டுக்கு ஆபத்து ஆபத்துனு சொல்றவங்களோட இப்போதைய பதவி நிலைக்குமா என்று பயமா இருக்கு. இவங்கதான் ஆபத்து ஆபத்துனு சொல்றாங்க” என்று பேசினார். இதில கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா, இப்படி பேசுவங்களோட பதவி நிலைக்குமானு சிஎம் சொன்னதுதான். அண்ணாமலை பதவிக்கு ஆபத்து என்பதைதான் சிஎம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.”
“நிஜமாவே அண்ணாமலை பதவிக்கு ஆபத்தா?”
“டெல்லி மேலிடத்துக்கு நிறைய புகார்கள் போயிருக்கு. தன்னிச்சையா செயல்படுகிறார். மூத்தவர்களை ஒதுக்குகிறார். அரவணைத்து போவதில்லை… இப்படி நிறைய குற்றச்சாட்டுக்கள். டெல்லி தலைமைக்கு இது தர்மசங்கடமான சூழல். அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிச்சா மத்த தலைவர்கள் தேர்தல் நேரத்துல சரியா செயல்பட மாட்டாங்க… மற்ற தலைவர்களை அனுசரிச்சு போனா அண்ணாமலை கோவிச்சுப்பார்… என்ன செய்யறதுனு தெரியாமா தலைமை இருக்கிறதா டெல்லி தகவல்கள் சொல்கின்றன.”
“காங்கிரஸ் கோஷ்டி பிரச்சினை மாதிரில இருக்கு.”
“ஆமாம். தமிழ்நாட்டு காங்கிரஸ்லயும் சிக்கல்கள் அதிகமாயிடுச்சு. ரூபி மனோகரனை தூண்டிவிட்டது செல்வபெருந்தகைதான் என்று டெல்லி மேலிடத்துக்கு புகார்கள் போயிருக்கிறது. இந்த சூழலை பயன்படுத்திக்கிட்டு செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராகனும்னு முயற்சி செய்துக்கிட்டு இருக்கார்.”
“கார்த்தி சிதம்பரம் வேற ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்காரே… அவரை தலைவராக்குனும்னுன் சொல்றாரே… அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?”
“நிச்சயம் கிடையாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருஷம்தான் இருக்கு. இந்த முறை அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமானு தெரியல. அதனால் ஏதாவது பேசி தலைமையின் கவனத்தை கவர முயற்சி செய்கிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவர் சசி தரூரை ஆதரித்ததை சோனியா குடும்பம் மறக்கவில்லை என்கிறார்கள். அதனால் அவருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று உறுதியாக சொல்லுகிறார்கள்.”
“பாவம்… ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு நடக்கப் போகிறது என்ற பேச்சு வருகிறதே?”
“ஆமாம், ஜெயலலிதா நினைவு நாளில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ்ஸும் ஒபிஎஸ்க்கு எதிராக சசிகலாவும் கொடுத்த வாக்குமூலங்கள் இரண்டு தரப்பையும் தர்மசங்கடத்தில் வைத்திருக்கிறது. அந்த கூச்சம் விலகிவிட்டால் கூடி விடுவார்கள்.”
“கூச்சம் விலகினால் கூடத் தானே செய்வார்கள்”
“டபுள் மீனீங்?” என்று கேட்டு சிரித்தாள் ரகசியா.
“எடப்பாடி எப்படி இருக்கிறார்? அவரும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?”
“எடப்பாடி மீது தினகரன் கடும் கடுப்பில் இருக்கிறார். டூபாக்கூர் தலைவர் என்று எடப்பாடி குறிப்பிட்டததுதான் தினகரனுக்கு கோபம். அதனால் சசிகலா குடும்பமும் எடப்பாடி தரப்பும் இணைவதும் கடினம் என்பதுதான் இப்போதைய நிலை. பாஜக அழுத்தம் வந்தால் கோபம் உடையலாம். கரங்கள் இணையலாம்.”
“இந்த முறை உதயநிதி ஸ்டாலின் தடபுடலாக பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறாரே.”
“அவர் எப்போதும் போல்தான் கொண்டாடினார். சுற்றி இருப்பவர்கள்தாம் தடபுடலாக்கிவிட்டார்கள். முரசொலியில் 71 பக்கம் வாழ்த்துச் செய்திகள் வந்தன. ஆங்கில டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் உதய்நிதி பிறந்த நாளுக்காக 11 பக்கம் ஒதுக்கியிருந்தது. இந்த பிறந்தநாளுக்குப் பிறகு உதயநிதியின் அரசியல் பயணத்தில் மாற்றம் வரும் என்கிறார்கள்.”
“அமைச்சர் ஆகப் போகிறாரா?”
“அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை. ஆனால், அரசியலுக்கான நேரம் கூடப் போகிறது. படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ள குடும்பத்தினர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அரசியலில் கவனம் அதிகமாகும். ஜனவரி மாதம் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் செல்லப் போவதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதைப் போல் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு முழுவதும் சென்று கூட்டங்கள் போடப் போகிறாராம்.”
“சபாஷ் சரியான போட்டி. கூட்டணி தொடர்பா திருமாவும் கே.எஸ். அழகிரியும் பேசியிருக்கிறார்களே… திமுக கூட்டணி உறுதியாகிவிட்டதா?”
“கிட்டத்தட்ட. திமுக கூட்டணியில் இனி புதிதாய் யாரும் வர மாட்டார்கள் என்பதை இரண்டு தலைவர்களும் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். கூட்டணியில் மாற்றம் இருக்கக் கூடாது என்பது அவர்கள் விருப்பம்.”
“ஏன்?”
“அவர்களுக்கு பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விருப்பமில்லை. பாமக உள்ளே வந்தால் இவர்களுக்கான தொகுதி குறையும். அதனால் இதே கூட்டணி தொடர வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்” என்று கிளம்பினாள் ரகசியா.