No menu items!

சக்தி பெறும் அண்ணாமலை எதிர் கோஷ்டி! – மிஸ் ரகசியா

சக்தி பெறும் அண்ணாமலை எதிர் கோஷ்டி! – மிஸ் ரகசியா

”இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல்தான். பொதுவா தேர்தல்ல ஜெயிச்சவங்க சந்தோஷப்படுவாங்க. தோத்தவங்க வருத்தப்படுவாங்க. ஆனால் இங்கே தனிப்பெரும் கட்சியா வெற்றிபெற்ற பாஜகவினருக்கு கொஞ்சம்கூட சந்தோஷமில்லை. அதே நேரத்தில் 99 இடங்களில் மட்டுமே ஜெயிச்ச காங்கிரஸ் கட்சிக்காரங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“பிரதமராக பதவியேற்கும் மோடி, இந்த முறை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வாரா? அதற்கு கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்குமா?”

“கூட்டணிக் கட்சிகளை விட்டுத் தள்ளுங்க. முதல்ல ஆர்எஸ்எஸ் அமைப்பு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாங்கிறதுதான் மிகப்பெரிய கேள்வியா இருக்கு.”

“ஏன் இப்படி சொல்றே? என்ன ஆச்சு?”

“சமீப காலமா ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பாரதிய ஜனதாவுக்குமான இடைவெளி அதிகரிச்சுட்டே போகுது. உத்திரபிரதேசத்தில் பாஜக அதிக சீட்களை ஜெயிக்காததுக்கு அங்க ஆர்எஸ்எஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாததுதான் காரணம்னு பேசிக்கறாங்க. தேர்தல் முடிவுக்கு பிறகும் அவங்க பிரதமருக்கு வாழ்த்து சொல்லலையாம். பிரதமரும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்திக்கலை. அதே சமயம் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள் பாஜக தலைவர் நட்டாவை சந்திச்சு சில தகவல்களை சொல்லி இருக்காங்க. அது மோடிக்கு சாதகமா இல்லை. இப்போதைக்கு பிரதமர் மோடி பதவிக்கு ஆபத்து இல்லைன்னாலும் 6 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியில் மோடி நீடிப்பாராங்கிறது சந்தேகம்தான்னு கட்சியில பேசிக்கறாங்க.”

“தமிழகத்துல தேர்தல் முடிவுகளோட ரியாக்‌ஷன் என்ன?”

“கனிமொழி, அருண் நேரு, துரை வைகோ போன்றவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் முதல்வருக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்னு வெளிப்படையா சொன்ன பிறகும் மாவட்ட திமுக அவர் வெற்றிக்கு பாடுபட்டதை நினைச்சு முதல்வர் பெருமைப்படறாராம்.”

“தொண்டர்கள் நல்லா செயல்பட்டா தலைமை பெருமைப்படறது இயல்புதானே?”

“தர்மபுரி தொகுதிதான் முதல்வரை கொஞ்சம் டென்ஷன் ஆக்கியிருக்கு. அங்க பாமக முன்னிலைன்னு முதல்ல செய்திகள் வந்தப்ப முதல்வர் பதற்றமாகி இருக்கார். தருமபுரி பொறுப்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பேசிட்டு இருந்தார். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முதலமைச்சரிடம் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாச் சொல்லி இருக்கார். ஆனாலும் முதல்வருக்கு நிம்மதி இல்லை. கடைசியில ஒன்பதாவது ரவுண்டுல இருந்து திமுக முன்னணி பெறத் தொடங்கின பிறகுதான் அவர் அமைதியாகி இருக்கார்.”

“கோவையில வாக்கு எண்ணிக்கைக்கே அண்ணாமலை போகலையே?”

“கோவையில் தேர்தல் முடிவு தனக்கு சாதகமா இருக்காதுன்னு அவருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அதனாலதான் வாக்கு எண்ணிக்கைக்கு அவர் போகல. இது பத்தி கட்சிக்காரங்க கேட்டப்ப, வாக்கு எண்ணிக்கைக்கு வேட்பாளர் போகணும்னு சட்டமெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாராம்.”

“பாஜகல தேர்தல் முடிவு ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?”

“இந்த தேர்தல் முடிவால பாஜகல இருக்கற அண்ணாமலை எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியா இருக்காங்க. தமிழகத்துல அதிமுகவோட கூட்டணி அமைச்சிருந்தா 20 இடங்கள்லயாவது ஜெயிச்சிருக்கலாம். அது நடக்காம போனதுக்கு அண்ணாமலைதான் காரணம்னு அவங்க கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பி இருக்காங்க. ஒரு சிலர் நேரடியாவே அண்ணாமலைதான் காரணம்னு பேசவும் செஞ்சிருக்காங்க. இதனால அண்ணாமலை டென்ஷன் ஆகியிருக்கார். அதனால்தான், ‘கட்சியை வளர்க்கத்தான் என்னை இங்கே அனுப்பினார்கள். அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்வதென்றால் வேறு ஆளை அவர்கள் நியமித்துக் ள்ளட்டும்’ன்னு செய்தியாளர்கள் சந்திப்புல அண்ணாமலை சொல்லி இருக்கார்.”

“செய்தியாளர்களை சந்திச்ச தமிழிசை சௌந்தராஜன் தனக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் கட்சி பிரமுகர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரிக்கை விட்டிருக்காரே?”

“இதன்மூலம் அவர் அண்ணாமலைக்கு எதிரான உள்கட்சி யுத்தத்தை தொடங்கிட்டதா கமலாலயத்துல பேசிக்கறாங்க. பாஜகவோட கோஷ்டி சண்டைகள் இனி கொஞ்சம் கொஞ்சமா வெளிய வரப் போகுது.”

“4 கோடி ரூபாய் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு கேசவ விநாயகம் ஆஜரானாரே… அதைப்பத்தி ஏதும் தகவல் இருக்கா?”

“சிபிசிஐடி ஆபீஸ்ல இருக்கற கண்ணாடி அறையில் அவரை கொஞ்ச நேரம் காக்க வச்சிருக்காங்க. அப்ப அவரோட நடவடிக்கைகள் என்ன? முகபாவம் என்னன்னு கண்காணிப்பு கேமரா மூலம் கவனிச்சு இருக்காங்க. விசாரணையில கேசவ விநாயகம் கொஞ்சம் பயந்து போய்தான் பதில் சொல்லத் தொடங்கி இருக்கார். ‘நீங்கள் கட்சியில் என்ன பதவியில் இருக்கிறீர்கள்? கட்சியில் உங்கள் பணி என்ன?’ன்னெல்லாம் கேட்டு அவரை சுமார் 5 மணி நேரம் விசாரிச்சிருக்காங்க சிபிசிஐடி போலீஸ். நீங்க இன்னைக்கு வராம இருந்தா, உங்களை கைது செய்து விசாரணை செய்யறதா இருந்தோம்னு அதிகாரிங்க சொன்னப்ப, கேசவ விநாயகம் ஆடிப் போயிட்டாராம்.”

”பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நீ போகலையா?”

“ஃப்ளைட் டிக்கெட் போட்டுத் தந்தார் போறேன்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...